முகப்பருவை வராமல் தடுக்கும், வந்தால் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…

இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது, மாறும் ஹார்மோன்களின் அளவினாலும் அந்த சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும். அதுபோன்று, சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம். ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தி, பருக்கள் வர வழிவகுக்கிறது.

 

முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக் கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும். தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக்கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. வாரத்திற்கு இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் பவுடர் பூசுவதை தவிர்ப்பது நல்லது.

முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். உடலில் கொழுப்பின் அளவு கூடும்போதும், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள வாய்ப்புண்டு. எந்நேரமும் பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும். பருக்களிலிருந்து வெள்ளைநிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள், பிதுக்காதீர்கள் மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள். நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுவது நல்லது. தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், எண்ணெய் பலகாரம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.