முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
aanmigam
வெப்ப கிரகம் – இதை ஜோதிடம் பாப கிரகம், சுஷக கிரகம், அசுப கிரகம் என்ற பெயர்களில் குறிப்பிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன், வெப்ப கிரகத்துடன் இணைந்த புதன் ஆகியவை வெப்ப கிரக வரிசையில் இணைந்துவிடும். வெப்ப கிரகத்தின் பலன்களும் இணைந்துவிடும்.

குரு, பாப கிரகத்துடன் இணையாத சுக்கிரன், பாப கிரகத்துடன் இணையாத புதன், வளர்பிறை சந்திரன் ஆகியோர் சுப கிரகங்கள். இதை தட்ப கிரகங்கள் என ஜோதிடம் குறிப்பிடும். வெப்பம், தட்பத்தின் இணைப்பில் காலத்தின் மாறுபாடு உருவாகும். காலம் என்று ஒன்று தனியாக இல்லை. வெப்ப-தட்பத்தின் இணைப்பில் தோன்றும் மாறுபாடு காலமாக உருப்பெறுகிறது. உலகமே வெப்ப-தட்பத்தின் கலவையில் உருப்பெற்றதுதான். உலகம் ஒடுங்கும் வேளையில் நீர்மயமாகத் தோற்றமளிக்கும். அதை ‘ப்ரளயம்’ அதாவது முடிவு என்று சொல்லும். எல்லா ஜீவராசிகளும் பரம்பொருளில் இணையும்போது, ப்ர-லயம் (ப்ரளயம்) உருவாகிறது. அந்த தட்பத்தில் சூரியனின் வெப்பம் இணையும்போது பிரபஞ்ச சிருஷ்டி ஆரம்பமாகிறது.

பரம்பொருள் முதலில் நீரைத் தோற்றுவித்தார். அதில் வீர்யத்தை (ப்ரபஞ்ச வடிவில் தென்பட வேண்டிய விதையை) சேர்த்தார். அந்த விதை வெப்பம். இவற்றின் சேர்க்கையில் பிரபஞ்சம் உருவானது என்ற புராண விளக்கம் உண்டு (அபரவ ஸஸர் ஜாதௌதாஸீ வீர்யமபாஸ்ருஜத் தடண்ட மபவத் ஹெமம் ஸஹஸ்ராம் சுசமப்ரபம்). தட்பவெப்பத்தின் இணைப்பில் உருவா னது பிரபஞ்சம் என்கிறது சாஸ்திரம் (அக்னி ஹோமாத்பகம் ஜகத்).

அக்னி – வெப்பம், ஸோமன் – தட்பம். ஒரு பொருளின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும், மாறுதலுக்கும், செழிப்புக்கும், இழப்புக்கும் காலத்துடன் இணைந்திருக்கும் வெப்பதட்பமே மூலகாரணம். ஏற்றத்தாழ்வுடன் காலத்தில் கலந்திருக்கும் வெப்ப தட்ப கலவை, பொருளின் தராதரத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. விதையிலும் அந்த இரண்டின் அம்சம் இருப்பதால், காலத்தின் தாக்கத்தில் வளரவும், செழிக்கவும், வாடவும், மறையவும் முடிகிறது. நமது உடலும் வெப்பதட்பத்தின் கலவையில் உருவானது. பஞ்ச பூதங்களின் கலவையில் உருவானது உடல் என்று ஆயுர்வேதம் கூறும் (இதிபூதமயோ தேஹ:). நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகியவற்றிலும் வெப்பதட்பத்தின் பங்குதான் செயல்பாட்டுக்குக் காரணமாகிறது.

நவகிரகங்களிலும் இயல்பை இறுதி செய்வது வெப்பதட்பத்தின் பங்குதான். அந்த இயல்பு மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் ஊடுருவி, மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு பல மாறுதல்களை ஏற்படுத்தி, துயரத்தையும் மகிழ்ச்சி யையும் உணரவைக்கிறது.

