shadow

அண்ணா பல்கலை. துணைவேந்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணிக்கான விண்ணப்பங்களை தேடல் குழு வரவேற்றுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 1 -ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த ஆண்டு மே 26 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் பல்கலைக்கழகத்துக்கு, முதலில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையிலும், பின்னர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலும் இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் அவை கலைக்கப்பட்டன.

அதன்பின், கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையில் மூன்றாவது தேடல் குழு அமைக்கப்பட்டது. அப்போது, சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டதால், துணைவேந்தர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறுவதை புதிய தேடல் குழு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதிக்குள், விரைவுத் தபால் மூலம் என்.கோவிந்தராஜன், ஒருங்கிணைப்பு அதிகாரி, தேடல் குழு – அண்ணா பல்கலைக்கழகம், ஆளுநர் மாளிகை, சென்னை – 600022 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கல்வித் தகுதி: தமிழக அரசின் உத்தரவுப்படி, விண்ணப்பதாரர்கள் பொறியியல், தொழில்நுட்பம் அல்லது அறிவியல் துறைகளில்
ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆசிரியர் பணியிலும், ஆராய்ச்சிப் பணியிலும் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் வெளியாகுமா?: திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் அண்மையில் நடைபெற்றன.

இந்த இரு பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தோரின் பெயர்கள்அடங்கிய பட்டியலை, அந்தந்த பல்கலைக்கழக இணையதளங்களில் முதன் முறையாக வெளியிட்டப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது.

இதில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடத்துக்கு 194 பேரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 241 பேரும் விண்ணப்பித்தனர். அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்களின் பட்டியலும் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது

Leave a Reply