shadow

சர்க்கரை நோய் துறை தலைவர் சுப்பையா ஏகப்பன் பேசியதாவது:- சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும்.

உணவு, உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாரத்தில் 4 தினங்கள் காலை உணவில் சிறு தானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும். அதுபோல் தட்டைப் பயறு, பாசிப்பயறு, மொச்சை பயறு, பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுகளுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது தவிர மாவுசத்து, குறைந்த மாவு சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

குறிப்பாக இனிப்புடன் புளிப்பு, துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிக இனிப்புடைய பழங்களை தவிர்க்கலாம். அது மட்டும் இன்றி நொறுக்கு தீனி சாப்பிடும் வேளையில் பழங்களை நன்கு கடித்து சாப்பிட வேண்டும். ஜூஸ் போட்டு சாப்பிடக்கூடாது. துவர்ப்பு, கசப்பு சுவையுடைய உணவுகளை உட்கொள்ளும் போது அது சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், பிஞ்சு மாங்காய், நாவல் பழம், பலாக்காய், வாழைப்பூ உள்ளிட்ட உணவுகளில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது. பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளது இவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சாப்பிடும் உணவில் காய்கறி 50 சதவீதமும், சிறு தானியம் 30 சதவீதமும், புரதம் -கொழுப்பு 20 சதவீதமும் இருந்தால் சர்கரை நோயை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம்.