shadow

கற்றலே தவம்… எழுத்தே வேள்வி!

p14a2அது 1950-களின் பிற்பகுதி! சென்னை அரசு ஓரியண்டல் கையெழுத்துப் பிரதி நூலகத்துக்கு விஜயம் செய்த காஞ்சி பெரியவர், அங்கு அமர்ந்து எழுத்துப்பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவருக்குப் பின்னால் நின்று பார்த்தார், ‘‘உன்னுடைய அட்சரங்கள் அழகு! உனக்கு ஹயக்ரீவ பெருமானின் கடாட்சம் பரிபூரணமாக இருக்கிறது’’ என்று ஆசிர்வதித்தார்.

அப்படி காஞ்சி மஹாஸ்வாமிகளால் ஆசிர்வதிக்கப் பெற்ற அன்றைய இளைஞர் நாவல்பாக்கம் ஸ்ரீராமானுஜ தாதாசார்யார் இன்று தமது சம்ஸ்கிருத சேவைகளுக்காக மத்திய அரசினால் பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்திப்பதற் காக நங்கநல்லூரில் இருந்த அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தபோதும் அவர் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தார். இந்த 88 வயதிலும் எழுதுவதில் அவருக்கு இருந்த ஆர்வம் நம்மை வியப்பில் ஆழ்த்த, கேள்விகளைத் தொடுத்தோம்.

வேத சாஸ்திரங்களைக் கற்கும் ஆர்வம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

‘‘என்னுடைய சொந்த ஊர் இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம் என்ற கிராமம். ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதிலும், வேதசாஸ்திரங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள் நிறைந்த ஊர். என்னுடைய தகப்பனார் ஸ்ரீஉ.வே.கிருஷ்ணஸ்வாமி தாதாசார்யார்; தாயார் ராஜலக்ஷ்மி. அந்த ஊர் அக்ரஹாரத்தில் எப்போதும் வேத பாராயண ஒலியும், சாஸ்திரங்களை வாசிக்கும் சப்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

அப்படியான சூழலில் வளர்ந்தபடியால், சம்ஸ்கிருத சாஸ்திரங்களைக் கற்கவேண்டும் என்கிற ஆர்வம் குழந்தைப் பருவத்தில் இருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆரம்பத்தில் என் தந்தையிடம் வேத சாஸ்திரங்கள் படித்தேன். தொடர்ந்து, நாவல்பாக்கம் அய்யா தேவநாத தாதாசார்யார் போன்ற சாஸ்திர விற்பன்னர்களிடம் சாஸ்திரங்களில் பயிற்சி பெற்று, திருப்பதியில் சேர்ந்து நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்த சம்ஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நியாய, தர்க்க, மீமாம்ஸ, வேதாந்த சாஸ்திரங்களைப் படித்து, சிரோமணி பட்டம் பெற்றேன். அதிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். விடுமுறைக் காலங்களில் கல்லூரிப் பாடங்களைத் தவிர மற்ற சாஸ்திரங்களையும், இதிகாச புராணங்களையும் நாவல்பாக்கம் அய்யா தேவநாத தாதாசார்யாரிடம் கற்றுக் கொண்டேன்’’ என்று கூறும் ஸ்ரீராமானுஜ தாதாசார்யார், சம்ஸ்கிருதம் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

சிரோமணி பட்டம் பெற்ற பிறகு முதலில் ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்ன?

‘‘சிரோமணி பட்டம் பெற்றதும் சென்னை அரசு ஓரியண்டல் கையெழுத்துச் சுவடி நூலகத்தில் சம்ஸ்கிருத நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் சேர்ந்தேன். அப்போதுதான் காஞ்சி மஹா ஸ்வாமிகளின் ஆசிர்வாதம் எனக்குக் கிடைத்தது. பின்னர் பூனாவில் உள்ள டெக்கான் முதுநிலைக் கல்லூரியில் சம்ஸ்கிருத அகராதி தொகுத்துப் பதிப்பிக்கும் பணி. தொடர்ந்து 1964-ல் திருப்பதியில் உள்ள கேந்திரிய வித்யா பீடத்தில் விரிவுரையாளர், முதல்வர் பணிகளைச் செய்தேன். அந்த வித்யாபீடம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டபோது அதன் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளேன்.’’

தங்களுடைய பணிகளுக்கு இடையிலும் எப்படி உங்களால் எழுத முடிகிறது?

