’காப்பான்’ திரை விமர்சனம் : சூர்யாவின் உழைப்பை வீணடித்த கே.வி.ஆனந்த்

சூர்யா, கே.வி. ஆனந்த் இணையும் படம் என்றாலே ஹிட் என்பது திரையுலகின் ஃபார்முலாவாக இருந்து வரும் நிலையில் ‘காப்பான்’ படமும் நிச்சயம் ஹிட் தான் என ரிலீசுக்கு முன்னர் பேசப்பட்டது. ஆனால் படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் சூர்யாவின் கடினமான உழைப்பை திரைக்கதையில் ஓட்டை மூலம் கே.வி.ஆனந்த் வீணடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய திட்டமிட்டும் தொழிலதிபர் பொமன் இரானி, வில்லனின் முயற்சிகளை தடுக்கும் பாதுகாப்பு அதிகாரி சூர்யா, சூர்யாவின் பாதுகாப்பையும் மீறி மோகன்லால் கொல்லப்படுகிறார் என்பது வரை முதல் பாதி கதை. முதல் பாதியில் ஆங்காங்கே சின்னச்சின்ன டுவிஸ்டுகள் இருந்தாலும் எந்த காட்சியும் ‘அடடா’ என அசர வைக்கவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. அதேபோல் சூர்யா, சாயிஷா ரொமான்ஸ் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள காட்சிகள் வேறு. இதெல்லாம் சூர்யாவின் இமேஜுக்கு தேவையா/

இரண்டாம் பாதியில் மோகன்லால் மகன் ஆர்யா பிரதமரானதும் படத்தின் வேகம் கொஞ்சம் அதிகரிக்கின்றது. மோகன்லாலை காப்பாற்றுவதில் கோட்டைவிட்ட சூர்யா, ஆர்யாவை காப்பாற்றுவதில் ஜெயிக்கின்றார். வில்லனின் சதித்திட்டங்களை முறியடித்து இறுதியில் வில்லனை புத்திசாலித்தனமாக போட்டு தள்ளுவது படத்தின் பிளஸ்

சூர்யா உழைப்பு இந்த படத்தில் அதிகம் என்றாலும் ‘அயன்’ அளவுக்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். பிரதமரின் பாதுகாப்பாளராக இருக்கும் சூர்யா, திடீரென விவசாயியாக மாறி ஆர்கானிக் விவசாயம் செய்கிறார். அப்படியென்றால் அவர் பிரதமர் பாதுகாப்பு பணியை பார்ட் டைம் பார்க்கின்றாரா?

மோகன்லால், ஆர்யா இருவருமே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். நடிப்பில் இருவரும் அசத்தியுள்ளனர். மோகன்லாலின் நடிப்பு ஆழமானது, அழுத்தமானது என்றால் ஆர்யாவின் நடிப்பு ஜாலி மற்றும் நக்கல் கலந்தது.சாயிஷா வழக்கம்போல் ஹீரோயின் வேலையை செய்துள்ளார். பாடல்களுக்கு நடனமாடி கொஞ்சம் கதையிலும் உள்ளார்.

ஒரு படத்தின் தோல்வி வீக்கான வில்லன். இந்த படத்தில் பொமன் இரானி கேரக்டர் படுமொக்கையாக உள்ளது. பிரதமரையும் ஆளும் அரசையும் ஆட்டி வைக்கும் ஒரு தொழிலதிபரை இப்படியா காண்பிப்பது? சமுத்திரக்கனி, பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் ஆங்காங்கே தலை காட்டியுள்ளனர்.

ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இரண்டே முக்கால் மணி நேரம் என்பது மிக அதிக நீளம். அனைத்து பாடல்களையும் சாயிஷாவின் காட்சிகள், ஆர்கானிக் விவசாயம் காட்சிகளை கட் செய்து படத்தை இரண்டு மணி நேரத்திற்கு கொண்டு வந்திருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்கும்

இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒரு வலுவான வில்லன் கேரக்டரை உருவாக்காமல் கோட்டை விட்டதே படத்தின் தோல்விக்கு காரணம். ஒரே படத்தில் தஞ்சை விவசாயம், துப்பாக்கி சூடு, சமூக விரோதிகளின் ஊடுருவல் என பல விஷயங்களை தேவையில்லாமல் புகுத்தியுள்ளார். அந்த பூச்சி விஷயம் மட்டும் கொஞ்சம் ஆச்சர்யம்.

மொத்தத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால் நடிப்பை தனது வீக்கான திரைக்கதையால் இயக்குனர் வீணடித்துள்ளது வருத்தத்திற்கு உரியது

ரேட்டிங்: 2/5

Leave a Reply