shadow

ராமானுஜர் கீதையை பற்றி பக்தனுக்கு உணர்த்திய உண்மை

ராமானுஜர் ஒரு ஊரில் 18 நாட்கள் கீதை பற்றி சொற்பொழிவு நடத்தினார். ஊருக்கு கிளம்பும் நாளில் ராமானுஜரை பக்தர் ஒருவர் காண வந்தார்..

“சுவாமி ! கீதை பற்றிய உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. பகவானை அடைய வேண்டும் என்றால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்ற உங்கள் பேச்சை நான் மதிக்கிறேன். நானும் என் குடும்பம், பணம் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களோடு வருகிறேனே” என்று அனுமதிக்கேட்டார்.

உடனே ராமானுஜர் “18 நாட்கள் கீதை சொல்லியும், இன்னும் உம்மைத் திருத்த வேண்டியிருக்கிறதே” என்று பதிலளித்தார்..

கேள்வி கேட்டவர் அதிர்ந்து போனார். “கீதை சொல்வதை கடைப்பிடிப்பதாகத்தானே இவரிடம் சொன்னோம். இவர் இப்படி சொல்கிறாரே” என நினைத்தவாறே குழம்பினார்.

அவரது குழப்பத்தை புரிந்து கொண்ட ராமானுஜர், “கீதை சொல்வதை நீர் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அவரவர் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமையை கர்மாவை சரியாக செய்ய வேண்டும். உமக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். நீர் சந்நியாசியாகிவிட்டால் அவர்களை காப்பாற்றுவது யார்? அவர்களை பகவான் பார்த்துக்கொள்வாரென்று நீர் சொல்லலாம்.

உண்மையும் அதுவே.. ஆனால் பகவான் உமக்கு விதித்த கடமையில் இருந்து தவறுகிறீரே! எல்லா கடமைகளையும் விட்டுவிட்டு நீ என்னை பின்பற்று” என்று கிருஷ்ணர் சொன்னதன் அர்த்தம் இதுவல்ல.உன்னால் செய்ய முடியாத தர்மங்களான கடமைகளை விட்டுவிடு என்று தான் அர்த்தம். எனவே, நீர் என்னுடன் சந்நியாசியாக வர வேண்டாம்” என்றார்.

பக்தர் உண்மையை உணர்ந்து ராமானுஜரின் திருவடியை வணங்கினார்.

Leave a Reply