shadow

அடுக்குமாடி வீடுகளில் எகிறும் செலவு


சென்னை போன்ற பெருநகரங்களின் மையப் பகுதியில் வீடு கட்டுவதற்கு நிலங்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. எனவே புறநகர்ப் பகுதிகளின் பக்கமே மக்களின் பார்வைத் திரும்பியுள்ளது. அதுவும் புறநகரிலும்கூட தனி மனை வாங்கி வீடு கட்டுவதற்கு பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகிவிடும். எனவே அடுக்குமாடி வீடுகள்தான் மக்களின் விருப்பத் தேர்வாக உள்ளது. புறநகரில் அடுக்குமாடி வாங்கும்போது உங்கள் செலவினங்கள் கொஞ்சம் அதிகமாகவும் வாய்ப்புண்டு. எப்படி?

சென்னையின் புறநகர்ப் பகுதிகள் என்பது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலும் வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் எல்லைகளிலும் வருகிறது. தற்போது சென்னை மாநகர் விரிவாக்கம் செய்யப்பட்டாலும்கூட, சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் வீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன.

பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவுதான். சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, பாதாள சாக்கடை வசதி எல்லாம் இருப்பதில்லை. இந்த அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் அடுக்குமாடி வீடு வாங்கும்போது செலவினங்கள் எகிறிவிடுகின்றன.

சாலை வசதியை விட்டுவிட்டாலும்கூட குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிகள் இல்லாததால் ஏற்படும் செலவினங்கள்தான் இது. நகர்ப்புறங்களில் மெட்ரோ குடிநீர் வசதி இருப்பதால், நகர்ப்புற மக்கள் அந்தக் குடிநீரைக் குடிக்கவும், இதர வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தியும் கொள்கிறார்கள்.

ஆனால், இந்த வசதி இல்லாத புறநகர்ப் பகுதிகளில் குடிநீரையும் காசு கொடுத்து விலைக்க வாங்க வேண்டியிருக்கும். குளிக்க, கழிவறை, துணி துவைக்க, பாத்திரங்கள் கழுவ தேவைப்படும் நீரையும் லாரி மூலம் கொண்டு வரும் தண்ணீரைதான் வாங்க வேண்டியிருக்கும்.

நிலத்தடி நீரைப் பயன்படுத்தி கொள்ளலாமே என்ற எண்ணம் உங்களுக்கு வரும்? ஆனால், பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால் எப்போதும் ஒரே சீராக அந்த நீர் கிடைப்பதில்லை. இன்னும் சில இடங்களில் பயன்படுத்த முடியாத அளவுக்கு நிலத்தடி நீர்உவர்ப்பாக இருப்பதால், அவற்றைப் பயன்படுத்தவும் முடியாது.

எனவே லாரி தண்ணீர்தான் வீட்டுத் தேவையைப் போக்க ஒரே வழி. ஒரு லோடு லாரி தண்ணீர் என்பது 12 ஆயிரம் லிட்டர். ஆறு வீடுகள் கொண்ட அடுக்குமாடி வீட்டுக்கு ஒரு லோடு தண்ணீர் வாங்கினால் அதிகபட்சமாக 4 நாட்களுக்கு மேல் தண்ணீர் இருக்காது. எனவே ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒரு முறையும் லாரி தண்ணீர் வாங்க வேண்டியிருக்கும். அப்படி வாங்கும்போது மாதத்துக்கு 7 அல்லது 8 லோடு லாரி தண்ணீர் தேவைப்படும். ஒரு லோடு லாரி தண்ணீர் சராசரியாக ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து விற்கிறார்கள். சில இடங்களில் கூடவோ குறைவாகவோ இருக்கலாம். எனவே 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை செலவாகிவிடும்.

அடுத்து, கழிவு நீர் அகற்றுவது. சாக்கடை, பாதாளசாக்கடை வசதி இல்லாவிட்டால், இந்த நீரை எப்படி வெளியேற்றுவது? வீட்டில் செப்டிக் டேங்க் அமைத்து, அதில் கழிவுநீரைச் சேமித்து பின்னர் வெளியேற்ற வேண்டியிருக்கும். பல இடங்களில் இரண்டு செப்டிக் டேங்க் வைத்திருப்பார்கள். கழிவறையிலிருந்து வெளியேறும் தண்ணீரை சேகரிக்க ஒரு செப்டிக் டேங்க் இருக்கும். சமையலறை நீர், குளியலறை நீர், துவைத்த நீரை வெளியேற்ற இன்னொரு செப்டிக் டேங்க் இருக்கும். 6 வீடுகளிலிருந்து வரும் நீர் செப்டிக் டேங்கில் சேகரிக்கப்படும் போது அதிகபட்சமாக 40 நாட்களுக்குள் நிரம்பிவிடும்.

இந்தக் கழிவுநீரை கழிவு நீரகற்றும் லாரி மூலமே வெளியேற்ற முடியும். இரண்டு செப்டிக் டேங்கில் இருந்து கழிவு நீரை எடுக்க ஆயிரம் ரூபாய் முதல் 1200 ரூபாய் முதல் செலவாகும். எனவே செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய 2000 ரூபாய் முதல்2,400 ரூபாய்வரை செலவாகிவிடும்.

பின்னர் குடிப்பதற்கு கேன் தண்ணீர் வாங்க வேண்டும். அதில் இருந்துதான் சமையல் செய்ய வேண்டும். நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு 14 முதல் 20 வரை கேன் தண்ணீர் தேவைப்படலாம். ஒரு கேன் தண்ணீரின் விலை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. குறைந்தபட்சம் 35 ரூபாய் என்று வைத்தால் 490 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை செலவாகும். அடுக்குமாடிக் குடியிருப்பு பராமரிப்புக்கு ஒரு செலவாகும். இவற்றையெல்லாம் கூட்டிப் பார்த்தால் அடுக்குமாடி வீட்டில் ஒரு குடும்பத்துக்கு 2,000 முதல் 3 ஆயிரம் வரையில் கூடுதல் செலவாகிவிடும்.

வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள் மாதந்தோறும் இ.எம்.ஐ.-யைச் செலுத்தி வருவார்கள். அந்தச் சுமையோடு இந்தக் கூடுதல் தொகையும் சேரும்போது சுமை இன்னும் அதிகமாகிவிடும். புறநகர்ப் பகுதியில் தனி வீடு எனும்போது இந்தச் செலவு மிகவும் அதிகமாக இருக்காது. அடுக்குமாடி வீட்டில்தான் செலவினம் கூடுதலாக இருக்கும். எனவே அடுக்குமாடி வீடு வாங்கும்போது அந்தப் பகுதிகளில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சுமையோடு, அந்த வசதிகள் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தித் தரும்வரை காத்திருக்க வேண்டும்.

Leave a Reply