shadow

ஞாபக மறதியா? என்ன செய்ய வேண்டும்?

மறதி ஒரு பொது வியாதியாகிவிட்டது. சில நேரங்களில் சிலர் தங்கள் பெயரையே மறந்து விடுவார்கள். மறதி பல நல்ல வாய்ப்புகளைக் கூடப் பறித்துவிடும். மறதிக்குப் பல காரணங்கள் உண்டு. மறதிக்கு பல நிலைகளும் உண்டு. சில நேரங்களில் மறதி வேறு பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். எதற்குக் கவலைப்பட வேண்டும்? எதற்குக் கவலைப்படத் தேவையில்லை? பார்க்கலாம்!

பெயர்களை மறத்தல்

கவலை வேண்டாம்: சமீபத்தில் நீங்கள் சந்தித்த நபர்களின் பெயர்கள் மறந்துபோனால் கவலை வேண்டாம். 45 வயதிற்குமேல் முன்மூளை (நினைவுகளை மீட்டெடுக்கும் பகுதி) இயற்கை யாகவே தனது வேகத்தை இழந்துவிடும்.

கவலைப்படுங்கள்: உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்கள் மறந்துபோனால் கவலைப்படுங்கள். ஏதோ பிரச்னை இருக்கக்கூடும்.

எதற்காக வந்தோம் என மறத்தல்

கவலை வேண்டாம்: ஓர் அறைக்குள் நுழைந்த பின் எதற்காக அங்கு வந்தோம் என மறந்துபோனால் கவலை வேண்டாம். மன அழுத்தம், சூழல் மாறுபாடுகள் போன்றவற்றால் இது சாதாரணமாக நடக்கும்.

கவலைப்படுங்கள்: யாரோ ஒருவரை நீங்கள் இழந்த பொருளுக்குக் காரணமெனக் குற்றம் சுமத்துகிறீர்கள்; அந்தப் பொருள் உங்களுடையதா எனத் தெரியவில்லையெனில் கவலைப்படத் தொடங்குங்கள்.

திரும்பத் திரும்பச் சொல்லுதல்

கவலை வேண்டாம்: ‘இந்தத் தகவலை ஏற்கெனவே சொல்லிவிட்டாய்’ என ஒருவர் சொல்லும்போது, ‘ஆமாம்… இதை ஏற்கெனவே சொல்லியுள்ளேன்; யாரிடமென்று மறந்துவிட்டது” என்று நீங்கள் நினைத்தால் கவலை வேண்டாம்.

கவலைப்படுங்கள்: ஒரே உரையாடலிலேயே திரும்பத்திரும்ப ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; ஆனால் அதை நீங்கள் உணரவில்லை எனில் கவலைப்படத் தொடங்குங்கள்.

வண்டி நிறுத்திய இடத்தை மறத்தல்

கவலை வேண்டாம்: சிலநேரங்களில் எங்கே வண்டியை நிறுத்தினோம் என மறந்துபோகும். இது உங்கள் குறுகியகால நினைவுக் குறைபாட்டால் இருக்கலாம். இது ஒவ்வொரு தனிநபருக்கும் மாறுபடும். எனவே இன்னும் கவனமாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

கவலைப்படுங்கள்: தினமும் வண்டி நிறுத்தும் இடத்தை மறந்தாலோ, உங்கள் வீட்டிற்குச் செல்லும் வழியை மறந்துவிட்டலோ கவலைப்படத் தொடங்குங்கள். ஏனெனில் அடிக்கடி பயணிக்கும் பாதைகள் மிக ஆழமாக மனதில் பதியும்.

திட்டங்களை மறத்தல்

கவலை வேண்டாம்: இரவு திரைப்படத்திற்குச் செல்வது, விடுமுறைக்கு வெளியே செல்வது போன்ற திட்டங்களை மறந்து, திரும்பக் கேட்கின்றீர்களா? கவலை வேண்டாம். சில நேரங் களில் ஒரு விஷயத்தைச் சரியாகக் கவனிக்காமல் இருந்தால் மூளையில் பதிவாகாது. நடுத்தர வயதிற்குப்பின் ஹிப்போகாம்பஸ் (மூளையில் புதிய தகவல்களைச் சேமிக்குமிடம்) மெதுவாக வேலை செய்வதே இதற்குக் காரணம்.

கவலைப்படுங்கள்: ‘திட்டம் என்ன?’ எனக் கேட்கிறீர்கள்; அரைமணி நேரத்துக்குப் பின் மீண்டும் கேட்கிறீர்கள்; எந்த நினைவும் இல்லை யெனில் கவலைப்படத் தொடங்குங்கள். இது மன அழுத்தம், கவனக்குறைவாகக் கேட்பது போன்றவற்றாலும் நிகழலாம்.

பழைய நினைவுகளை மறத்தல்

கவலை வேண்டாம்: நேற்று இரவு என்ன சாப்பிட்டோம் என மறந்துபோனால், கவலை வேண்டாம். வழக்கமாக நடைபெறும் நிகழ்வுக ளைப் பெரிதாக நாம் மனதில் இருத்திக் கொள்வதில்லை

கவலைப்படுங்கள்: நேற்று என்ன நடந்தது என முழுமையாக மறந்து வெறுமையாக இருந்தால், உங்கள் சிறுவயது நினைவுகள் மறந்துபோனால் கவலைப்படத் தொடங்குங்கள். குழந்தைப்பருவ நினைவுகளை நாம் அடிக்கடி நினைவு கூர்வோம். அதனால் அவை மிக ‘ஆழமான நினைவுகளாக’ பதிவு செய்யப்படுகின்றன. அவற்றை மறப்பது அரிதானது.

Leave a Reply