வீட்டுக்கடனை முன்கூட்டியே அடைக்க போகிறீர்களா? அதற்கு முன் இதை படியுங்கள்

வீட்டுக்கடனை முன்கூட்டியே அடைக்க போகிறீர்களா? அதற்கு முன் இதை படியுங்கள்

சிலர் வீடு கட்ட நீண்ட கால தவணையில் கடன் வாங்கிவிட்டு பணம் கிடைத்தவுடன் வீட்டுக்கடனை முழுவதுமாக அடைக்க முடிவு செய்வார்கள். அவர்களுக்கு இந்த கட்டுரை உதவும்

வீட்டுக்கடனை முன்கூட்டியே அடைக்கும்போது வங்கிகளிடம் இருந்து என்னென்ன ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். வீட்டுக்கடன் வாங்கியபோது வங்கி ஒரு ரசீதைக் கொடுக்கும். அதில் என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஒரிஜினல் மனைப் பத்திரம், தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், விற்பனைப் பத்திரத்தின் நகல் உள்ளிட்டவை வங்கி ரசீதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் வங்கி திருப்பிக் கொடுத்திருக்கிறதா என்பதைக் கவனமாகச் சரிபார்த்துப் பெற வேண்டும்.

கடனை முன்கூட்டியே அடைக்கும்போது பாக்கி அசல் தொகை எவ்வளவு, வட்டித் தொகை எவ்வளவு என்பதை எழுத்துப்பூர்வமாக வங்கியிடம் இருந்து வாங்கிக்கொள்வது அவசியம். அந்தத் தொகையை டிமாண்ட் டிராப்ட் மூலம் வங்கிக்குக் கொடுப்பது நல்லது. இது நமக்குப் பாதுகாப்பும்கூட.

அசல் தொகை, வட்டித் தொகையைத் தவிர வேறு எந்த விதக் கட்டணமும் வங்கிக்குச் செலுத்தத் தேவையில்லை. வீட்டுக் கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்தி வந்தபோது எப்போதாவது பணமில்லாமல் காசோலை திரும்பியிருக்குமேயானால், அதற்கான அபராதக் கட்டணத்தை வங்கி விதித்திருக்கலாம்.

அதைத் தவிர வேறு சேவைக் கட்டணங்கள் ஏதும் கிடையாது. உங்கள் வீட்டுக் கடன் கணக்கில் எவ்விதப் பாக்கித் தொகையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்வது நல்லது.

வங்கி திருப்பிக் கொடுத்த ஆவணங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டு அதில் வாடிக்கையாளரும் வங்கி அதிகாரியும் கையெழுத்திட்டு அதன் படிவத்தை வைத்துக்கொள்வது இரு தரப்புக்கும் நல்லது.

Leave a Reply