‘‘எனது பணிகளை என்னுடைய எழுத்துப் பணிகளுக்கு இடையூறாக நான் ஒருபோதும் நினைப்பதே இல்லை. கடினமான நடையில் இருக்கும் சம்ஸ்கிருத சாஸ்திரங்களை கூடுமான வரை எளிமைப்படுத்தித் தரவேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்ததால், என்னுடைய பணிச் சுமைகளை நான் பொருட் படுத்தவே இல்லை’’ என்று கூறும் ஸ்ரீராமானுஜ தாதாசார்யார், வேத சாஸ்திரங்கள் சம்பந்தமான பல நூல்களை எழுதி இருக்கிறார். கங்கேசரின் தத்வசிந்தாமணி, நாகேஸரின் ஞாபகசங்க்ரஹா போன்ற நூல்களுக்கு விமர்சனங்களும், பாலபோதினி, விவரண, பாவபோதினி, பாவதீபிகா, பாலப்ரியா போன்ற பல நூல்களுக்கு வியாக்கியானங்களும், இன்னும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதி இருக்கிறார் என்பதைக் கேட்டபோது பிரமிப்பாக இருந்தது.
எண்ணற்ற பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கும் இவருடைய பல நூல்களில் காஞ்சி மஹாஸ்வாமிகளின் பாராட்டு பெற்ற நூல், 17-ம்நூற்றாண்டில் வங்காள அறிஞரான கதாதர் என்பவர் இயற்றிய நூலுக்கு இவர் எழுதிய வியாக்கியானமே ஆகும்.

‘என் குருநாதரின் கதாதரி வியாக்கியானத்தை அவர் சொல்லச் சொல்ல எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு நூல் எழுதப் படவேண்டும் என்பது காஞ்சி மஹா ஸ்வாமிகளின் விருப்பமாக இருந்தது. 1981-ல் மஹா பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தபோது, என்னுடைய குருநாதரின் பாலப்ரியா, ப்ரகாசிகா போன்ற நூல்களைச் சமர்ப்பித்து ஆசி பெறுவதற்காகச் சென்றிருந்தேன்.

அப்போது மஹாஸ்வாமிகள், வங்காளத்தைச் சேர்ந்த கதாதர் என்பவரின் கடினமான கதாதரி வியாக்கியானத்துக்கு எளிமையான வியாக்கியானத்தை ராமானுஜ தாதாசார்யார் எழுதவேண்டும் என்று அருளினார். அந்த விதத்தில் இந்த நூலை என்னுடைய குருநாதர் சொல்லச்சொல்ல நான் எழுதியதை பாக்கியமாகவே கருதுகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார், இவருடைய மாணவரும், சென்னைப் பல்கலைக் கழக சம்ஸ்கிருதத் துறை பேராசிரியராகவும் இருந்த வீழிநாதன்.

ராமானுஜ தாதாசார்யார் சம்ஸ்கிருத மொழிக்கு ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில், 1982-ம் வருடம் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டபோது வாங்க மறுத்துவிட்டார். இதற்கான காரணம் பற்றி அவரிடம் கேட்டோம்.

‘‘என் குரு அய்யா தேவநாத தாதாசார்யார் சம்ஸ்கிருத மொழிக்கு பல வகைகளிலும் சேவை செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஜனாதிபதி விருது கிடைக்கவில்லை. என்னுடைய குருவுக்கு கிடைக்காத அந்த விருது எனக்கும் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்’’ என்றார். பின்னர், அவருடைய குருவுக்கு 1984-ம் வருடம் ஜனாதிபதி விருது கிடைத்த பிறகே 1986-ம்
ஆண்டு மீண்டும் தனக்கு அளிக்கப்பட்ட ஜனாதிபதி விருதைப் பெற்றுக்கொண்டார். தன்னுடைய குரு அய்யா தேவநாத தாதாசார் யாரிடம் இவர் கொண்டிருந்த பக்திதான் இவரின் அனைத்து சாதனைகளுக்கும் காரணம் என்றே சொல்லலாம்.

இவருடைய சம்ஸ்கிருத சேவைகளைப் பாராட்டி, 2012-ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் இவருக்குச் செவாலியர் என்னும் உயரிய விருதை அளித்து கௌரவித்தது. இந்திய அரசின் சார்பில் இந்த வருடம் சம்ஸ்கிருத மொழி சேவைகளுக்கான பத்மபூஷண் விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரை ஏற்கப்பட்டு, கடந்த 12-ம் தேதி டில்லியில் நடைபெற்ற விழாவில் இவருக்கு இந்திய ஜனாதிபதி பத்மபூஷண் விருது வழங்கி கௌரவித்தார்.

ஹயக்கிரீவரின் பரிபூரண கடாட்சம் பெற்றவர் என்று காஞ்சி மஹா ஸ்வாமிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட ராமானுஜ தாதாசார்யார் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தாலும் அதற்கான பெருமிதமோ அவரிடம் சற்றும் இல்லை. காரணம், அவர் விருதுகளுக்காகவோ, பட்டங்களுக்காகவோ எதையும் செய்வதில்லை. கற்பதை தவமாகவும் எழுதுவதை வேள்வியாகவும் கொண்டு அதற்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பெரியவர் ராமானுஜ தாதாசார்யார் வணங்குதற்கும் போற்றுதற்கும் உரியவர் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply