கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர்கள் எங்கே? மக்களவையில் தயாநிதி மாறன் ஆவேசம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சலுகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் ஆவேசமாக பேசியதாவது:

லோக்சபா உறுப்பினர் ஏதாவது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால், அது தொடர்பாக உடனடியாக சபாநாயகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்படுவதற்கான நோக்கம், அல்லது தண்டனை வழங்கப்பட்டால் அது குறித்த விவரம் ஆகியவை சபாநாயகருக்கு வழங்கப்பட வேண்டும்.

எந்த இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார், எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பாக சபாநாயகருக்கு தகவல் கொடுக்கப்பட வேண்டும். இந்த தகவல், சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்ற பிறகு, விதி எண் 229, 230 ஆகியவற்றின் அடிப்படையில் லோக்சபாவில் சபாநாயகர் அது தொடர்பான தகவலை தெரிவிக்க வேண்டும்.

இந்த அவையின் உறுப்பினர், பரூக் அப்துல்லா காணாமல் போயுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. எங்களுக்கு அது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சபாநாயகரான, நீங்கள் இந்த அவையின் பாதுகாவலர். எங்களுடைய உரிமைகளை பாதுகாக்க வேண்டியவர் நீங்கள்தான்.

இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

Leave a Reply