அதிமுக எம்.எல்.ஏ மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64

அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் இன்று காலை அவர் தின நாளிதழ் ஒன்றை படித்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்கள் மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், அ.தி.மு.க தொண்டர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply