shadow

குழந்தைகளுக்கு எப்போது சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்க வேண்டும்?
cycle
இப்போதெல்லாம் குழந்தைகளின் பருவத்திற்கேற்ப சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் சிறிய வயதிலேயே அவர்களுக்கு சைக்கிள் ஓட்ட பழக்கி விட்டால் விரைவிலேயே பெரிய சைக்கிள்களையும் ஓட்டுவதற்கு பழக்கிவிடலாம் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இது தவறானது.

அவர்களின் வயது மனப்பக்குவம், உயரம் ஆகியவற்றுக்குத் தகுந்தவாறு படிப்படியாக சைக்கிள் ஓட்டுவதுதான் சரி. சைக்கிள் ஓட்டுவதற்கு குழந்தைகளை 5 வயது முதல் பழக்கலாம். முதலில் பாதுகாப்பான இணைப்புச் சக்கரங்கள் உள்ள சைக்கிளில் ஓட்டுவதற்கு பழக்குங்கள். எந்த சைக்கிள் ஓட்டினாலும் குழந்தைகளின் கால்கள் ஹாண்ட்பாரில் இடிக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எளிதாக சைக்கிள் ஓட்ட முடியும்.

முதலில் உங்கள் தெருவில் மட்டுமே குழந்தைகளை சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்குங்கள். அதுதான் குழந்தைக்கு பாதுகாப்பானதாக இருக்கும். பயிற்சிக்கு எப்போதும் பழைய சைக்கிள்களை பயன்படுத்துங்கள். நன்கு பழகிய பின் புதிய சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கலாம். குண்டும் குழியுமான தெருக்கள் என்றால் பிளாஸ்டிக் ஹெல்மெட் அணிந்து பழக்குவது நல்லது.

உயரம் அதிகம் கொண்ட சைக்கிள்களை ஓட்டுவதற்கு முதலிலேயே அனுமதிக்காதீர்கள். அதில் பழகினால் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டி வரும். சீட்டில் சரியாக உட்கார்ந்திருக்கிறார்களா, ஹேண்ட் பாரை சரியாக பிடித்திருக்கிறார்களா, பெடல்களில் கால்களை சரியாக வைத்திருக்கிறார்களா, முதுகை நேராக்கி தலையை நிமிர்த்தி இருக்கிறார்களா, என்பன போன்றவற்றையெல்லாம் சரிபார்த்த பின்னரே சைக்கிள் ஓட்ட அனுமதிக்க வேண்டும்.

விடியற்காலை நேரத்திலும் இரவு நேரங்களிலும் சைக்கிள் ஓட்டப் பழக்காதீர்கள். ஏனெனில் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பார்வைத் திறன் அவ்வளவு கூர்மையாக இருக்காது. 12 வயதிற்குப் பின்னர்தான் இந்த நேரங்களில் ஓட்டுவதற்கு அனுமதிக்கவேண்டும். வாகனங்கள் நடமாட்டமுள்ள சாலைகளில் ஓட்டும்போது அவர்களுக்கு சாலை விதிகளை சரியாகச் சொல்லிக் கொடுங்கள்.

Leave a Reply