shadow

பெண் எழுத்து: படைப்பூக்கம் கொண்ட போராட்டம்!
women
எழுத்து அனைவருக்கும் பொதுவானது எனினும், பெண்ணின் பார்வையில் பிறக்கும் எழுத்து தனித்துவமானது. எழுத வந்த பெண்கள் அனைவருமே புரட்சியை விதைத்தார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால், அடக்குமுறையிலும், பால்ய விவாகத்திலும், சாதியக் கொடுமைகளிலும் கலாச்சாரச் சிறைகளுக்குள்ளும் சிக்குண்டிருந்த காலத்தில் அவர்கள் எழுத வந்ததே மாபெரும் புரட்சி. எழுதுகிறவர்களும் அவற்றைப் படிக்கிறவர்களும் ஆண்களாக மட்டுமே இருந்த காலத்தில் எழுத்தைத் தங்கள் அடையாளமாகக் கொண்ட பெண்கள் பெரும்பாலும் சாதியமைப்பின் மேல் அடுக்குகளைச் சார்ந்தவர்களாகவும் வலுவான பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களாகவும் இருந்தனர். குடும்ப அமைப்பு சார்ந்த புனைவுகளையே இவர்கள் எழுதினார்கள். அவற்றில் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தவை மிகமிகக் குறைவு. ஆனால் இலக்கிய உலகில் முதல் தலைமுறை பெண் படைப்பாளிகள் என்ற வகையில் இவர்களது வருகை குறிப்பிடத் தகுந்தது.

தடம் பதித்த முன்னத்தி ஏர்

பெண்கள் எழுதுவதே விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் ஆளான காலத்தில், தொடர்ந்து 35 ஆண்டுகளாகப் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் கோதைநாயகி அம்மாள். ஆரம்பத்தில் மேல்தட்டு எழுத்துக்களே வலம்வந்தபோது சிறுபான்மைச் சமூகத்தின் குரலாக ஒலித்தவை சித்தி ஜுனைதா பேகத்தின் எழுத்துக்கள். ஏகப்பட்ட கண்டனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இடையேதான் அவர் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். பெண் எழுத்துலகில் புது ஒளியைப் பாய்ச்சியது மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வரவு.

“ராமாமிர்தம் அம்மையார், எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன் எழுத்துலகில் நுழையவில்லை. தாசி குலத்தில் பிறந்த காரணத்தாலேயே வதைபடும் பெண்களின் வேதனைகளைப் பதிவுசெய்ய நினைத்தார். அதன் விளைவுதான் அவரது ‘தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்’ நாவல்” என்று சொல்கிறார் எழுத்தாளர் ஜீவசுந்தரி.

தொடக்கத்தில் எழுதவந்த பெண்களின் எழுத்தில் வீரியம் இல்லை என்று தற்போது பலர் விமர்சனம் செய்வது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“அந்தக் காலத்தில் எது சாத்தியமோ அதைச் செயல்படுத்தியிருக்கிறார்கள் அவர்கள். இன்றைக்கும் ஆண்கள் ஆதிக்கத்தில் இருக்கும் பத்திரிகையுலகில் சென்ற நூற்றாண்டிலேயே ரூத், தாயாரம்மா, ஸ்வப்பநேஸ்வரி அம்மாள், செய்யூர் சாரநாயகி, வி. பாலம்மாள், மு.மரகதவல்லி, குகப்ரியை, வை.மு.கோதைநாயகி போன்ற பெண்கள் மிகச் சிறப்பாக இதழ்களை நடத்திவந்திருக்கிறார்கள். ஸ்வப்பநேஸ்வரி அம்மாள், வை.மு.கோதைநாயகி இருவரும் பத்திரிகையின் உரிமையாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் இரட்டைப் பொறுப்பேற்று பத்திரிகையை நடத்தியுள்ளனர். இன்றைய மகளிர் இதழ்களின் தவிர்க்க முடியாத அம்சங்களாக விளங்கும் சமையல், கோலம், அழகுக் குறிப்பு, சோதிடம் போன்ற எதுவும் அன்றைய ‘ஜகன்மோகினி’யில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது” என்று சொல்கிறார் ஜீவசுந்தரி.

