shadow

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.62,000 கோடி மியூச்சுவல் பண்டில் முதலீடு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதலீட்டாளர்கள் ரூ.62,000 கோடியை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கின்றனர். பங்குச்சந்தை, கடன் சந்தை உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த முதலீடு சென்றிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தையும் சேர்ந்த நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.2.20 லட்சம் கோடி மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கமான ஆம்பி தெரிவித்திருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு முதலே இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் ஏற்றம் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு பங்குச்சந்தை மற்றும் பேலண்ஸ்டு பண்ட்களில் அதிக முதலீடு வந்திருக்கிறது. பஜாஜ் கேபிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பரிக் கூறும்போது, இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். செபி மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்தான் இதற்கு காரணம் என்றார்.

கடந்த ஜூலையில் ரூ.63,504 கோடி முதலீடு மியூச்சுவல் பண்ட்களுக்கு வந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.61,701 கோடி முதலீடு வந்திருக்கிறது. கடந்த மாதத்தில் லிக்விட் பண்ட்களில் ரூ.21,352 கோடி முதலீடும், பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் ரூ.20,362 கோடி சார்ந்த முதலீடும், பேலன்ஸ்ட் பண்ட்களில் ரூ.8,783 கோடி முதலீடும், கடன் சார்த பண்ட்களில் ரூ.8,390 கோடி முதலீடும் வந்திருக்கிறது. இருந்தாலும் கோல்ட் இடிஎப்களில் இருந்து 58 கோடி முதலீடு வெளியேறி இருக்கிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக சிறிய நகரங்களில் இருந்து மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் மொத்த சொத்தில் சிறிய நகரங்களின் பங்கு 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் 42 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த நிறுவனங்கள் கையாளும் மொத்த சொத்துமதிப்பு ரூ.20.60 லட்சம் கோடியாக இருக்கிறது.

Leave a Reply