வெப்பதட்பத்தின் தாக்கம் உடலிலும் புலன் களிலும் சோர்வையும் சுறுசுறுப்பையும் ஏற்கவைத்து துயரத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துவிடும். அதுவே, உள்ளத்தில் சுணக்கத்தையும் கொந்தளிப்பையும் தோற்றுவிக்கும். பலவிதமான சிந்தனைகளுக்கு வெப்பதட்பமே காரணம். நாம் சந்திக்கும் விஷயங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது, மனதில் தோன்றி வளர்ந்த சிந்தனைதான். அந்த சிந்தனையின் தரத்தை நிர்ணயிப்பது வெப்ப தட்பங்களின் தாக்கம்.

கிரகங்கள் வாயிலாக அந்தந்த காலங்களில் வெப்பதட்பத்தின் தாக்கத்தை மதீப்பீடு செய்து, நல்லது கெட்டதை வரையறுப்பது ஜாதகத்தில் அமைந்த கிரகங்கள் ஆகும். கிரகங்கள் வெப்ப தட்பத்தின் பிரதிநிதிகள். இரண்டும் நன்மையையும் தீமையையும் செய்யவல்லன.

எந்த வெப்ப கிரகம் நன்மை யைச் செய்யும் அளவுக்கு மாறியிருக்கிறது, எந்த தட்பகிரகம் தீமையையும் உணர வைக்கும் அளவுக்கு மாறியிருக் கிறது என்பதை ஜோதிடம் வரையறுக்கும். பல பயிர்கள் வெப்பத்தில் செழிப்புற்றதாக இருக்கும். அதிக வெப்பத்தில் அழிவுற்றதாகவும் இருக்கும். அதுபோல் தட்பத்திலும் செழிப்பும் அழிவும் தென்படும். அங்கும் கலவைதான்… அதாவது, வெப்பதட்பத்தின் விகிதாசாரக் கலவைதான் முன்னேற்றத்துக்கு உதவுகிறது; பயிர்கள் முழுப்பயனை அளிக்க உதவுகிறது.

லக்னத்துக்கு உடையவன் வெப்ப (பாப) கிரகங்களுடன் இணைந்திருக்கிறான் அல்லது வெப்ப கிரகங்களின் வீட்டில் வீற்றிருக்கிறான் அல்லது 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஒன்றில் இருக்கிறான் அல்லது அவன் பிறந்த லக்னம் வெப்ப கிரக ராசியாக இருக்கிறது. அப்படி இருந்தால் அவன் உடல் ஒல்லியாக (கிருசம்) இருக்கும் என்று சொல்லும் ஜோதிடம் (லக்னேச்வரே சுஷ்கயுதெ கதைவ). அதாவது, பிணி இல்லாத பாங்கான வளர்ச்சியை ‘ஒல்லி’ என்று குறிப்பிடும்; வலிமை இழந்த ஒல்லியை அது சுட்டிக் காட்டாது. உடலில் இருக்கும் வெப்பமானது, தொங்கு சதை வளராத நிலை யில் காப்பாற்றுகிறது என்று பொருள்.

காற்றும், வெப்பமும் ஈரப்பசையை வளர விடாமல் தடுத்து விடும். காற்று ஈரப் பசையை உறிஞ்சிவிடும்; வெப்பம் அழித்துவிடும். உடலில் மாமிசம் அளவுக்கு அதிகமாக வளர்வதை தடுத்து விடும். ஒல்லியாக இருப்பது, உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் என்கிறது ஆயுர்வேதம். இன்றைக்கும் அளவுக்கு அதிகமான பருமனைச் சந்தித் தவர்கள் அடிக்கடி பிணியைச் சந்திக்கவேண்டி வருகிறது. அதை குறைப்பதற்கு காலை நேர உலா, மாலை நேர உலா என்றெல்லாம் முயற்சி எடுக்கிறார்கள்! ஆரோக் கியத்துடன் இருப்பதால், பிணி யின்றி முழு ஆயுளைப் பெற்று மகிழ்வான் என்று பொருள்.

மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகியன வெப்ப கிரக ராசிகள். இவற்றில் லக்னாதி பதி இருந்தாலோ அல்லது இதில் ஏதாவது ஒன்று லக்னமாக அமைந்தாலோ அல்லது 6, 8, 12-ல் லக்னாதிபதி இருந்தாலோ அல்லது லக்னாதிபதி வெப்ப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ பருமன் இருக்காது. ஆரோக்கியம் இருக்கும் ஆயுளும் இருக்கும் என்று பொருள். வெப்ப கிரகங்களுடன் சேர்ந்து இருப்பதில் மட்டும் ராகு கேதுவுக்கு இடம் உண்டு. மற்ற இடங்களில் அவர்களுக்கு இடம் இல்லை. ராகு கேது தட்ப கிரகங்கள் அல்ல என்பதால், வெப்பத்தில் இணைய நேர்ந்தது.

ஆணானாலும் பெண்ணானாலும் அளவுக்கு அதிகமான பருமன் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல; அவர்களது சுக்ர, சோணிதத்தின் அளவை குறைத்துவிடும். சுக்கிரம் (பிந்து) சோணிதம் (முட்டை) இந்த இரண்டின் இணைப்பில் மழலை உருவாக வேண்டும். பருமனால் அது குறைய வாய்ப்பு உள்ளதால், அதை குறையாகவே கருதுகிறது ஆயுர்வேதம்.

ஒல்லியாக இருப்பது சுறு சுறுப்பும் உத்வேகமும் பெருக உதவும். மழலைகளும் பாங்காக உற்பத்தியாகும். இன்றைக்கு, அளவுக்கு அதிகமான பருமனுடன்  இருப்பவர்கள் திருமணத்தில் இணைய முடியாமல் தவிக்கும் நிலை நிறைய தென்படுகிறது.

லக்னம் ஜல ராசி அதாவது நீர் ராசி. மீனம், கடகம், மகரம் ஆகியவை ஜல ராசியில் அடங்கும். அங்கு சுப கிரகங்கள் அமர்ந்து இருந்தால் உடல் பருமனாக இருக்கும். லக்னத்துக்கு உடையவன் ஜல கிரகமாக இருந் தாலும், சுப கிரகங்களுடன் சேர்ந்து இருந் தாலும் உடல் பருமன் இருக்கும். சந்திரனும் சுக்கிரனும் ஜல கிரகங்கள். இங்கு லக்னாதிபன் ஜல கிரகமாக இருப்பது அல்லது லக்னம் ஜல ராசியில் அமைவது, அத்துடன் சுப கிரகங் களோடு சேர்ந்து இருப்பதுவும் உடல் பருமனை ஏற்படுத்திவிடும்.

தட்ப ராசி, தட்ப கிரகம் இரண்டும் சேர்ந்து சுப கிரகங்களின் இணைப்பும் இருந்தால் உடல் பருமன் உருவாகும் என்கிறது ஜோதிடம் (லக்னாதிப: சேத் ஜலராசி ஸ்ம்ஸ்த:). கேந்திரம், த்ரிகோணம், அஷ்டமம், 1, 4, 5, 7, 9, 8 – ஆகிய வீடுகளில் பாப  கிரகங்கள் (வெப்ப கிரகங்கள்) இல்லாமலும், லக்னத்துக்கு உடையவன், குரு ஆகிய இருவரும் கேந்திரத்தில் (1, 4, 7, 10 வீடுகள்) இருக்கும் அமைப்பும் ஏற்பட்டால், உலக சுகங்களை முழுமையாகச் சுவைத்து மகிழ்வான். நூறு வயது வளர வளமான வாழ்க்கையுடன் வாழ்வான் என்கிறது ஜோதிடம் (கேந்திர த்ரிகோண நித நேஷு…).

