shadow

ஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்!

criminalஇன்றைய நவீன உலகில் குற்றமில்லா சமூகம் என்ற ஒரு பகுதியோ, இடமோ எங்குமே இல்லை என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குற்றம் பல்வேறுவிதங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமைகள், ஆட்கடத்தல், நம்பிக்கை மோசடி செய்தல், கிளர்ச்சி செய்தல், கையூட்டு, அதிகார துஷ்பிரயோகம், இணையக்குற்றங்கள், பயங்கரவாதம் என பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்களையும் குற்ற நடத்தைகளையும் பற்றி அறியவும், குற்றங்களைத் தடுக்கவும், அவை சார்ந்து துப்பறியவும், குற்றநீதி மற்றும் பாதிக்கப்பட்டோரை காக்கவும் கல்வி முறைப்படுத்துதல் அவசியம். அவ்வகையில் ஓரு சமூகத்தில் கூடிவாழும் மனித இனத்தில், சிலருடைய நடத்தைகள் மட்டும் மாறுபட்டு காணப்படுவதேன் என்று சிந்தித்த சில சமூகவியலாளர்களின் பங்களிப்பே இன்று குற்றவியல் துறையாக வளர்ந்து நிற்கின்றது.

குற்றவியல் துறை கல்விமுறை சார்ந்து இந்தியாவின் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், இளநிலை-முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பு, பட்டயப் படிப்பு, மற்றும் பட்டய மேற்படிப்பு, ஆய்வு முனைவர் படிப்பு எனவும், குற்றவியல் மற்றும் குற்றநீதி அறிவியல், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல், குற்றவியல் மற்றும் தடய அறிவியல், குற்றவியல் மற்றும் சைபர் சட்டங்கள் எனவும் பயிற்றுவிக்கப் பட்டு வருகின்றன.

குற்றவியல்துறை படிப்புகளைப் பற்றி திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றநீதித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் இ.இனநல பெரியாரிடம் கேட்டோம்:

“தமிழகத்தில் குற்றவியல்துறை சென்னை பல்கலைக்கழகத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் முதுநிலை பாடமாகவும், ஆய்வு முனைவர் பட்டமாகவும், இப்பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலைப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுதவிர, முக்கிய பல பல்கலைக்கழகங்களில் இக்குற்றவியல்துறை தொலைதூரக் கல்வி வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றது.

இத்துறையில் குற்றவியல் அடிப்படை கோட்பாடுகள், தண்டனையியல் மற்றும் திருத்துதல் நிர்வாகம், காவல் அறிவியல் மற்றும் புலனாய்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்ற இளம் சிறார்கள் மற்றும் உளவியல்கூறுகள், சைபர் சட்டங்கள்,

குற்றவியல் நடைமுறை சட்டம், தண்டனையியல் சட்டம், சாட்சிய சட்டங்கள், பாதிக்கப்பட்டோரியல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள், தனியார் பாதுகாப்பு மற்றும் தனியார் துப்பறிதல், ஊடகவியல் மேலாண்மை, வங்கி குற்றங்கள் மற்றும் இடர் மேலாண்மை போன்ற பல பாடங்கள் வாய்மொழியாகவும், பயிற்சி வாயிலாகவும் கற்றுத் தரப் படுகின்றன. மேலும் நேரடி நிர்வாகப் பயிற்சி முறையில் காவல் நிலையம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், மத்திய சிறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பாதுகாப்பு மற்றும்

துப்பறிதல் நிறுவங்கள் என பல்வேறு துறைகளுக்கும் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்களைச் சிறந்த முறையில் தயார் செய்துகொள்ள முடிகிறது. இத்துறையில் பயின்று கல்வியை நிறைவு செய்யும் மாணவ மாணவியர்களுக்கு அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் மேலும் தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறை போன்றவற்றில் சுய வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளவும் வழிவகை உள்ளது.

உதாரணமாக, அரசுத் துறையில் TNPSC GROUP I மற்றும் Group II தேர்வுகளில் Dy.Superintendent of Police (DSP), ஜெயிலர், தடய அறிவியல் (Forensic Science) பணி போன்ற பதவிகளில் குற்றவியல் துறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. காவல் துறையில் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிலும், நீதிதுறையில் அலுவலக பணிகளிலும் குற்றவியல் துறை மாணவர்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றனர். அரசு சாரா நிறுவனங்களில் மேல்நிலை பதவிகளிலும், அந்நிறுவனங்களை தாங்களே நிறுவுதலிலும் முக்கியத்

துவம் பெறுகின்றனர். இன்றைய முக்கிய தேவையான தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறையிலும் (Private Security and Detective), ஊடகத்துறையின் குற்றப் பின்னணி தொடர்களிலும் (Crime Investigation Serials), வழிகாட்டுதல் மையங்களில் ஆலோசனை வழங்குதலிலும் (Counselling and Guidance) பல முக்கிய பொறுப்புகளை இத்துறையில் பயின்ற மாணவர்கள் வகித்து வருகின்றனர்.

இத்துறையின் தனிச்சிறப்பாக இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில காவல்துறைக்கான காவல் பல்கலைக்கழகங்களை தத்தம் மாநிலங்களில் நிறுவி வருகின்றன. அவ்வாறு நிறுவப்படும் பல்கலைக்கழகங்களில் குற்றவியல்துறை முதன்மை பெறுகிறது. இதுவரை இராஜஸ்தான் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் “சர்தார் பட்டேல்’ பெயரிலும், குஜராத் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் “ரக்ஸ சக்தி’ என்ற பெயரிலும் நிறுவப்பட்டுள்ளன. கேரள மாநில காவல் துறைக்கான பல்கலைக்கழகம் தற்சமயம் கட்டப்பட்டு வருகின்றது. தமிழக காவல் துறைக்கான பல்கலைக்கழகம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது.

குற்றங்கள் பெருகிவரும் இச்சூழ்நிலையில் இக்குற்றவியல் துறையின் பயன்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இத்துறையில் சேர்ந்து பயில்வதற்கு அடிப்படைத் தகுதி, ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருத்தல் ஆகும். அறிவியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தடய அறிவியல் துறையில் தங்களை சிறப்புற்றவராக ஆக்க இது ஏதுவாக இருக்கும்” என்றார்.

Leave a Reply