shadow

கட்டிடங்களுக்கு கான்கிரீட் கலவை

கட்டிடம் எழும்புவதில் கான்கிரீட்டுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. கட்டிட உறுதிக்கு அடிப்படையான விஷயங்களில் ஒன்று கான்கிரீட் (தமிழில் இதை பைஞ்சுதை என்பார்கள். என்றாலும் அனைவரும் அறிந்த கான்கிரீட் என்ற வார்த்தையையே பயன்படுத்துவோம்.)

சிமெண்ட், ஜல்லி, மணல், தண்ணீர் ஆகியவற்றின் கலவைதான் கான்கிரீட். இவை எந்த விகிதத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் கட்டிடத்தின் பலம் உள்ளது.

கான்கிரீட்டின் ஸ்வெஷல் தன்மை இதுதான். நீருடன் கலக்கப்படும்போது அந்த கலவை கிட்டத்தட்ட ஒரு திரவம்போல் இருப்பதால் எதற்குள்ளும் அதனால் புக முடிகிறது. செங்கல்களின் நடுவே, முறுக்குக் கம்பிகளின் இடையே என்று நன்றாகப் புகும் தன்மை கான்கிரீட்டுக்கு இருக்கிறது. அதே சமயம் வேதியல் மாற்றம் காரணமாக காலப்போக்கில் அது திடப் பொருளாக மாறுகிறது. கல்லைப் போல கடினத்தன்மை கொண்டதாகவும், நீண்ட ஆயுள் கொண்டதாகவும் விளங்குகிறது. இதன் காரணமாகத்தான் கான்கிரீட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

கான்கிரீட்டின் தொழில்நுட்பம் ரோம சாம்ராஜ்யத்திலேயே பரவி இருந்திருக்கிறது. ரோமின் புகழ்பெற்ற கொலோசியம் (அடிமைகளை விலங்குகளுடன் போரிட வைத்த விளையாட்டு அரங்கம்) இந்த கான்கிரீட் தொழில் நுட்பத்தால் கட்டப்பட்டதுதான். கட்டிடக் கலையில் அனுபவமுள்ள ஒருவரைக் கேட்டபோது கான்கிரீட் கலவை என்பது 1:2:4 என்ற விகிதத்தில் இருந்தால் சிறப்பு என்றார். அதாவது சிமெண்ட் ஒரு பங்கு என்றால் இரண்டு பங்கு ஜல்லியும், நான்கு பங்கு மணலும் சேர்க்க வேண்டும்.

சிமெண்டின் தன்மையும் இதில் முக்கியம். இதில் பல கிரேடுகள் உள்ளன. 52 கிரேடு என்பது சிறந்தது. எனினும் பலரும் 43 கிரேடு சிமெண்டையும் பயன்படுத்துகிறார்கள். இதைவிடக் குறைவான கிரேடு கொண்ட சிமெண்ட் தவிர்க்கப்பட வேண்டும். இதில் கிரேடு என்பது உறுதித் தன்மையைக் குறிக்கிறது. சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களே அந்தச் சிமெண்ட் எவ்வளவு கிரேடு என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தரமான சிமெண்ட் பயன்படுத்தும்போதுதான் அது விரைவில் தளங்களில் ‘செட்’டாகும்.

சிமெண்ட் பயன்படுத்திய பிறகு 28 நாட்களாவது அது உறுதியடைய கால அவகாசம் கொடுக்க வேண்டும். சிமெண்டில் உள்ள கிரேடு என்பது 28 நாட்களுக்குப் பிறகு அந்த சிமெண்டின் அழுத்த உறுதி (compression strength) எவ்வளவு என்பதைக் குறிக்கிறது. கொஞ்சம் சீக்கிரமே கட்டிட வேலை நடக்க வேண்டுமென்றால், அதிக கிரேடு கொண்ட சிமெண்டைப் பயன்படுத்துவார்கள். பொதுவாக 53 கிரேடு கிமெண்ட் என்பது 43 கிரேடு சிமெண்டைவிட சுமார் 3 சதவிகிதம் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

கான்கிரீட்டில் சேர்க்கப்படும் பொருள்கள் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டால் மட்டும் போதாது. அது சீராகக் கலக்கப்பட வேண்டும். அனுபவம் வாய்ந்த விஷய ஞானம் கொண்ட தொழிலாளிகள் இதற்குத் தேவை. ஏனென்றால் சிமெண்ட் கலவையைச் சீராக உருவாக்குவது அறிவியல் மட்டுமல்ல ஒருவிதக் கலையும்கூட.

‘கான்கிரீட் பூசுவதை’ ப்ளாஸ்டரிங் என்பார்கள். மேலிருந்து கீழ், கீழிந்து மேல் என்று இதைச் சரியாகப் பூசி சுவர்கள் சமதளத்தில் இருப்பதை உறுதி செய்வார்கள். அப்படிச் சமதளத்தில் இல்லாமல் ஏற்ற, இறக்கங்கள் இருந்தால் அது பார்ப்பதற்குக் கண்களை உறுத்தும். தவிர நாளடைவில் விரிசல்களும் உண்டாகும். எனவே கான்கிரீட் கலவையும் சரியாக இருக்க வேண்டும். அதைப் பூசுவதும் சிறப்பாக இருக்க வேண்டும்.

எதுபோன்ற பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு எந்த அளவு கான்கிரீட் பூசப்படுகிறது என்பதும் முக்கியம். சுற்றுப்புறத்தில் குளோரின், சல்ஃபேட், அமிலம் போன்றவை நிறைந்த காற்றால் கட்டிடம் தொடர்ந்து சூழப்பட்டிருந்தால் அவை கான்கிரீட்டையும், இரும்புக் கம்பிகளையும் பாதிக்கக் கூடும். அதுபோன்ற இடங்களில் மேலும் தரமான சிமெண்டைப் பயன்படுத்த வேண்டும். கட்டிடம் நதிக் கரையிலோ, கடற்கரையிலோ இருந்து அது தொடர்ந்து நீரில் நனைந்தால்கூட, கான்கிரீட் தன் வலிமையைச் சீக்கிரமே இழக்கலாம். சுவர்கள் தண்ணீரைத் தங்களுக்குள் அனுமதிக்கும்போது அவை பலவீனமடைகின்றன. எனவே இதையும் மனதில் கொண்டுதான் கட்டிடக் கலைஞர்கள் சரியான கான்கிரீட்டைத் தேர்ந்தெடுப்பர்.

Leave a Reply