பன்முகப் பயணம்

இவர்களுக்கு அடுத்து வந்த தலைமுறைக்குக் கல்வியறிவு சாத்தியப்பட்டது. அது அவர்களின் சிந்தனை எல்லையை விரிவடையச் செய்தது. அதுவரை சமையலும் குடும்பமும் மட்டுமே பெண்களின் உலகமாக இருந்த நிலை மாறி, குடும்ப வன்முறைகளையும் சமூக அவலங்களையும் தங்கள் கதைகளின் கருக்களாகக் கொண்டனர். ராஜம் கிருஷ்ணன், சமூக அவலங்களைக் கதைகளின் வாயிலாகச் சாடினார் என்றால் சூடாமணியோ பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் பதிவுசெய்தார். பெண் வாழ்வை, பெண்ணியப் பார்வையுடனும் கலாபூர்வமாகவும் வலுவாக வெளிப்படுத்திய எழுத்து அம்பையுடையது. வாஸந்தி, பெண்களின் வாழ்வின் பல்வேறு நிலைகளை மிக நுட்பமாகவும் கூர்மையாகவும் பதிவுசெய்திருக்கிறார். வெகுசனத் தளத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சிவசங்கரி, இந்துமதி போன்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தது. ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்று சமூகம் உருவாக்கிவைத்திருந்த பிம்பங்களையெல்லாம் இவர்களது எழுத்துக்கள் கேள்விக்குள்ளாக்கின. சுகந்தி சுப்பிரமணியம் போன்ற சிலரும் இதே காலகட்டத்தில் படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

காலப்போக்கில், குறிப்பாகத் தொண்ணூறுகளில் பெண் எழுத்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்றது. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளிலிருந்தும் பெண்கள் எழுத வந்தார்கள். பல்வேறு தரப்புகளிலிருந்தும் பெண்ணியச் சிந்தனைகள் படைப்புகளில் வெளிப்பட்டன. விளிம்பு நிலை சார்ந்த வாழ்வு பொதுவாகவும் பெண்களின் வாழ்வு சார்ந்தும் அதிகம் வெளிப்பட்ட காலம் இது. தலித் விடுதலை, சாதி, மத அடிமைத்தனத்துக்கு எதிரான குரல் என்று பெண் எழுத்து பன்முகப்பட்டது. இந்தக் காலகட்டங்களில் பெண்ணுடல் குறித்த பொதுப் பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் இறங்கினார்கள். இது சமூகத்தின் பார்வையை மாற்றவும் பெண்களை ஆண்கள் புரிந்துகொள்வதற்குமான சாத்தியங்களை ஏற்படுத்தியது.

தொடரும் பாரபட்சம்

சமகாலத்தில் எழுதுகிற ஆண் படைப்பாளிக்குக் கிடைக்கிற அங்கீகாரமும் மரியாதையும் பெண்களுக்குக் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்ற கசப்பான பதிலைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. “நான் தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கினேன். பெண் என்பது ஒருவகை பின்னடைவு என்றால் தலித் பெண் என்பது இரட்டைச் சுமை. எழுதுவது என்பது குடும்பப் பெண்ணுக்கான இலக்கணம் இல்லை என்று எனக்குத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் எழுதாமல் இருந்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது. ஆனால் அதை எதிர்கொண்டு உடைத்ததில்தான் என் எழுத்து உயிர்ப்புடன் இருக்கிறது” என்கிறார் கவிஞர் சுகிர்தராணி. பெண் வெளி, உடல் அரசியல், பெண்ணியம், தலித்தியம் என்று பலவற்றையும் வலிமையான வார்த்தைகளின் வழி பதிவுசெய்திருக்கிறார் இவர். உடல் அரசியல் என்பது உடலுறவு குறித்தது என்ற தவறான பார்வைதான் பலருக்கும் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“பெண்ணை ஒரு போகப் பொருளாக ரசித்து ஆண்கள் எழுதுவதைக் கொண்டாடுகிறவர்கள், தன் உடல் குறித்து ஒரு பெண் எழுதுவதை அருவருப்புடன் விமர்சிக்கிறார்கள். அப்படி விமர்சிக்கிறவர்களில் முதல் வரிசையில் ஆண் படைப்பாளிகள் இடம்பெறுவது வேடிக்கை” என்று சொல்லும் சுகிர்தராணி, கவிதைகளையும் புனைவுகளையும் சமூக மாற்றத்துக்கான கருவியாக யாரும் பார்ப்பதில்லை என்கிறார்.

