shadow

சொந்த வீடு வாங்குவது என்பது சரியான முடிவா?

பல சாதக பாதகங்களை அலசிய பின் வீடு வாங்கும் கனவை முன்னெடுத்து செல்வது என்பது நம் வாழ்கையில் எடுக்கும் மிகப் பெரிய முடிவாகும். பெரிய முதலீடு என்பதால் முழு தொகையையும் செலுத்தி வீடு வாங்குவது என்பது சாத்தியமற்றது. வீட்டுக் கடன் வாங்கி கனவை மெய்யாக்கும் அதே தருணத்தில் நீண்ட கால மாதத் தவணை நம்மை கட்டிப்போட்டு விடும். மாதத் தவணையில் வீடு வாங்குவதா அல்லது வாடகை வீடே சிறந்ததா?

மாதாமாதம் செலுத்தும் வாடகை பணத்தை மாதத் தவணையாக கட்டினால் சொத்தும் சொந்தமாகும் என்பதே பொதுவாக முன்வைக்கப்படும் கூற்று. கேட்பதற்கு சுலபமாக தெரிந்தாலும், அவ்வளவு எளிதானதாக இதை எண்ண முடியாது, இதில் இன்னும் நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளது என்றே நாங்கள் நம்புகிறோம்.

வீடு வாங்கும் நன்மைகளை முதலில் அறிந்து கொள்வோம்.

வரி விலக்கு

சொத்து சேர்வது மட்டுமல்லாமல், வீடு வாங்கும் பொழுது வரி விலக்கு சலுகையும் உண்டு. நீங்கள் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு பகுதி 80C கீழ் வரி விலக்கு உள்ளது.

இந்த தொகையை நீங்கள் பிற செலவினங்களுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம். இது போக இரண்டு லட்சம் வரையான வட்டி தொகையை வருமான வரி இலக்கிற்கு கழித்துக் கொள்ளலாம். இது மட்டுமல்ல! இருவர் சேர்ந்து சொத்து வாங்கியிருந்தால், இருவருமே சரி பாதியாக வீட்டுக் கடன் தவணையை கட்டுபவராயின், இரண்டு லட்சம் வரை தனித்தனியாக வருமான வரி விலக்கு கோர முடியும்.
சொத்து மதிப்பு

உபரி வருமானம்

சொந்த வீட்டை வாடகைக்கு விடும் பொழுது அதிலிருந்து வரும் வருமானத்தை வீட்டுக் கடன் தவணையை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிவர்ஸ் அடமானம்

முதுமை காலத்தில் சீரான வருமானம் பெற சொந்த வீட்டை ரிவர்ஸ் அடமானம் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சொந்த வீடு வாங்குவதே சரி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தால், வாடகை வீட்டினால் என்ன நன்மைகள் என்பதை அறிந்து கொண்ட பின் முடிவெடுங்கள்.

நினைத்ததை செயலாக்க

விரைவில் வேலை மாற்றம் நிகழும் காலமிது. வாய்புகள் பரந்து விரிந்துள்ள நிலையில் ஒரு நகரத்தில் மட்டுமே இல்லாமல் வாய்புள்ள வெளி நகரத்திலோ, வெளிநாட்டிலோ போகும் சூழ்நிலையே இன்று அதிகம். இத்தகைய சூழலில் ஒரு இடத்தில் நிரந்தரமாக குடியேற முடிவெடுக்கவில்லையெனில் சொந்த வீடு வாங்குவதை பரீசீலிப்பது நல்லது.

குறைந்த அட்வான்ஸ் தொகை

வாடகை வீட்டிற்கான அட்வான்ஸ் தொகை அதிக பட்சமாக ஆறு முதல் பத்து மாத தொகையே இருக்கும். இதுவே சொந்த வீடெனில் முன்பணம், வீட்டின் மதிப்பிற்கேற்ப 15 முதல் 25 சதவீதம் என லட்சக் கணக்கில் ஆகும்.

வீடு வாடகைப்படி

மாத சம்பளத்தில் கொடுக்கப்படும் வீடு வாடகைபடி தொகையை வருமான வரி இலக்காக திரும்பப் பெற முடியும். சொந்த வீட்டில் குடியிருக்கும் பொழுது இந்த சலுகையை பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குறைவான பராமரிப்பு செலவு

சொந்த வீடாயின் அவ்வப்பொழுது வர்ணமடிப்பது, பராமரிப்பு என செலவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். இதுவே வாடகை வீடெனில் சிறுசிறு செலவுகள் மட்டுமே இருக்கும். சொந்த வீட்டில் பதிவு, முத்திரை வரி மற்றும் சொத்து வரி, தண்ணீருக்கான வரி என மற்ற செலவினங்களும் உள்ளது.

ஆகவே சொந்த வீடா அல்லது வாடகை வீடா என அலசும் போது இரண்டிலுமே சமமான சாதகங்கள் உள்ளது. உங்களின் வருமானம், பொருளாதார நிலை, பிற கடன்கள், தேவை, சந்தை நிலவரம் என பல கோணங்களில் அலசிய பிறகு முடிவெடுப்பதே நலம், ஏனெனில் முதலீடு என்பது நன்றாக அலசி ஆராய்ந்து மேற்கொள்ளவேண்டியதல்லவா!

Leave a Reply