பெண்களின் வாழ்க்கையை வளமாக்கும் நண்பர்கள்

பெண்களின் வாழ்க்கையை வளமாக்கும் நண்பர்கள்

பதின்ம பருவம் எனப்படும் டீன் ஏஜ் பருவம் மிகவும் அற்புதமானது. இந்தக்காலத்தில் நாம் பழகும் நபர்கள், தேர்ந்து எடுக்கும் நண்பர்கள் ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏன்என்றால் பதின்ம பருவத்தில் ஒருவருக்கும் கிடைக்கும் நல்ல நண்பர்கள் தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் துணைநிற்பார்கள். எனவே நண்பர்களை தேர்ந்து எடுக்கும்போதும், அந்த நட்பை வளர்க்கும்போதும் மிகவும் கவனம் தேவை. அது குறித்த தகவல்களை இங்கே காண்போம்:

கேள்வி கேளுங்கள், பிறர் பேசுவதை கவனமாக கேளுங்கள்: தான் பேசுவதை பிறர் கேட்கவேண்டும் என்பதை அனைவரும் விரும்புவார் கள். தான் பேசுவதில் விஷயங்கள் இல்லை என்றாலும் தன் கருத்தை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று விரும்புவதுண்டு. எனவே பிறர் பேசுவதை ஆர்வத்துடன் கேட்கப்பழக வேண்டும். அதுபோல பிறருடன் பழகும்போதும் தயக்கம் காட்டக்கூடாது.

புதிய பள்ளியில் சேரும்போதோ, அல்லது டியூஷன் வகுப்பில் சேரும்போதோ அங்குள்ள மாணவர்களுடன் நீங்களாகவே முன்வந்து பேசிப்பழக தயங்க கூடாது. அதுபோல நண்பர்களுடன் பேசும்போது நீங்கள் முதலில் பேச தயங்க வேண்டாம். அவர்கள் முதலில் பேசட்டும் என்று காத்திருக்காமல் நீங்களாகவே பேச்சை தொடங்குவது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும்.

அதுபோல உங்கள் நண்பரின் பேச்சு உங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், அவரது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பொறுமையாக அவரது பேச்சை கேளுங்கள். அவர் பேசி முடித்த பிறகு உங்கள் கருத்தை தெரிவியுங்கள். நண்பர்களுடன் பேசும் போது அவர்கள் கண்களை நேராகப்பார்த்துப் பேசுங்கள்.

நண்பர்கள் கூறும் கருத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேள்விகள் கேட்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் தான் சொல்வதை நீங்கள் ஆர்வத்துடன் கேட்பதை உங்கள் நண்பர் புரிந்து கொள்வார். மேலும் உங்கள் மீது அவருக்கு நெருக்கமும், ஈர்ப்பும் அதிகரிக்கும்.

வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்: நண்பர்களுக்குள் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பரிமாறிக்கொள்வது நட்பையும், அன்பையும் அதிகப்படுத்தும். உங்கள் நண்பர் சிறிய அளவில் உதவிகள் செய்தாலும் அவருக்கு உடனே நன்றி செலுத்துங்கள். மேலும் உங்கள் நண்பரின் உதவியை மறக்காமல் இருக்க வேண்டும். இதுதவிர அவரது உதவியை பிறரிடம் சொல்லி அவரது செயலை பெருமைப்படுத்தவேண்டும். அதுபோல நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தேவைப்படும் போது உதவிகள் செய்ய தயங்கக் கூடாது. நண்பர்கள் உதவி கேட்டால் செய்வோம் என்று காத்திருக்காமல், நீங்களாகவே முன்வந்து உதவி செய்வது நட்பையும், அன்பையும் வலுப்படுத்தும்.

இணைந்து செயல்படுங்கள்: படிக்கும் போது நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டால் உங்கள் கல்வித்திறன் உயரும். நண்பர்களுடன் பாடக்குறிப்புகளை பரிமாறிக்கொள்வது உங்கள் கல்வி அறிவை மேம்படுத்த உதவும். அதுபோல விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் இணைந்து பயனுள்ள தொழில்கல்விகளையும், கைத்தொழில்களையும் கற்றுக்கொள்வது நல்லது.

ஆபத்தில் உதவுங்கள்: நெருக்கடி மற்றும் பிரச்சினையில் இருக்கும் நண்பர்களுக்கு உதவுங்கள். மன நெருக்கடியில் தவிக்கும் நண்பர்களுடன் மனம்விட்டுப்பேச உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாக கேட்டு, உரிய ஆலோசனைகளை வழங்குங்கள். பிரச்சினையில் இருப்பவர்களிடம் ஆறுதலாக பேசுவதே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

Leave a Reply

Your email address will not be published.