1, 4, 5, 7, 9, 10, 8 ஆகிய வீடுகளில் சுப கிரகங்கள் அமைந்து, 2, 3, 6, 11, 12 ஆகிய வீடுகளில் அசுபகிரகங்கள் அமைந்தும் இருந்தால் நீண்ட ஆயுளும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று ஜோதிடம் சொல்லும். லக்னாதிபதி உச்சம், மூல த்ரிகோணம், ஸ்வக்ஷேத்திரம், பந்துக்ஷேத்ரம் ஆகியவற்றில் அமர்ந்தாலும், சுப கிரகங்களின் சேர்க்கை, பார்வை இருந்தாலும் நீண்ட ஆயுள் இருக்கும்; எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும். மேலும் பிறப்பில் கிடைக்கவேண்டிய அத்தனை செல்வங்களும் பெற்று வாழ்க்கை பெருமையுடன் செழிப்புற்று விளங்கும்.

பிரபலங்கள் ஜாதகத்தைக் கையில் எடுத்ததும், நீண்ட ஆயுள் இருக்கிறதா என்று ஆராய வேண்டும் என்று ஜோதிடம் சொல்லும் (பூர்வம் ஆயு: பரிஷேத பச்சாத் லஷணமாதி சேத்). ஆயுள் இருந்தால் மட்டுமே அதில் (ஜாதகத்தில்) தென்படும் யோகங்களும் பரிணாம வளர்ச்சியில் தென்படும் இளமையும், திருமணமும், மழலைச் செல்வமும், வேலைவாய்ப்பும், பொருளாதார நிறைவும், பெருமையும், புகழும் அனுபவத்துக்கு வரும். இவையெல்லாம் ஜாதகத்தில் நிறைவாக இருந்தாலும், ஜாதகனுக்கு அல்பாயுள் எனில், உணர இடமில்லாமல் மறைந்துவிடும். ஆகவே, முதலில் ஆயுளை ஆராயப் பரிந்துரைக்கும் ஜோதிடம். ஆயுள் குறைவாக இருந்தால் அனுபவமும் குறைவாக இருக்கும்.

அற்பாயுஸ்ஸு, மத்யாயுஸ்ஸு, தீர்க்காயுஸ்ஸு, அமிதாயுஸ்ஸு என்று நான்கு பிரிவுகள் உண்டு. பிறந்தவுடன் மரணமடையும் குழந்தைகளும், 12 வயது நிறையாமல் மரணத்தைச் சந்தித்த குழந்தைகளும் உண்டு. 30 வயது வரை அற்பாயுஸ்ஸு, 60 வரை மத்யாயுஸ்ஸீ, 90 வரை தீர்க்காயுஸ்ஸு, அதற்கு மேல் அமிதாயுஸ்ஸு என்கிறது ஆயுர்வேதம் (பால்யம்வய; யௌவனம் வய; வார்திதம்வய:).

விளையாட்டில் இணைந்து மகிழும் சிறு பருவம், இன்பத்தைச் சுவைத்து மகிழும் இளமைப் பருவம், சிந்தனையில் ஆழ்ந்து தவிக்கும் முதுமைப் பருவம் என்று ஆதிசங்கரர் குறிப்பிடுவார் (பாலஸ்தாவத் க்ரீடாஸக்த:…). பரிணாம வளர்ச்சியில் முப்பருவத்தை ஏற்கும் தர்மசாஸ்திரம். முப்பருவத்தையும் முழுமையாகச் சுவைப்பவன் நீண்ட ஆயுளைப் பெற்றிருக்க வேண்டும். பிறப்பின் முழுமையை அப்போது அவன் எட்டுவான்.

