shadow

மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! – அத்துமீறும் ஆடம்பரம்…

1“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா… நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.

‘என் வாழ்க்கை… என் உரிமை’ என்ற வசனத்தைப் பெரும்பாலான வீடுகளில் கேட்க முடியுது. தான் பட்ட கஷ்டத்தைத் தன் பிள்ளைகள்படக் கூடாதுன்னு நினைச்சு பசங்களுக்குத் தகுதிக்கு மீறிப் பெத்தவங்க செஞ்சுடுறாங்க. அதோட விளைவு என்ன தெரியுமா? சின்ன வயசுலயே பசங்களோட வாழ்க்கைத் தடம் மாறிப் போயிடுது.

பைக் விலை ரூ.1.5 லட்சம்!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மருத்துவர் சரத்பாபு. மகன் மதன், மகள் மாலினி. மதன் ப்ளஸ் 2 முடிச்சுட்டு காலேஜ் சேர்ந்தான். காலேஜ் காட்டாங் கொளத்தூரில் இருக்கு. ரயில் வசதி, பஸ் வசதி எல்லாம் இருக்கு. ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஒரு பைக் வாங்கிக்கொடுங்கன்னு கேட்டான். அப்பாவும் வாங்கிக் கொடுத்திட்டார். முதல் நாள் காலேஜ் போயிட்டுத் திரும்பியபோதே ஆக்சிடென்ட். ஒரே வாரத்துல இன்னொரு ஆக்சிடென்ட். ஏன்னா, இவன் சாதாரணமாவே 100 கி.மீ வேகத்துக்கு மேலதான் போவானாம். மூணாவது ஆக்சிடென்ட்டில் பலத்த அடிபட்டு ஒரு மாதம் பெட்ல படுத்துட்டான். இதுல பையன் மேல தப்பு இல்ல… ஆசையாய் கேட்குறானேன்னு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பைக் வாங்கிக்கொடுத்த அப்பா மேலதான் தப்பு.

தூக்கி அடிச்சது 15 ஆயிரம்!

பசங்கதான் இப்படி, பொண்ணுங்க அப்படி இல்லைனு நினைக்காதீங்க. அவங்க ‘சைலன்ட் கில்லர்ஸ்’.

மதுரையில் பிரபல பள்ளி ஒன்றில் ப்ளஸ் 2 படித்தாள் சங்கரி. நல்ல மார்க் வாங்கினா டேப் (Tab) வாங்கித் தர்றேன்னு அப்பா சொல்லியிருக்கார். 1,150-க்கு மேல் மார்க் பெற்றாள். சொன்ன மாதிரியே அப்பாவும் டேப் (Tab) வாங்கிக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்ததும் கோபத்தில் வீசியடித்தாள் சங்கரி. ஏனென்றால், இவள் கேட்ட டேப் விலை 35,000 ரூபாய். தந்தை வாங்கித் தந்த டேப் விலை 15,000 ரூபாய்.

பெத்தவங்களே காரணம்…

மதன், சங்கரி மட்டுமல்ல… இன்றைய தலைமுறைப் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்காங்க. இதற்குப் பல காரணங்கள் இருக்கு. பெற்றோர்கள் ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. கைநிறையச் சம்பாதிக்கிறாங்க. எல்லாமே நம்ம பிள்ளைங்களுக்குத்தானே… அப்டீன்னு நினைக்கிறாங்க. நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுறோம்… அதனால நம்ம பிள்ளைங்களைச் சரியாகக் கவனிக்காம இருக்கோமோ என்ற குற்ற உணர்ச்சியும் அவங்களுக்கு இருக்கு. அதனால, பிள்ளைங்களுக்கு அதிகப்படியான செல்லம் கொடுக்குறாங்க. பிள்ளைங்க லேசா அழுதாலே பெற்றோர்களால தாங்கிக்க முடியலை. அதனால, என்ன கேட்டாலும் எப்பக் கேட்டாலும் தகுதிக்கு மீறி வாங்கிக் கொடுக்குறாங்க. குழந்தைகள் வளரவளர ஏமாற்றத்தைத் தாங்கிக்க முடியாமப் போயிடுறாங்க. முறையாக வளர்க்கப்படாத பிள்ளைங்களுக்கு, பிடிவாதக் குணம் அதிகமாகுது. கேட்பதைச் செய்து கொடுக்கலைன்னா எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிடுறாங்க” என பொரிந்து தள்ளினார், ஒரு சமூக ஆர்வலர்.

‘நோ’-வை ஏற்க முடியலை!

இந்தக் காலத்துப் பசங்களின் வளர்ப்புப் பற்றித் ‘தோழமை’ என்கிற குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயனிடம் கேட்டோம்.

