shadow

இப்படியும் பார்க்கலாம்: குழந்தை எப்படிப் பிறக்கிறது?

1நவீன வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் பாதிப்புகள், சக்கை உணவு பழக்கம் எனப் பல்வேறு காரணங்களால் இப்போதெல்லாம் பெண் குழந்தைகள் சிலர் ஒன்பது வயதிலேயே பூப்பெய்திவிடுகிறார்கள். இவர்களுக்குப் புரியும்படி மாதவிடாயைப் பற்றி எப்படி விளக்குவது என்று தவிக்கும் தாய்மார்களுக்கு உதவுகிறது ‘மென்ஸ்ட்ருபீடியா’ (Menstrupedia) இணையதளம்.

இந்தியக் குடும்பங்களில் மாதவிடாயைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்கும் சூழல் இன்றளவும் உருவாகிவிடவில்லை. அதுவும், முதல் மாதவிடாயைப் பெண் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வது என்பதற்கான முறையான வழிகாட்டுதல் இல்லாத நிலையே நீடித்துவருகிறது. இதை மனதில்வைத்து, 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிதி குப்தாவால் உருவாக்கப்பட்டதுதான் ‘மென்ஸ்ட்ருபீடியா’. இந்த இணையதளம், மாதவிடாயைச் சுற்றிச் சுழலும் பல கட்டுக்கதைகளை அறிவியல்ரீதியான விளக்கங்களுடன் உடைத்திருக்கிறது.

படக்கதையும் மாதவிடாயும்

நான்கு ஆண்டுகளாக இந்த இணையதளம் கடந்து வந்திருக்கும் பாதை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் இவர்கள் வெளியிட்ட ‘மென்ஸ்ட்ருபீடியா காமிக்’ (Menstrupedia Comic) என்ற புத்தகம் ஒன்பது வயதிலிருந்து பதினான்கு வயதுவரையுள்ள வளரிளம் பெண்களுக்குப் பேருதவி செய்துவருகிறது.

முதல் முறை மாதவிடாயை எதிர்கொள்ளும் ஒரு பெண் குழந்தையின் மனதில் எழும் எல்லா விதமான கேள்விகளுக்கும் ‘மென்ஸ்ட்ருபீடியா காமிக்’ புத்தகம் விடையளிக்க முயற்சித்திருக்கிறது. குழந்தைகள் விரும்பும்படி மாதவிடாயை ஒரு வண்ணப் படக்கதையாக எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். வளரிளம் பெண்கள், ஆண்கள் என இருபாலினரின் உடலில் நடக்கும் மாற்றங்கள், மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது, குழந்தைகள் எப்படிப் பிறக்கின்றன, ‘சானிட்டரி பேட்’களை

எப்படிப் பயன்படுத்துவது போன்ற தகவல்களை இந்தப் படக்கதை விளக்குகிறது. அத்துடன், மாதவிடாயின்போது சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவு, வயிற்று வலியைச் சமாளிப்பதற்கான ஆலோசனைகள், மாதவிடாய் சுகாதாரம் என வளரிளம் பருவத்தினர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் காண முடிகிறது. ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி போன்ற நான்கு மொழிகளில் தற்போது கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: www.menstrupedia.com

Leave a Reply