shadow

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்

studentsஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, ஜூன் 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி, விண்ணப்பத்தைப் பெறலாம்.

முன்கூட்டியே மாணவர் சேர்க்கை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் சேர்க்கையும் நடத்திமுடிக்கப்பட்டது.

அதுபோல நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன.

ஜூன் 16-ல் கல்லூரி திறப்பு: விண்ணப்ப விநியோகம் பிளஸ்-2 முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விநியோகிக்கப்பட உள்ளன. பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்த 10 நாள்களில் தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும். ஜூன் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, 16-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply