shadow

பிரமிக்க வைக்கும் கலையழகு… பழுவேட்டரையர்கள் எழுப்பிய கோயில்கள்!

இன்றைய தலைமுறையினரிடம் பழுவேட்டரையர்கள் யார் என்று கேட்டால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கல்கியின் பொன்னியின் செல்வனை வாசித்த எவருக்கும் வாழ்நாளில் மறக்கவே இயலாத பெயர் பழுவேட்டரையர்கள். அந்த புதினத்தின் இறுதி அத்தியாயம் வரை நீக்கமற நிறைந்திருக்கும் சோழப்பேரரசின் குறுநில மன்னர்கள் இந்த பழுவேட்டரையர்கள். இவர்களின் புகழுக்கு, சோழர்களின் கட்டடக்கலைக்கு நிகராக விளங்கும் வகையில் பழுவேட்டரையர்கள் எழுப்பிய கோயில்களே சாட்சி.

பழுவேட்டரையர்கள் கோயில்

பழுவேட்டரையர்களின் ஆட்சிக் கால கட்டடக்கலையும், அவர்கள் சிறப்புகளையும் உணர்வோடு பேசத்தொடங்கினார் வரலாற்று ஆய்வாளர் ராமநாதன்ஆய்வாளர் ராமநாதன்.

யார் இந்த பழுவேட்டரையர்கள்?

9-ம் நூற்றாண்டின் முற்பகுதி பிற்கால சோழப்பேரரரசின் முதல் மன்னராகிய விஜயாலய சோழரின் மைந்தரும், மதுரைகொண்ட கோப்பரகேசரி பராந்தக சோழரின் தந்தையுமான ஆதித்த சோழரின் ஆட்சிக்காலம். அப்போது கேரள தேசத்தோடு ஏற்பட்ட தொடர்பும், திருமண உறவுகளும் கேரள அரச மரபினர்களில் ஒருவரான பழுவேட்டரையர்கள், சோழர்களுக்கு இணக்கமானவர்களாக உருவாகக் காரணமாக அமைந்தது. இதுவே பிற்காலத்தில் சோழப்பேரரசின் குறுநிலமன்னர்களாக பரிணமித்து சோழ அரசியலில் முக்கிய பங்காற்றும் அளவுக்கு முன்னேறியது.

கல்வெட்டுச் சான்றுகள்!

அரியலூர் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கீழப்பழுவூர். அதன் அருகருகே அமைந்திருக்கும் கீழையூரும், மேலப்பழுவூருமே பழுவேட்டரையர்களின் ஆட்சிப்பரப்பான பழுவூர் பகுதியாகும்.

பழுவூர் கோயிலில் இருக்கும் ஆதித்த சோழரின் கல்வெட்டுக்களின்படி, பழுவூர் அரச மரபின் முதல் மன்னராக குமரன் கண்டன் பழுவேட்டரையர் என்பவர் அறியப்படுகிறார். இவருக்குப் பிறகு, இவரது தமையன் குமரன் மறவன், பழுவேட்டரையரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றார்.

பழுவேட்டரையர்கள் கோயில்

சோழர்களின் முக்கிய போர்களில் ஒன்றாக பராந்தகசோழருக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த வெள்ளூர் போரில் பழுவேட்டரையர் மரபில் வந்த கண்டன் அமுதன் சோழப்படைகளோடு இணைந்து பாண்டியர்களோடு போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாது உதயேந்திரம் செப்பேடுகள் மூலம் பழுவேட்டரையர்களின் மகள் அருள்மொழி நங்கையை பராந்தக சோழர் மணந்து கொண்ட தகவலும் அதில் உள்ளது.

இவ்வாறு சோழப்பேரரசோடு உறவாகவும் சோழ அரசியலில் முக்கிய பங்கு பெறுபவர்களாகவும் இருந்த பழுவேட்டரையர்களில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களில் ஒருவரான மறவன் கண்டனின் மகன்கள் சத்ரு பயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் என்ற மூவரில் இருவரே பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களாக இடம்பெறும் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர்களாக இருக்க வாய்ப்ப்புள்ளது என கருதப்படுகிறது.

சோழப்பேரரசின் நெருங்கிய உறவாகவும் உயர்நிலை அரசு அதிகாரிகளாகவும் இருந்த பழுவேட்டரையர்களின் நிலை. ராஜ ராஜ சோழரின் காந்தளூர்ச்சாலை போருக்குப் பின்பும், ராஜேந்திர சோழரின் கேரள படையெடுப்புக்குப் பின்பும் முக்கியத்துவம் இழந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு சோழப்பேரரசோடும் அதன் கலை – பண்பாட்டோடும் இணைந்திருந்த பழவேட்டரையர்கள் உருவாக்கிய கோயில்கள் இன்றும் அவர்களது சிறப்பையும் கலையார்வத்தையும் நமக்கு காட்சிப்படுத்திகொண்டே இருக்கின்றன.

தொன்மையான ஆலந்துறையார் கோயில்

கீழப்பழுவூர் – தஞ்சை சாலையில் வலப்புறத்தில் அமைந்திருக்கும் ஆலந்துறையார் கோயிலே பழுவூரில் அமைந்திருக்கும் கோயில்களில் தொன்மையானது.

