shadow

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது உண்மையா?

ராஜகோபுரத்தை மட்டும் வணங்கினால் போதாது. கோயிலுக்குள்ளே சென்று கருவறையில் இருக்கும் இறைவனையும் தரிசிக்க வேண்டும்.

உடல்நலக் குறைவு, முதுமை ஆகிய காரணங் களால் நடமாட இயலாதவர்கள், ‘கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க முடியவில்லையே’ என்ற தங்களது ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ள, கோபுர தரிசனம் செய்யலாம். அப்போதும் அவர் களின் மனம், கோயிலுக்குள் குடிகொண்டிருக்கும் இறைவனையே நினைக்க வேண்டும்.

ஆனால், திடகாத்திரமான உடலும் இளமையும் கொண்டிருப்பவன், ‘கோபுரத்தைத் தரிசித்து விட்டேன்; கோடி புண்ணியம் உண்டு’ என்று கருதினால் அது தவறு. அவனுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. கோபுரத்தைத் தரிசித்தாலே போதும் என்று கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்கும் மனம் இறையருளை இழந்துவிடும். அலுவல் நிமித்தமாகச் சென்றுவரும் வழியில் கோயில் கோபுரம் கண்ணில்படலாம். கிராமங் களில், மிக உயரமாக இருப்பது ராஜகோபுரம்தான். அது, நம் கண்ணில்படாமல் இருக்காது. ஆனால், இதெல்லாம் கோபுர தரிசனம் ஆகாது.

‘நான் காசிக்குப் போகப் போகிறேன். அங்கே தங்கப் போகிறேன் என்றாலே போதும். காசிக்குச் சென்று தங்கிய புண்ணியம் உண்டு!’ என்று பொருள் தரும் செய்யுள் உண்டு. அதற்காக காசிக் குப் போகத் தேவை இல்லை எனக் கருத முடியுமா? ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் இப்படித்தான். ஆன்மிகத்திலும் ஆண்டவன் வழிபாட்டிலும் பிடிப்பு ஏற்படுவதற்காக இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள் அவ்வளவே!

Leave a Reply