மணப்பெண்ணுக்கு இந்த அலங்காரங்கள் நிச்சயம் தேவை

மணப்பெண்ணுக்கு இந்த அலங்காரங்கள் நிச்சயம் தேவை

மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

* எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த இடத்துக்கு தக்கபடி அலங்கார விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக மேக்கப் செய்து கொண்டு கோவிலில் எளிமையாக திருமணம் செய்வது முரண்பாடாக அமையும்.

* ஏ.சி. வசதி இல்லாத இடத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் அதற்கு தக்கபடி மேக்கப் செய்து கொள்வது சவுகரியமாக இருக்கும்.

* நீங்கள் எல்லா நாட்களிலும் எப்படி சிகை அலங்காரம் செய்கிறீர்களோ அதே மாதிரியான அலங்காரத்தைதான் திருமணத்தின்போதும் பின்பற்ற வேண்டும். வழக்கத்துக்கு மாறாக சிகை அலங்காரம் செய்தால் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.

* சிலருக்கு கூந்தலை விதவிதமான ஸ்டைல்களில் அலங்கரித்தால் பார்க்க அழகாக இருக்கும். சிலருக்கு சாதாரணமாக சிகை அலங்காரம் செய்தாலே அருமையாக அமைந்துவிடும். எது பொருத்தமாக இருக்குமோ அதனையே பின்பற்றலாம்.

* திருமணத்திற்கு முன்பாக கட்டாயம் மேக்அப் ஒத்திகை பார்க்க வேண்டும். ஒரு தடவையாவது எந்த மாதிரியான மேக்கப் செய்வது நன்றாக இருக்கும் என்று பரிசோதித்து பார்த்தால்தான் உங்களுக்கும், அழகுக்கலை நிபுணருக்கும் நம்பிக்கையும், திருப்தியும் ஏற்படும்.

* மேக்அப் ஒத்திகை செய்யும்போது திருமணத்திற்கு உடுத்தப்போகும் புடவை, அணியும் ஆபரணம் போன்றவற்றை உடன் எடுத்து செல்லவேண்டும். அது மேக்கப்பை முழுமைப்படுத்தும். நிறை, குறைகளை சரி செய்ய உதவியாக இருக்கும். ஜீன்ஸ், டாப் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு மேக்கப் ஒத்திகைக்கு சென்றால் பலன் தராது.

* சிலருக்கு தங்கள் முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறது என்பது தெரியாது. உதடுதான் அழகாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் கண்கள்தான் வசீகரிக்கும் அழகை கொண்டிருக்கும். முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் ஒப்பனைக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

* மணப்பெண் அலங்காரம் பெரும்பாலும் காலை வேளையில்தான் அதிகமாக நடக்கிறது. அவசர, அவசரமாக கிளம்பி சென்று சீக்கிரமாக மேக்கப்பை முடித்துவிடுமாறு நிறைய பேர் சொல்கிறார்கள். ஒருவேளை மேக்கப் சரி இல்லை என்றால் அதனை மாற்ற நேரம் இல்லாமல் போய் விடும். அதனால் மேக்கப் செய்ய அழகுக்கலை நிபுணருக்கு போதுமான நேரம் கொடுங்கள்.

* ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே இளநரை பிரச்சினை இருக்கிறது. அதனை முதலிலேயே சரிபடுத்திவிட வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் டை அடித்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைக்காதீர்கள்.

* ஒருசிலர், ‘நாங்கள் பார்க்க கலராக தெரிய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று அழகுக்கலை நிபுணர்களிடம் சொல்கிறார்கள். அப்படி குறுக்கு வழியில் அழகை கூட்ட நினைப்பது ஆபத்தானது. இயல்பான அழகையும், நிறத்தையும் சற்று மேம்படுத்துவதில் மட்டும் அக்கறைகாட்டுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.