shadow

அடிக்கடி விக்கினால் ஆபத்தா?

வேக வேகமாகச் சாப்பிடும்போது விக்கல் வரும். விக்கல் வந்தவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று அதை முயற்சி செய்பவர்களும் உண்டு. எப்போதாவது விக்கல் வந்தால் பிரச்னை இல்லை. ஆனால், சிலருக்கு அடிக்கடி விக்கல் வந்துகொண்டே இருக்கும். தண்ணீர் குடித்தாலும் சரியாகாது. ஏன் இப்படித் தொடர்ந்து விக்கல் வருகிறது? அடிக்கடி விக்கல் வந்தால் என்ன பிரச்னை? இதற்கு என்ன தீர்வு?

விக்கல் ஏன்?

நுரையீரல் மற்றும் இதயம் உள்ள மேல் பகுதியையும் வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் சுவருக்கு உதரவிதானம் (diaphragm) என்று பெயர். இதில் ஏற்படும் இடைஞ்சல்தான் விக்கலுக்குக் காரணம். நாம் சுவாசிக்கும்போது மார்புத் தசைகள் விரிவடைகின்றன. வயிறு, வழக்கத்தை விடச் சற்று அதிகமாக விரிவடையும்போது, நெஞ்சுப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் இடைப்பட்ட உதரவிதானம் சற்று விரிவடைந்து, செயல்பட முடியாமல் தடைப்படு கிறது. அப்போது, அந்தப் பகுதியில் ஏற்படும் அசௌகரிய உணர்வால் விக்கல் ஏற்படுகிறது.

எப்போது விக்கல் வரும்?

சாதாரண விக்கல்: அதிகமாக அல்லது வேகமாகச் சாப்பிடுவது, இடைவேளை இன்றித் தொடர்ந்து தண்ணீர் பருகுவது, குளிர்பானங்களை அருந்திவிட்டு, உடனே சூடான பானங்களை எடுத்துக்கொள்வது போன்றவை சாதாரண விக்கலை ஏற்படுத்துகின்றன.

தொடர் விக்கல்: தொடர் விக்கல் ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். சிறுநீரகச் செயலிழப்பு, மூளைக் கோளாறு போன்ற நோய்கள் ஏதேனும் இருந்தால் தொடர் விக்கல் ஏற்படும். எனவே, தொடர் விக்கல் பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

பாதிப்புகள்

நுரையீரல் கோளாறு, மூளைக் கோளாறு மற்றும் ரத்த அணுக்கள் அதிகமாக இருப்பது போன்றவற்றின் வெளிப்பாடாக ஒருவருக்குத் தொடர் விக்கல் ஏற்படக்கூடும். எனவே, பிரச்னையைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிப்பது அவசியமாகும். சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளாது இருக்கும்போது, சில நேரங்களில் அவர்களுக்கு மாதக்கணக்கில் இதுபோன்ற விக்கல் ஏற்படும். அதனால், உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தீர்வுகள்

திடீரென்றோ, மிகவும் அரிதாகவோ தொடர் விக்கல் வருவது உடலின் பொதுவான ஒரு செயல்பாடு. இதற்குச் சிகிச்சையோ மாத்திரை, மருந்துகளோ தேவை இல்லை.

தண்ணீர் அருந்துவதால் விக்கல் நிற்பது இல்லை. தண்ணீர் அருந்தும்போது ஏற்படும் கவன மாற்றமே விக்கலை நிறுத்துகிறது.

மிகவும் மெதுவாக நீரை அருந்தும்போது விக்கல் நிற்கும்.

விக்கலை சரிசெய்யச் சிலர், ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முயற்சி செய்வார்கள். இது தவறு. இதய நோயாளிகள் இந்த முறையை முயற்சி செய்ய வேண்டாம். இதனால், மாரடைப்பு போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும். விக்கல் எடுப்பவர் தன் கவனத்தை வேறு ஏதாவது வேலையில் திசைத்திருப்பிக்கொள்வது விக்கலைத் தற்காலிகமாகத் தடுக்கும்.

விக்கல் தொடர்ச்சியாக வந்து, அதுவே ஒரு நோயாக மாறினால், அதைக் குணப்படுத்த மாத்திரைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிக்கான உணர்வுநீக்க மருந்து எனப்படும் லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதன் மூலம், வயிற்றின் செயல்பாடுகள் தற்காலிமாக நிறுத்திவைக்கப்படும். விக்கல் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது மிக மிக அவசியம்.

விக்கலைத் தவிர்க்க…

அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்ளக் கூடாது. பாதி வயிறு நிரம்பும்வரைதான் சாப்பிட வேண்டும்.

குளிர் மற்றும் சூடான பானங்களை, ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இடைவெளியின்றி, வேகமாக உணவை எடுப்பதால் விக்கல் ஏற்படுகிறது. எப்போதுமே பொறுமையாகச் சாப்பிட வேண்டும்.

பெரும்பாலான நேரங்களில் இவையே ஒருவருக்கு நீண்ட விக்கலைத் தரும். நீண்ட விக்கலானது அடிக்கடி நிகழாமல் பார்த்துக்கொண்டாலே பிரச்னையில் இருந்து ஒருவர் விடுபடலாம்.

Leave a Reply