“என் நண்பரின் கதையையே சொல்றேன். அவருக்கு ஒரே மகன். அவன் பெரிய ஆளா வரணும்னு ஒரு பெரிய ஸ்கூலில் சேர்த்தாங்க. அங்கு படிக்கிற எல்லாரும் ரொம்ப பணக்காரப் பசங்க. இவர் ஒரு லோயர் மிடில் கிளாஸ். மத்த பசங்க வெச்சிருக்கிற பொருட்களைப் பார்த்துட்டு வந்து, அது எல்லாம் தனக்கும் வேணும்னு அந்தப் பையன் கேட்பான். அந்த நண்பரும் வாங்கிக்கொடுப்பார். அவன் கொஞ்சம் பெரியவனா ஆனப்புறம், இப்போ ஏதாவது ஒரு பொருளை அவன் கேட்டு இவர்கள் வாங்கிக்கொடுக்கலைன்னா அவனால அதைத் தாங்கிக்க முடியாது. ‘நோ’ என்கிற வார்த்தையைக்கூட அவனால் ஏத்துக்க முடியலை.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே உள்ள பிரச்னையைக்கூட சில பிள்ளைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கிறாங்க. அம்மாவிடம் ஏதாவது ஆகணும்னா, அப்பாவைப் பற்றித் தவறாகப் பேசுறது. உடனே, மகன் தனக்காகப் பேசுறான்னு அவன் கேட்டதை வாங்கித் தந்துடறாங்க. அதே மாதிரிதான் அப்பாவிடமும். இதற்கு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பம் உடைந்ததுதான். தாத்தா, பாட்டிகூடவே இருந்தால் குழந்தைகள் வளர்ப்பு சரியான திசையில், சரியான குணத்தில் அமையும். அந்தச் சூழல் தகர்ந்துபோய்விட்டது” என்று கவலையுடன் சொன்னார் தேவநேயன்.

‘பயங்கர’ செல்லம்!

இதுகுறித்து பிரபல உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் கூறியதாவது:

“11-வது படிக்குற ஒரு பையன் என்கிட்ட கவுன்சலிங்க்காக வந்தான். எடுத்தவுடனே, ‘எங்க அம்மா அப்பா என்னை உங்கக்கிட்ட கவுன்சலிங் போகச் சொன்னாங்க. முதல்ல நான் மாட்டேன்னு சொன்னேன். உடனே, கவுன்சலிங் போனா எனக்கு மோட்டார் பைக் வாங்கித்தரேன்னு சொன்னாங்க. அதனால வந்தேன்’ என்று சொன்னான். பெத்தவங்களோட வார்த்தைகளைவிட, அவங்க வாங்கிக்கொடுக்குற பொருளுக்குத்தான் பசங்க மரியாதை தராங்க.

நான் ஒரு ஸ்கூலில் கவுன்சலிங் கொடுக்கப் போனேன். அங்க எல்.கே.ஜி படிக்கிற ஒரு குழந்தை அடிக்கடி லீவ் போடுமாம். இன்னைக்கு ஸ்கூலுக்கு போகவேணாம்னு அந்தக் குழந்தை முடிவு பண்ணிட்டா யாராலயும் தடுக்க முடியாதாம். ரொம்ப வருஷம் கழிச்சுப் பிறந்ததால அவங்க குடும்பத்துல எல்லோரும் ‘பயங்கர’ செல்லமாம். இப்படிக் குழந்தைகளை வளர்த்தால் எப்படி இருக்கும்? இந்தக் குழந்தைகள் முதலில் பெற்றோர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். சொந்தங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். அடுத்து யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்” என்றார் பிருந்தா ஜெயராமன்.

முன்பு ஒரு காலம் இருந்தது, பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றோரே வாங்கிக் கொடுப்பது, அவர்களிடம் எதுவும் கேட்பது இல்லை. அதன்பிறகு பிள்ளைகளிடம் விருப்பத்தைக் கேட்டு வாங்குவதாகக் காலம் மாறியது. பிறகு, பிள்ளைகளை அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தார்கள். இப்போது பிள்ளைகள், பெற்றோர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் தங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொள்கிறார்கள். இப்படியே போனால், பெற்றோர் சம்மதம் இல்லாமல் தனக்கு வேண்டிய பணத்தை வீட்டில் இருந்தே எடுத்துப்போய் வாங்கிக்கொள்ளவும் செய்வார்கள். அப்படி ஒரு கட்டம் உருவாகிவிடாமல் தடுக்க வேண்டியது பெற்றோர் கையில்தான் உள்ளது.

குழந்தைகளை ஐந்து வயதிலேயே வளைக்காவிட்டால், அவர்களின் போக்குக்கு எல்லாம் வளைந்துகொடுப்பவர்களாகப் பெற்றோர்கள் மாற வேண்டியிருக்கும். அது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல… இந்தச் சமுதாயத்துக்கே நல்லதல்ல!

Leave a Reply