shadow

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் 0.25 அதிகரிக்கும்: பி.இ. கட்-ஆஃப் 0.25 குறையும்
plus-result

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேர கடந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 198-ஆக இருந்தது; இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 198.25-ஆக அதிகரிக்கும்; கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆக இருந்தது; இந்த ஆண்டு அது 197.50-ஆக அதிகரிக்கும்.

 பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்…: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கட்டாயமாக நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், நுழைவுத் தேர்வு முறையை மீண்டும் நடத்தாமல் இருப்பதற்கான சட்டப்பூர்வ முயற்சிகளை எடுக்குமாறு மத்திய அரசையும் இந்திய மருத்துவக் கவுன்சிலையும் (எம்.சி.ஐ.) தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 மேலும் நுழைவுத் தேர்வு இல்லாத வகையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் நலனைக் காக்க முயற்சி எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி இருவரும் தங்களது தேர்தல் பிரசாரத்தின்போது உறுதி அளித்துள்ளனர்.

 இதனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு இருக்காது என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

 எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்: நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில் வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

 இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் உயிரியல் பாடத்தில் 775 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டை (387 பேர்) காட்டிலும், 388 பேர் அதிகமாக இந்த ஆண்டு 200-க்கு 200 வாங்கியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 1,703 மாணவர்கள் 200-க்கு 200 வாங்கியுள்ளனர்; கடந்த ஆண்டை (1,049 பேர்) காட்டிலும், 654 பேர் அதிகமாக இந்த ஆண்டு 200-க்கு 200 வாங்கியுள்ளனர். இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 5 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 வாங்கியுள்ளபோதிலும், 200-க்கு 198 மதிப்பெண்ணை ஏராளமான மாணவர்கள் பெற்றுள்ளனர்; இதனால் எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 அளவுக்கு அதிகரிக்கும் என்று மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

 பி.இ. கட்-ஆஃப் குறைவுக்குக் காரணம் என்ன? பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 முதல் 0.75 வரை குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர். பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும் முக்கியப் பாடங்களில் ஒன்றான கணித பாடத்தில் இந்த ஆண்டு 3,361 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 பெற்றுள்ளனர்; இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை (9,710 பேர்) காட்டிலும் மிகவும் குறைந்துள்ளதால் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 பி.இ. படிப்பைப் பொருத்தவரை ஏராளமான கல்லூரிகளும் படிப்புப் பிரிவுகளும் உள்ளதால், கல்லூரி-படிப்புப் பிரிவின் கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு இந்த கட்-ஆஃப் மதிப்பெண் குறைவை மாணவர்கள் கணக்கிட்டுக் கொள்ள முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: ஒரு வாரத்துக்குள் முடிவு

 
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் குறித்து இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர், மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தித்தான் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

 2007-ஆம் ஆண்டு முதல்…: தமிழகத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு ஏதும் இன்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவம், பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒப்புதல் அளித்திருந்ததால், தமிழகத்துக்கு நுழைவுத் தேர்வு இல்லாத பாதுகாப்பு உள்ளது.

 மத்திய அரசுக்கு வலியுறுத்தல்: தமிழகத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தொழில் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடைமுறையைத் தொடர சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 காணாமல் போன கட்-ஆஃப் பரபரப்பு: உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த கட்டாய பொது நுழைவுத் தேர்வு உத்தரவு காரணமாகவும், தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாலும் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானவுடன் ஏற்படும் கட்-ஆஃப் மதிப்பெண் பரபரப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால், பிளஸ் 2 மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் போட்டி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply