shadow

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புது ஐபோன் 14 மாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2022 ஐபோன்களில் முற்றிலும் புது டிசைன் வழங்கப்பட இருக்கும் நிலையில், ஆப்பிள் இதே மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 14 சீரிசில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களில் ஆவது சிம் கார்டு ஸ்லாட் நீக்குவது பற்றி ஆப்பிள் நிறுவனம் விவாதித்து வருவதாக தெரிகிறது. மேலும் ஐபோன் 15 சீரிசில் முழுமையாக சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் ஐபோன் மாடல்களில் இ சிம் மற்றும் போர்ட்-லெஸ் மாடலை கொண்டு வருவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இ”ந்த முறை இ சிம் வழங்குவதில் ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறது. இதன் மூலம் பயனர்களை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்ப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது,” என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பெயருக்கு ஏற்றார்போல் இ சிம் என்பது டிஜிட்டல் சிம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் இ சிம் நிஜ சிம் கார்டு தேவையின்றி அதன் சேவைகளை வழங்கி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனமும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்து வருகிறது.