shadow

ரிலையன்ஸ் முதல் ரிசர்வ் வங்கி வரை…! -உர்ஜித் பதவியை உறுதி செய்த 8 காரணங்கள்

8இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார் 52 வயதான உர்ஜித் பட்டேல். ‘ தனியார் வங்கிகளை உருவாக்குவது தொடங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுப்பது வரையில் உர்ஜித் பட்டேலின் செயல்பாடுகள் திகைக்க வைக்கின்றன’ என அச்சப்படுகின்றனர் வங்கி ஊழியர்கள்.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கு எதிராகப் பொதுவெளியில் பகிரங்கமாகப் பேசியதால், பா.ஜ.க மேலிடத் தலைவர்களின் அதிருப்திக்கு ஆளானார் ரகுராம் ராஜன். மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் தாத்ரி சம்பவமாக இருந்தாலும் ராஜனின் பேச்சுக்கள் அதிர்வலையை ஏற்படுத்தின. இந்நிலையில், புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல், சுபிர் கோகர்ன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வந்தன. முடிவில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவியில் இருந்த உர்ஜித் பட்டேல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் ரிசர்வ் வங்கி தலைமைப் பொறுப்பு குறித்த நீண்டநாள் சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

” ரிசர்வ் வங்கி ஆளுநர் சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. ஆனால், உர்ஜித் பட்டேலின் நியமனம் பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்கிறது. மாணவர்களிடம் இருந்து கல்விக்கடன் வசூலிக்கும் பணியில் முனைப்போடு இறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். இதனை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஸ்டேட் வங்கி மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த உத்தரவை வழங்கியதில் உர்ஜித்தின் பங்கு மிக முக்கியமானது” என ஆதங்கத்தோடு தொடங்கினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்(தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன். தொடர்ந்து சில விஷயங்களைப் பட்டியலிட்டார்.

1. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒத்துப் போகிறவர்கள் மட்டுமே ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகிக்க முடியும். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயத்தை நோக்கி அழைத்துச் சென்றதில் ரகுராம் ராஜனுக்கு பங்கு இருக்கிறது. அதற்கு சிறிதும் சளைத்தவரல்ல உர்ஜித் பட்டேல். லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் பி.ஏ., பட்டம் பெற்றபின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் எம்.பில் முடித்தார். இதன்பிறகு, யேல் பல்கலைகழக பொருளாதாரப் பிரிவில் ஆராய்ச்சிப் பட்டமும் முடித்திருக்கிறார். இதையடுத்து, ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச பன்னாட்டு நிதியத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார். குஜராத் மாநிலத்தின் பெட்ரோலியத் துறை தலைவர் பதவியைப் பெற்றபோது, அப்போது முதல்-அமைச்சராக பதவியில் இருந்தார் மோடி. அப்போதிருந்தே மோடியுடன் மிக நெருக்கமானார் உர்ஜித். ‘ பா.ஜ.கவின் கொள்கைகளோடு ஒத்துப் போகிறவர்’ என்பதாலேயே ஆளுநர் பதவிக்கு வந்திருக்கிறார்.

2. பல தனியார் வங்கிகளில் ஆலோசகராகப் பணிபுரிந்திருக்கிறார் உர்ஜித். ஐ.டி.எஃப்.சி என்ற தனியார் வங்கியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல் இயக்குநர் பொறுப்பில் இருந்திருக்கிறார். தனியார் வங்கிகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பவர். தற்போது புதிதாக அனுமதி வழங்கப்பட்ட பத்து பேமண்ட் வங்கிகளின் பின்னணியில் உர்ஜித் இருக்கிறார்.

3. ஸ்டேட் வங்கி கமிட்டியில் இருந்தபோது, ஸ்டேட் வங்கிகளை இணைப்பது உள்பட பல விஷயங்களுக்கும் மூல காரணமாக உர்ஜித் இருந்தார். ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடைவெளி உருவானதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். இதை ஊழியர் விரோதப் போக்கு என்றே பார்க்க வேண்டியுள்ளது. பேமண்ட் வங்கி பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தார். முந்தைய காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பொறுப்பு வகித்தவர் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டேட் வங்கி வழங்கிய கல்விக் கடனை ரிலையன்ஸ் வசூலிக்கும் என்ற முக்கிய முடிவு, இவர் போர்டில் இருந்போதுதான் எடுக்கப்பட்டது. ரகுராம் ராஜன் ஒருவகையில் ஜனநாயகவாதியாக இருந்தார். உர்ஜித்திடம் அதை எதிர்பார்க்க முடியுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

4. கென்ய நாட்டில் பிறந்த உர்ஜித் பட்டேலுக்கு 2013-ம் ஆண்டில்தான் இந்திய பாஸ்போர்ட்டே கிடைத்தது என்ற தகவலும் சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரையில், புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் மற்றும் புதிய தனியார் வங்கிகளை ஆதரிப்பவர்கள்தான் பதவியில் நீடிக்கின்றனர். அந்தவகையில், ‘ அரசு வகுத்திருக்கும் பாதையே தொடரும்’ என்பதையே இந்த நியமனம் எடுத்துக் காட்டுகிறது.

5. புதிய ஆளுநருக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. பணவீக்கத்தை அமெரிக்காவைப் போல ஒரு சதவீதம் அளவுக்குக் கொண்டு வர முடியுமா? டென்மார்க், நெதர்லாந்து நாடுகளில் 98 சதவீத மக்களுக்கு வங்கிச் சேவை சென்று சேர்ந்திருக்கிறது. நமது நாட்டில் 50 சதவீத இளைஞர்களுக்குத்தான் வங்கிக் கணக்கே இருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் இதை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா?

6. பிரிக்ஸ் குழுவில் உள்ள நாடுகளில் பிரேசில், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு நாற்பது வங்கிக் கிளைகள் இருக்கின்றன. இந்தியாவில் ஏழு கிளைகள்தான் செயல்படுகின்றன. பிரிக்ஸ் நாடுகளைப் போல, வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பாரா?

7. இந்தியாவில் விவசாயக் கடன் என்பது கந்து வட்டிக்காரர்களால்தான் அதிகளவில் கொடுக்கப்படுகிறது. விவசாயக் கடன் கிடைக்காததால், மோடி ஆட்சியிலும் தற்கொலை விகிதம் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுப்பதற்கு முயற்சி எடுப்பாரா?

8. பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றுத் திருப்பித் தராத தனியார் நிறுவனங்களின் பட்டியலை அரசு வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலை அவர் வெளியிடுவாரா? தனியார் நிறுவனங்களிடம் இருந்து வராக்கடனை வசூலிக்க சட்டத் திருத்தம் கொண்டு வருவாரா? 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் 498 தனியார் வங்கிகள் திவாலாகிவிட்டன. இந்தியாவில் தனியார் வங்கிகள் பெருகுவதை தடுப்பாரா? இந்தச் சவால்களை எதிர்கொண்டு சீர்திருத்தம் கொண்டு வந்தால்தான், சிறந்த கவர்னராக உர்ஜித்தை ஏற்றுக் கொள்ள முடியும்” என்றார் தீர்மானமாக.

Leave a Reply