லட்சக்கணக்கில் கட்டண கொள்ளை: தனியார் மருத்துவ கல்லூரியின் அதிரடியால் மாணவர்கள் அதிர்ச்சி

லட்சக்கணக்கில் கட்டண கொள்ளை: தனியார் மருத்துவ கல்லூரியின் அதிரடியால் மாணவர்கள் அதிர்ச்சி

நீட் தேர்வு காரணமாக மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவக்கல்லூரிகள் சில, இதர கட்டணம் என்ற வகையில் லட்சக்கணக்கில் வசூல் செய்வதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர்ந்தால் 13,600 ரூபாய் கட்டணமும், அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 3,85,000 முதல் 4,00,000 ரூபாய் வரை கட்டணமும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தற்போது தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடம் கூடுதலாக ரூ.2.25 லட்சம் இதரக் கட்டணம் என்ற பிரிவில் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது: தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றிருந்தாலும், அவர்களுக்கு இடம் கிடைக்காமல் இதர மாநில மாணவர்களே குறிப்பிடத்தக்க அளவில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம்பிடித்திருக்கிறார்கள். சரி, கிடைத்த இடத்தில் சேரலாம் என சுயநிதிக் கல்லூரியில் சேர்ந்தால், கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே `இவ்வளவு ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்’ எனத் தனியே பாண்ட் பேப்பரில் எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். இதன் மூலம் அரசு நிர்ணயித்த தொகையைவிட ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அதிக அளவில் செலுத்தவேண்டியிருக்கிறது. இதைத் தவிர, அரசு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் பெறும் நிலையில் ஐந்து முறை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்கள்’ என்று கண்ணீருடன் கூறினர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி சேர்க்கை குழுவின் செயலாளர் செல்வராஜ் அவர்கள் கூறியபோது, ‘அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி தவறு. இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கக்கத்தில் புகார் தெரிவித்தால், கல்லூரிமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply