shadow

ரோபோக்களுடன் வாழ நீங்கள் தயாரா?

புத்தாண்டு பிறந்ததுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில், சி.இ.எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி முக்கியமானது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நுகர்வோர் உலகில் வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொழில்நுட்பச் சாதனங்கள் மற்றும் அவற்றின் முன்னோட்ட மாதிரிகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு வரை இந்தக் கண்காட்சியில் பெரிய சைஸ் ஸ்மார்ட் டிவிகள், தானியங்கி கார்கள், ஆபரண வகை கணினி சாதனங்கள் போன்றவை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு கண்காட்சியில், பலவகையான ரோபோக்கள் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

ஐன்ஸ்டீன் ரோபோ

காபி போடும் ரோபோ, துணி மடித்து வைக்கும் ரோபோ, விளக்குகளைப் போட்டு அனைக்கும் ரோபோ, தினசரி வேலைகளைச் செய்யும் சேவக ரோபோ எனப் பலவித ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மனிதர்களைப் போலவே தோன்றும் ரோபோக்கள் கவனத்தை ஈர்த்ததாகவும், அதிலும் குறிப்பாக விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போலவே தோன்றும் ஆண்ட்ராய்டு ரக ரோபோ அற்புதமாக இருப்பதாகப் பல தொழில்நுட்ப இதழ்களின் இணையதளங்கள் குறிப்பிடுகின்றன‌.

தொழில்நுட்ப இணையதளமான ‘மாஷபிள்’, ஐன்ஸ்டீன் ரோபோ பற்றி தனியாகவே விரிவாக எழுதியிருக்கிறது. ஐன்ஸ்டீன் என்றதும் சார்பியல் கோட்பாடு போன்றவை நினைவுக்கு வருவது போலவே அவரது தலைமுடி, அவர் நாக்கை நீட்டும் விதம் உள்ளிட்ட அம்சங்களும் நினைவுக்கு வரும். இத்தகைய அம்சங்களுடன் ஐன்ஸ்டீனை கச்சிதமாக நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த ரோபோவை ஹாங்காங்கைச் சேர்ந்த ‘ஹான்சன் ரோபோட்ஸ்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பேராசியர் ஐன்ஸ்டீன் எனும் பெய‌ரிலான இந்த ரோபோ, வை‍ ஃபை வசதி கொண்டுள்ளது. இந்த‌ ரோபோ கற்றலுக்கு உதவும் செயலியுடனும் இணக்கப்பட்டுள்ளது.

மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோக்களைத் தயாரிப்பதற்காக அறியப்படும் ஹான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஐன்ஸ்டீன் ரோபோ அந்த மகா விஞ்ஞானியின் ஐம்பதுக்கும் மேற்பட்ட முக உணர்வுகள் மற்றும் செய்கைகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. ஐன்ஸ்டீன் தொடர்பான தகவல்களையும் தெரிவிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

வீடுகளை நோக்கி…

செயற்கை நுண்ணறிவை மேலும் திறன் மிக்கதாக ஆக்குவது மற்றும் மக்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்ள வைப்பதே எங்கள் இலக்கு என்கிறது ஹான்சன் நிறுவனம். ரோபோ ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ மனிதர்களுடன் உரையாடுவதோடு அவர்களின் பழக்க வழங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெரூசலேம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரோபோ ஐன்ஸ்டீனை ஹான்சன் உருவாக்கியுள்ளது.

ஐன்ஸ்டீன் தவிர ஜிபோ, குரி, பாரீஸ்டா, அரிஸ்டாட்டில், ஓலி, ஹப், ஏர்பாட், ரோபோமோவர் உள்ளிட்ட ரோபோக்களும் இந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியுள்ளன. இவை எல்லாமே, மனிதர்களின் அன்றாடப் பணிகளில் ஏதோ ஒரு வகையில் உதவி செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை ரோபோக்கள் வருங்காலத்தில் வீடுகளை நோக்கிப் படையெடுக்க இருப்பதாக வல்லுந‌ர்கள் சொல்கின்றனர். மனிதர்களுடன் உரையாடி கற்றுக்கொள்ளக்கூடிய ரோபோக்கள், அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு செயல்படக்கூடிய உதவியாளர் ரோபோக்கள் எதிர்காலத்தில் சகஜமான‌ பயன்பாட்டிற்கு வரும் என்றும் கணிக்கின்றனர். ரோபோ எதிர்காலத்திற்கு நீங்கள் தயாரா?

Leave a Reply