குடியானவன் கையில் நெல்லை எடுத்துக் கொண்டு, இது சொர்ணவி 60 நாட்களில் அறுவடையாகும்… இது சம்பான் 120 நாட்கள் தேவைப்படும்… இது கழமை 180 நாட்கள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்வான். அவன் நினைத்தது நிறைவேற… நிலத்தை உழுது செப்பனிட்டு, விதை விதைத்து முளைத்த பிறகு, அதற்குப் பாதுகாப்பும் உரமும் அளித்து கண்காணித்தால் மட்டுமே சாத்தியமாகும். பரிணாம வளர்ச்சியில் தென்படும் அத்தனைப் பெருமைகளும் நிறைவுபெற்று செல்வங்களைச் சுவைத்து மகிழ வேண்டுமானால், அவன் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.

ஜாதகங்களில் பல ராஜ யோகங்களையும், தாம்பத்திய சுகத்தை சுவைத்து மகிழும் யோகங்களையும் கண்ணுற்று, அவனை பெருமைப்படுத்தும் யோகங்களையும் புகழையும் பார்த்து, இவை அத்தனையும் இருப்பதால் இவற்றைச் சுவைக்க ஆயுள் நிச்சயமாக இருக்கும் என்று கோணலான முடிவை எடுக்கும் எண்ணம் ஜோதிட பிரபலங்  களுக்கு வரக்கூடாது. சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் தீட்ட இயலும்!

சமீபத்தில், யோக ஜாதகம் என்று திருமணத் தில் இணைத்து திருமணமான மறுநாளே மணமகனின் உயிர் பிரிந்தது என்ற தகவல் வந்தது. ஜோதிடரின் தவறால் இழப்பு நிகழக் கூடாது. அவர் செழிப்பை உறுதி செய்ய முனையவேண்டும். நமது சிந்தனையில் முடிவெடுக்கும் விஷயங்களுக்கு ஜாதகம் தேவையில்லை. சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு ஜாதகம் தேவை.

நமது சிந்தனையால் மரணத்தை அறிந்து கொள்ள இயலாது. வயது வந்த பிறகு நம்மைப் பற்றிக்கொள்ளும் மாறாப் பிணி குறித்து சிந்தனையால் அறிய இயலாது. அதேபோல் குழந்தை செல்வம் உண்டு என்பதையும் சிந்தனையில் அறிந்துகொள்ள இயலாது. அது தனிப்பட்ட இருவரின் தகுதியில் உருவாக வேண்டும். அதுகுறித்து திருமணம் ஆவதற்கு முன்பே நமது சிந்தனையால் தெரிந்துகொள்ள இயலாது.

சுக்கிரத்தையும் சோணிதத் தையும் சோதித்தாலும் கருவறை யில் அதன் சந்திப்பை நம்மால் நிகழ்த்த இயலாது. அதன் தோல்வியில் உருவானதுதான் செயற்கை முறையில் குழந்தை யைப் பெறும் நிலை!
படிப்பு, பட்டம், பதவி, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; நமது சிந்தனை இறுதி செய்யும். பெரும்பாலும், பிரபலங்கள் பலரும் சிந்தனைக்கு எட்டும் விஷயத்தையே ஜாதகம் பார்த்து விளக்குகிறார்கள்; எட்டாத விஷயத்தை ஆராய்ந்து சொல்லும் பொறுப்பை ஏற்பதில்லை.

திருமணம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், புகழ், தேர்வில் வெற்றி, நிரந்தர வேலை, வீடு, வாகனம் போன்றவற்றுக்கும் ஜாதகம் பார்த்து விளக்கு கிறார்கள். அவற்றுக்கு ஜாதகம் தேவை இல்லை. படித்து பட்டம் பெற்று ஒழுக்கத்தோடும், பணிவோடும் செயல்படுபவனுக்குத் திருமணம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், புகழ், வீடு, வாகனம் அனைத்தும் தேடிவந்து சேரும்!

Leave a Reply