ஆலந்துறையார் கோயில்

செங்கற் கட்டுமானமாய் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க கூடியதாக உள்ள கோயில். திருஞானசம்பந்தரால்,

‘’ முத்தன்மிகு மூவிலை நல்வேலன் விரிநூலன்
அத்தன் எமையாளுடைய அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும் பொழிலின் வாசமது வீச
பத்தரோடு சித்தர் பயில்கின்ற பழுவூரே ‘’

என்று பாடி பணிந்து கொண்டாடப்பட்ட இப்பெருங்கோயில் பழுவேட்டரையர் மறவன் கண்டனால் 9-ம் நூற்றாண்டில் கற்கோயிலாக உருமாற்றம் பெற்றது. கருவறையைச் சுற்றிலும் உள்ள தேவகோட்ட சிற்பங்கள், முற்கால சோழர் கலைவடிவை கொண்டு பழுவேட்டரையர்களின் கைவண்ணத்தில் மிளிர்பவை. ஆலமர் அண்ணலும், கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பமும் எழில் வாய்ந்தவை. பழுவேட்டரையர்களாலும், சோழமன்னர்களாலும் பல கொடை அளிக்கப்பட்டு செழுமையாகப் போற்றி கொண்டாடி மென்மேலும் விரிவுபடுத்தப்பட்ட கோயில். அதன்பின் வந்த நாயக்க, மராட்டிய மன்னர்களாலும் தொடர்ச்சியாக நன்றாக பராமரிக்கப்பட்டது.

ஆலந்துறையார் கோயில்

பராமரிப்பற்ற மறவனீச்சரம் கோயில்

ஆலந்துறையார் கோயிலின் அடுத்து சற்று உள்ளடங்கி இருக்கும் இந்தக் கோயில். தற்போது மிகவும் சிதைவுறும் நிலையில் உள்ளது. முற்கால சோழர்கால கல்வெட்டுக்களை கொண்டிருக்கும் இக்கோயிலும் பழுவேட்டரையர்களின் படைப்பே .

கீழையூர்

கீழையூர் கோயில்

தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலை இங்கு அமைந்துள்ள கல்வெட்டுக்கள் ‘’அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிருகம்’’ என்று குறிப்பிடுகின்றன. மேற்குப்புற வாயிலைக் கொண்ட இவ்வளாகத்தினுள் இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. வடபுறமாக அமைந்துள்ள கோயில் ‘வடவாயில் ஸ்ரீ கோயில்’ எனவும், தென்புறமாக அமைந்துள்ள கோயில் ‘தென்வாயில் ஸ்ரீ கோயில்’ பழுவேட்டரையர்கள் கோயில்எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஆதித்த சோழர், பராந்தக சோழர் கல்வெட்டுகளும் இன்னும் சில கொடை கல்வெட்டுகளும் கொண்ட இக்கோயில் ஆதித்த சோழரின் சமகாலத்தவரான பழுவேட்டரையர் குமரன் மறவனால் முற்கால சோழர் கலையமைப்பில் பழுவேட்டரையர்களின் சில புதிய சிந்தனைக்கும் வடிவம் கொடுத்து, அவர்களுடைய கலைத்திறனையும், இறையுணர்வையும் வெளிக்காட்டும் விதமாக பல்வேறு சிவவடிவங்களுடனும், எழிலார்ந்த சிற்பங்களோடும், மண்டபத் தூண்களை சிம்மங்களும், யாளிகளும் தாங்கும் விதமாக வடிக்கப்பட்டு கலைப் பெட்டகமாய்த் திகழ்கின்றன.

மேலப்பழுவூர்

மேலப்பழுவூரில் அமைந்திருக்கும் கோயில் இன்று சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகள் இக்கோயிலை ‘பகைவிடை ஈஸ்வரம்’ என்றே குறிக்கின்றன. பழுவேட்டரையர்களின் கலைக்கோயில்கள் வரிசையில் இது மாறுபட்ட அமைப்பை கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவரின் கைலாசநாதர் கோயிலில் உள்ளது போல், கருவறையை ஒட்டியவாறு திருச்சுற்று காணப்படுகிறது.

இவ்வகையான கட்டுமானத்தைக் கொண்டு அமைக்கப்படும் விமானத்திற்கு சாந்தார விமானம் என்று பெயர்.

கோயிலின் நுழைவாயிலாக இருக்கும் பகுதிக்கு மேலே எழுப்பப்படுவது கோபுரம். கருவறைக்கு மேற்புறம் எழுப்பப்படும் கூரைப்பகுதிக்கு விமானம் என்று பெயர்.

கோயில் நந்தி சிலை

அவ்வகையில், தஞ்சையில் ராஜ ராஜ சோழரால் கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரம் பெரிய கோயிலுக்கும் முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது இந்தக் கோயில். இங்குள்ள கட்டட அம்சங்களும் சிற்பங்களும் பழுவேட்டரையர்கள் கால கலையழகினை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் நந்தி தேவர் சிலையும், எதிர்ப்புறம் சுற்று மாளிகையில் அமர்ந்திருக்கும் ஜமதக்னி முனிவர் சிலையும், பழுவேட்டரையர்களின் பிரமிக்க வைக்கும் கலைப்படைப்புக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *