shadow

ஒளிரும் சுவர்களால் பிரகாசிக்கும் அறைகள்!

3வீட்டின் சுவர்களை வித்தியாசமாக அலங்கரிக்க விரும்பும் அலங்காரப் பிரியர்களுக்காக ஒரு புதுமையான அறிமுகத்தைச் செய்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த ‘தி இன்டீரியர் பீப்பிள்’ நிறுவனம். பல்வேறு உள் அலங்காரச் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் சமீபத்தில் ‘லுமினோஸ்’ (Luminos) என்ற சுவர் அலங்காரத் தயாரிப்பை வெளியிட்டிருக்கிறது. சாதாரண சுவரொட்டிகளுக்கு மாற்றாக இந்த ஒளிரும் சுவரொட்டிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்நிறுவனம்.

எப்படி ஒளிர்கிறது?

‘பாஸ்போ லுமினசென்ஸ்’ (Phospho luminescence) என்னும் நின்றொளிர்தல் என்னும் முறையைப் பயன்படுத்தி இந்த ‘லுமினோஸ்’ சுவரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. “இந்த சுவரொட்டிகள் வெளிச்சத்தில் வண்ணமயமான சுவரொட்டிகளாகவும் இருளில் பிரகாசம் வீசும் சுவரொட்டிகளாகவும் செயல்படுகின்றன. இந்தச் சுவரொட்டி தயாரிப்பில் வேதிப்பொருளான ‘பாஸ்பரஸ்’ பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால், ‘பாஸ்பரஸ்’ பயன்பாட்டால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்புகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே, இந்த சுவரொட்டியைத் தயாரித்தோம்” என்று சொல்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநர் யாமினி.

பிரகாசமான பயன்பாடுகள்

இந்த ‘லுமினோஸ்’ சுவரொட்டிகளைச் சுவர் அலங்காரம், கூரை அலங்காரம், தரை அலங்காரம், கதவு அலங்காரம் என வீட்டில் பலவிதமாகப் பயன்படுத்தலாம். “இருளிலும் அறையின் அழகை ரசிக்க விரும்புபவர்கள் இந்த ‘லுமினோஸ்’ சுவரொட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், குழந்தைகள் அறைகளுக்கு இந்தச் சுவரொட்டிகள் பொருத்தமான தேர்வாக இருக்கும். சுவரொட்டி வடிவமைப்புக்கு அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங் களையோ, சினிமா போஸ்டரையோ தேந்தெடுக்கலாம். வெளிச்சம் இருந்தால்தான் தூங்குவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்தச் சுவரொட்டிகள் மிகவும் பிடிக்கும்” என்று ஆலோசனை சொல்கிறார் யாமினி.

செலவு எவ்வளவு?

‘லுமினோஸ்’ சுவரொட்டிகளுக்குத் தேவையான பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன் தயாரிப்பு பணிகள் இங்குதான் மேற்கொள்ளப்படுகின்றன. ‘இந்த ‘லுமினோஸ்’சுவரொட்டிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 180 என்று விலை நிர்ணயித்திருக்கிறார்கள். மற்ற சுவர் அலங்காரப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இந்த விலை குறைவுதான். இந்தக் காரணத்தால், சமீபத்தில் நடந்த பொருட்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ‘லுமினோஸ்’சுவரொட்டிகளைத் தங்களுடைய வீடுகள், நிறுவன அலங்காரத்துக்காகத் தேர்ந்தெடுத் திருக்கின்றனர்” என்கிறார் அவர்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

‘தி இன்டீரியர் பீப்பிள்’ நிறுவனம் இதுவரை 55 வடிவமைப்புகளை ‘லுமினோஸ்’ சுவரொட்டிகளுக்காக அறிமுகப்படுத்தி யிருக்கிறது. இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களும் அவர்களுக்குப் பிடித்த ஒளிப்படங்களையோ, வடிவமைப்புகளையோ சுவரொட்டியாகத் தேர்ந்தெடுக்கலாம். “இந்தச் சுவரொட்டிகள் முழுக்க முழுக்க டிஜிட்டலாகத்தான் தயாரிக்கப்படுகின்றன. அதனால், எந்த ஒளிப்படத்தையும் பிரிண்ட் செய்து அறையில் ஒளிரவைக்க முடியும். ஆனால், அந்த ஒளிப்படத்தில் இருளும், பிரகாசமும் கலந்த பகுதிகள் இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

தற்போது, பெரும் பாலானவர்கள் வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் தனித்தன்மையான அலங்காரத்தை விரும்புவதால், இந்த மாதிரியான தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. தென்னிந்தியாவின் பெருநகரங்களில் இந்தச் சேவையை வழங்கிவரும் ‘தி இன்டீரியர் பீப்பிள்’ நிறுவனம் விரைவில் இந்தியா முழுக்க வழங்கத் திட்டமிட்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: //theinteriorpeople.in/

Leave a Reply