எழுதித் தீராத பிரச்சினை

புனைவுலகில் பெண்கள் சஞ்சரிக்கத் தொடங்கி நூறாண்டு ஆகிற நிலையில் பெண் எழுத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் வீச்சும் என்ன என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அரசியல், வரலாறு, சுற்றுச்சூழல் என ஆண்களால் எளிதில் அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் சென்றுவிட முடிகிறபோது பெண்கள் ஏன் இன்னும் பெண்ணியம், பெண்ணுடல் குறித்தே எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனமும் பெண் படைப்பாளிகள் மீது வைக்கப்படுகிறது.

“நூறாண்டுகள் கழித்தும் பெண் மீதான வன்முறைகள் குறையவில்லை. சமூக அமைப்பு பெண்களுக்குச் சாதகமாக இருப்பதில்லை. பேசித் தீராத விஷயங்கள் இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் அவற்றை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. உடல் அரசியலையே இன்னும் நம்மால் கடந்து வர முடியவில்லை. பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படுகிற அத்துமீறலைத் தவிர்த்துவிட்டு வேறு எதை எழுத வேண்டும்? வேறு எதையாவது எழுதுங்கள் என்று ஒரு பெண் படைப்பாளியைப் பார்த்துச் சொல்வதன் மூலமாகப் பெண் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறைகளைத் தவிர்க்க வற்புறுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது” என்கிறார் கவிஞர் குட்டி ரேவதி.

“இங்கே ஒரு ஆண் புதிதாக ஏதாவது எழுதினால் அவருக்கு அங்கீகாரம் கொடுப்பதும் பிதாமகன் என்று கொண்டாடுவது சகஜம். ஆனால் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் இப்படி எந்த விதமான அங்கீகாரமும் கிடைப்பதில்லை. எதை எழுதினாலும் சமூகத்தைக் கலைக்க வருகிறோம் என்ற வன்மத்துடனேயே விமர்சிக்கிறவர்கள் இங்கே அதிகம். இது அவர்களின் குறையல்ல. சமூக அமைப்பின் குறை. நம் சமூகத்தில் நிலவும் கோளாறுகளை, ஏற்றத்தாழ்வுகளை, பாகுபாடுகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் இது போன்ற விமர்சனங்கள் எழாது” என்று குறிப்பிடுகிறார் அவர்.

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளில் இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்கிறது என்று குறிப்பிடும் குட்டி ரேவதி, “ஒரு குடையின் கீழ் இரண்டு பெண்கள் பணியாற்றுவது இன்று சாத்தியமில்லாததாக இருக்கிறது. காரணம் ஒவ்வொரு பெண்ணும் அடுத்தவரை எதிரியாகப் பாவிப்பதுதான். இது அந்தப் பெண்களின் குறையல்ல. காலங்காலமாக நம்மிடையே பரவிக் கிடக்கும் வேற்றுமை உணர்வுதான். முதலில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து பெண்கள் ஒன்றிணைய வேண்டும். அதுதான் பெண்களை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்” என்கிறார்.

“ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் புரையோடிப்போயிருக்கும் இந்தச் சமூகத்தில் ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆனால் சிறு சலனத்தையாவது ஏற்படுத்துவதுதான் படைப்பாளியின் நோக்கம். பெண்கள் எங்கே தங்களுடைய இடத்தைப் பறித்துக்கொள்வார்களோ என்ற பதற்றம்தான் பெண் படைப்பாளிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவிடாமல் தடுக்கிறது. ஆனால் இப்படித் திட்டமிடப்பட்டு வீழ்த்தப்படுவதே வெற்றியை நோக்கிய பயணம்தானே” என்ற சுகிர்தராணியின் சொற்கள் இன்றைய நிலையைப் பளிச்சென்று உணர்த்துகின்றன.

நூறாண்டுகள் கடந்த நிலையிலும் பெண்கள் மீதான வன்முறை குறித்தும், பெண்ணுடல் அரசியல் குறித்தும் எழுத வேண்டியிருப்பது, நம் சமூகத்தில் பெண்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆனால் அடக்குமுறை எதற்கும் அடங்காமல் நிமிர்ந்தே எரிகிற நெருப்புபோலச் சுடர்விட்டு எரியும் பெண் எழுத்து, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *