shadow

அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கம் அவசியமா?

houseபுதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்குக் கைகொடுப்பது அடுக்குமாடி வீடுகள்தான். தனி வீட்டில் இருப்பதற்கும் அடுக்குமாடி வீட்டில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அடுக்குமாடி வீட்டுக்குள் எந்த பராமரிப்பையும் வீட்டு உரிமையாளரால் செய்துவிட முடியும். ஆனால், வெளிப்புறங்களில் சில பணிகளை தனியாகச் செய்துவிட முடியாது. குடியிருப்பில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்துதான் செய்ய முடியும்.

குறிப்பாக அடுக்குமாடிக் கட்டிடங்களில் வெளிப்புறப் பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்வது, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் யாரும் தனித்துச் செயல்பட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்து சொல்வார்கள். செலவு என்றாலும் பெரு மூச்சு விடுவார்கள். அனைவரும் ஒத்துழைத்தால்தான் பணிகள் நடக்கும் என்பதைப் பலரும் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் செல்வதைத் தடுக்க அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் அமைப்பது அவசியம். இப்படி ஓர் அமைப்பு இருந்தால் மட்டுமே குடியிருப்புகளில் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ள முடியும்.

ஆனால், பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சங்கம் என்பது கிடையவே கிடையாது. பிரச்சினை வரும்போது சங்கம் அமைக்கலாம் என்று பேசுவார்கள். ஒவ்வொருவரும் ஒரு தொகையை வங்கியில் டெபாசிட் செய்து பராமரிப்பு பணிகளைச் செய்யலாம் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் செய்ய மாட்டார்கள். உண்மையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்­றில் இரண்டு பங்கு வீடு­கள் விற்கப்பட்டுவிட்டால் சங்கம் அமைக்கப்பட வேண்டும். எல்லா வீடுகளும் விற்பனையாகிவிட்டால், அடுத்த இரு மாதங்களுக்குள் சங்கம் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், அடுக்குமாடி வீடுகளில் சங்கம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு வீட்டு உரிமையாளர்களுக்குப் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். சென்னையில் சென்ற ஆண்டு வந்த வெள்ளத்துக்குப் பிறகு பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால், செலவை பகிர்வதிலும், பராமரிப்புக்கு வேலையாட்களைப் பிடிப்பது வரை குடியிருப்பில் இருந்த ஒவ்வொருவரும் முரண்பட்டு நின்றதைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது. சங்கம் இருந்தால், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் செயல்பட வழிவகுத்திருக்கும்.

சரி, எப்போது வேண்டுமானாலும் சங்கம் அமைக்க முடியுமா? எப்போது வேண்டுமானாலும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் சேர்ந்து சங்கம் அமைக்கலாம். இதனால் பிரச்சினை ஒன்றும் இல்லை. உங்கள் பகுதிக்குட்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகி நடைமுறைகளின்படி அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தை அமைக்கலாம். புதிதாக வீடு வாங்குவோர், கட்டுநரிடம் சொல்லி அவர் மூலமாகவே புதியவர்களை அரவணைத்து வீட்டு நலச் சங்கம் அமைக்கலாம்.

பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே சங்கம் அமைக்கப்படுவதாக நினைக்கத் தேவையில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் பக்கத்து பக்கத்து அடுக்குமாடிகளுக்கு இடைவெளி விடாமல் விதிமுறைகளுக்கு மாறாகக்கூட அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன. இதுதொடர்பாக சட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டால், அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் மூலமாகவே இதை அணுகலாம். தனித்தனியாக அணுகுவது சிரமமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. எனவே உங்கள் அடுக்குமாடி வீட்டில் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் இல்லையென்றால், உடனே அமைக்கலாமே!

Leave a Reply