shadow

உயரமாக வளர உதவும் உணவுகள், வழிமுறைகள்!

அழகுக்கும் உயரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம். அதற்கு அமிதாப் பச்சன், சத்யராஜ் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம். சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம், அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே வயதுக்கும் எடைக்கும் தகுந்த உயரத்தை ஒவ்வொருவருமே பராமரிக்கவேண்டியது அவசியம்.

உயரமாக வளர

“குழந்தைகளின் உயரம் குறைவாக இருந்தால், அதற்கு மரபணு மட்டும் காரணமாக இருக்காது. உடல் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் உயரத்தை அதிகரிக்கும் மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை (Human Growth Hormone -HGH) சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும், அதைச் சீராக வைத்திருக்கவும் சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உயரமாக வளர கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், சாப்பிடவேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்…

ஆழ்ந்த தூக்கம்

தூங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படும். அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, உயரமாக வளர, உடலுக்குப் போதிய ஓய்வு தேவை. அதிலும், வயதுக்கேற்ற தூக்கம் அவசியம். சிறு வயதினர் (0-12) தினமும் 8-11 மணிநேரமும், பெரியவர்கள் 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டால், நன்கு உயரமாக வளர முடியும்.

கால்சியம் சத்துள்ள உணவுகள்

ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எலும்புகள் வலிமையாவதற்குத் தேவை கால்சியம். பால்பொருள்கள், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகளில் கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன.

தண்ணீர் குடித்தல்

தண்ணீர்

காஃபைன், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரிக்கும்; நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

வைட்டமின் டி

கால்சியம் சத்துகளை நம் உடல் கிரகித்துக்கொள்ளத் தேவையானது வைட்டமின் டி. அதேபோல, இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியக்கூடியது. சூரிய ஒளி உடலில் படுவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிறு வயதிலேயே குழந்தைகளை வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளச் செய்தால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதாகக் கிடைக்கும்.

ஸ்கிப்பிங்

உடற்பயிற்சிகள்

குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். ஓடி, ஆடி விளையாடும் விளையாட்டுக்களில் அவர்களை அதிகம் ஈடுபடச் செய்ய வேண்டும். இதனாலும் வயதுக்கேற்ற உயரம் அவர்களுக்குக் கிடைக்கும். அதிலும் கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, கிரிக்கெட், டென்னிஸ், நடனம், நீச்சல் போன்றவற்றை விளையாடச் செய்யலாம். அதோடு, ஸ்கிப்பிங், கம்பியில் தொங்குவது போன்ற பயிற்சிகள், உயரம் கூட உதவி புரியும்.

யோகா

மனஅழுத்தம், டென்ஷன் போன்றவை உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களைத் தடைசெய்யும். ஆனால், யோகா செய்யும்போது மனஅழுத்தம் நீங்கி, மனஅமைதி கிடைக்கும். யோகா பயிற்சியில் ஈடுபடும்போது, தசைகள், எலும்புகளுக்கு வேலை கொடுப்பதால், அதுவும் உடல் வளர்ச்சிக்கு உதவும். யோகாவிலேயே உயரத்தை அதிகரிப்பதற்கான சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. இதையும் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டு, பயிற்சி செய்யச் சொல்வது, குழந்தைகள் உயரமாக வளர உதவும்.

காய்கறிகள்

புரதம்

செல்களின் வளர்ச்சிக்கு, புரதம் மிக அவசியம். எனவே, காய்கறிகள் மற்றும் பழங்களோடு பீன்ஸ், வேர்க்கடலை போன்ற புரதம் நிறைந்த உணவுகள் உயரத்தை அதிகப்படுத்தும். இவற்றோடு மீன், இறைச்சி, முட்டை, கீரை போன்ற புரதச் சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வதும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

நிமிர்ந்த நிலை

இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.

Leave a Reply