ரவுடி மீது துப்பாக்கி சூடு: 2 போலீசாரை வெட்டி விட்டு தப்பியதால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி நடவடிக்கை

அம்பத்தூர்:

சென்னையில் ரவுடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தினமும் வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் செல்லும் சந்தேக நபர்களை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் போலீசார் அவர்களில் குற்றவாளிகள் யாராவது இருந்தால் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20-ந்தேதி அன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சூர்யா என்கிற பெண்டு சூர்யா போலீசில் சிக்கினான். அவனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர்.

அப்போது ரவுடி சூர்யா திடீரென போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டான். தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கரின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சூர்யா தப்பி ஓடி விட்டான்.

சென்னை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி சூர்யா மற்றும் அவனது கூட்டாளிகளான கவுதம், அஜித் ஆகிய 3 பேர் மீது அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் கவுதம், அஜித் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் சூர்யா மட்டும் தலைமறைவாக இருந்தான்.

இந்த நிலையில் சூர்யா திருவள்ளூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.