shadow

உடலில் அரிப்பு எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும்.

உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

Leave a Reply