shadow

உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளது உருளைக்கிழங்கு. ருசியைத் தருவது மட்டுமில்லாமல், இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கும் நன்மை அளிக்கின்றன. குறிப்பாக சரும பராமரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

சூரிய ஒளியால் கருமை அடையும் சருமத்தை பளிச்சென மாற்றுவதற்கும், முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றுவதற்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, சூரிய ஒளியால் சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கிறது. இதில் உள்ள ‘கேடகோலேஸ்’ என்ற நொதி கரும்புள்ளிகளை நீக்குகிறது.

உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறைகள்:

உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்திப் பஞ்சு அல்லது துணியை அந்த சாற்றில் நனைத்து, முகம் முழுவதும் தடவவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவாகும்.

உருளைக்கிழங்கைக் கொண்டு பேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவதால் சருமம் பளிச்சிடுவது மட்டுமில்லாமல், அதில் இருக்கும் ஆன்டிஆக்சி டண்டுகள் முகத்தில் முதுமையான தோற்றத்தை மாற்றி, இளமைப் பொலிவைத் தருகின்றன. பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்கள் நீங்கி மிருதுவாகும்.

பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் கழித்து, முகத்தை மென்மையாக மேல்நோக்கிய வட்டவடிவில் தேய்க்கவும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவவும்.

கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்கள் முகத்தின் அழகைக் குறைக்கும். இதற்கு உருளைக்கிழங்கு சிறந்த தீர்வாக இருக்கும். உருளைக்கிழங்கை இரண்டு வட்டவடிவ வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். அவற்றின் மீது கற்றாழை ஜெல்லைத் தடவவும். இதனை கண்களின் மீது வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை எடுத்துவிட்டு முகத்தைக் கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் பளிச்சிடும்.

½ டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ¼ டீஸ்பூன் தக்காளிச் சாறு, ½ டீஸ்பூன் தேன் இவற்றை நன்றாகக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.