shadow

அடித்தளம் எப்படி அமைக்க வேண்டும்?

kattidam_2453574fகிரேடு பீம் அமைக்கும்போது இயன்றவரை தூணுக்கான கம்பிகளின் உட்புறமாக கிரேடு பீம் கம்பிகள் செல்ல வேண்டும். அதாவது கிரேடு பீம் கம்பிகளைத் தூண் கம்பிகளின் வெளிப்புறமாகச் செலுத்தாமல் உட்புறமாகச் செலுத்த வேண்டும்.

இதனால் கிரேடு பீம், தூண் பிணைப்பு மிக உறுதியாகும். சிலர் தூண் கம்பிகளின் வெளிப்புறமாகவே கிரேடு பீமுக்கான அனைத்து நீளக் கம்பிகளை வைத்துக் கட்டிவிடுவதும் உண்டு. இது மிகவும் தவறு.

இவ்வாறு செய்தால் கான்கிரீட் கம்பிகளின் பக்கவாட்டில் குறைவான அளவே இருக்கும் (கம்பியை வெளிப்புறமாக வைத்தால் கான்கிரீட் cover-ஐ கம்பி அடைத்துக்கொள்ளும்). சரியான விகிதத்தில் கான்கிரீட் கலக்கப்படவில்லை எனில் நாளடைவில் கான்கிரீட் உதிர்ந்து கம்பி துருப் பிடித்து வலிமை இழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். சில நேரங்களில் கிரேடு பீம் கான்கிரீட் இட்ட பிறகு shuttering பிரித்த உடனே கம்பி காட்சி தருவதும் உண்டு.

எனவே, தூண் கம்பிகளின் வெளிப்புறமாக இருபுற கிரேடு பீம் பக்கவாட்டுக் கம்பிகளை வைத்து கட்டக் கூடாது. கிரேடு பீம் அமைத்த பிறகு அதன் மேல் அடித்தளத்திறகான பணிகள் ஆரம்பம் ஆகும். அடித்தளம் அமைப்பதற்குச் சில தரவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீர்நிலைக்கு அருகில் இல்லாத நிலையிலும் சில இடங்களில் சாதாரண மழைக்கே வீடுகளில் தண்ணீர் புகுந்திருப்பதையும் , சில இடங்களில் பெரும் மழை பெய்தாலும் வீடுகளில் தண்ணீர் புகாதிருப்பதையும் கண்டிருக்கலாம். காரணம் என்ன? மழைதான் என்கிறீர்களா? அதுதான் இல்லை. அடித்தள மட்டம்தான் காரணம். வீடுகட்டும்போது அப்போதைய நிலவரத்தை மட்டும் கவனத்தில் கொண்டு வருங்காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் அடித்தள உயரம் அமைத்ததுதான். அப்போதைய சூழ்நிலையில் சாலை மட்டமானது. பிற்காலத்தில் சாலை மட்டம் ஏற ஏற, வீட்டின் அடித்தள மட்டம் தாழ்ந்துவிடும்.

சிலர் இந்தப் பகுதியில் வெள்ளப் பாதிப்பு கிடையாது. அதனால் அடித்தள உயரம் குறைவாய் இருக்கலாம் எனக் குறைந்த உயர அடித்தளம் அமைக்கின்றனர். ஆனால் சாதாரண இடங்களில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சாலைகள் புதிதாக அமைக்கப்படுகின்றன.

வருடத்துக்கு ஒருமுறை சாலைகள் புதிதாக அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் முக்கியப் பிரமுகர்கள் செல்லும் சாலைகள் அடிக்கடிச் சீரமைக்கவோ அல்லது புத்தாக்கம் செய்யவோ படுகின்றன. எனவே மக்கள் வருங்காலச் சாலை மட்டத்தைக் கவனத்தில் கொண்டு அடித்தள உயரம் அமைத்தல் நன்று.

அடுத்தாக நீர்நிலைக்கு அருகில் வீடுகட்டுவோரும் அடித்தள உயரத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். வெள்ளம் வந்தால் ஓரிரு நாட்களில் வடிந்து விடும். ஆனால் தேங்கிய நீர் நீண்ட நாடகள் இருக்கும். எனவே அடித்தள உயரம் குறைந்தது இருபது வருடங்களாவது உங்களுக்குச் சவுகரியமாக இருப்பதுபோல் அமைத்துக்கொள்ளுங்கள்

Leave a Reply