shadow

ஒரு நாள் கவர்னர்; குழந்தைகளைக் கவர்ந்த கிரண்பேடி

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தன்னை சந்திக்க வந்த குழந்தைகளையும், மாணவர்களையும் தனது சீட்டில் அமர வைத்து அவர்களை ஊக்கப்படுத்தியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுச்சேரிக்கு கவர்னராகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடிகளைச் செய்துவருகிறார். அவரது சில செயல்பாடுகளின் மீது பொதுமக்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் சிலவற்றை அவர்கள் ரசிக்கவே செய்கிறார்கள். பொதுமக்களுக்காக ஆளுநர் மாளிகையைத் திறந்து விடுகிறேன் என்று கூறிய கிரண்பேடி, பொதுமக்கள் என்னை சந்தித்து அவர்கள் குறைகளைப் புகாராக அளிக்கலாம் என்று கூறினார். அப்படி வரும் புகார்களை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார். சில புகார்களுக்கு நேரடியாக களத்துக்கே சென்று ஆய்வுசெய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

அதேபோல அவ்வப்போது பள்ளி மாணவர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபகாலமாக கிரண்பேடியை சந்திக்க குழந்தைகளும் மாணவர்களும் அதிக அளவில் ஆளுநர் மாளிகைக்கு வருகின்றனர். அதன்படி தன்னை சந்திக்க வந்த குழந்தைகளை தனது இருக்கையில் அமர வைத்து அவர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அதுகுறித்து சமூகவலைத்தளத்தில், “யாருக்குத் தெரியும்? நாளை இதே புதுச்சேரி மாநிலத்துக்கு இவர்களே கவர்னராக வரலாம். அவர்களை ஊக்கப்படுத்தவே என் இருக்கையில் அமர வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

 

Leave a Reply