பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மன உறுதியை இழக்க கூடாது

தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போதுதான் வெற்றி கிடைக்கும்.

பிரச்சினைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலைகளிலும் பல்வேறு போராட்டங்களை கடந்துதான் வெற்றி என்பது கிடைக்கும். எனவே பிரச்சினைகளை கண்டு எந்த நிலையிலும் மன உறுதியை இழக்கக்கூடாது. மனதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றி தோல்விகளின் தாக்கம் ஒருவனை நிலைகுலைய செய்து விடக்கூடாது. இதை மாணவ-மாணவிகள் இளம்வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.

நெருக்கடி ஏற்படுகிறபோது அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அவதூறுகளை புறம் தள்ளிவிட வேண்டும். நம்மை பற்றிய குறைகளை கேட்கும்போது அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். தவறான கருத்துகள் சொல்லப்படுமானால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட வேண்டும். மாணவர்கள் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதுதொடர்பாக யார் அறிவுறுத்தினாலும் கேட்டு நடக்க முன்வரவேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து தீர்வுகாண வேண்டும்.

பள்ளி சூழலில் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லமுறையில் பேசிப் பழகவேண்டும். கோபம், விரோதம் போன்ற வற்றுக்கு இடம் அளித்து விடக்கூடாது. அது மனரீதியாக தவறான பாதைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுவிடும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதும் நடந்தால் நல்லமுறையில் விவாதித்து தீர்வு காணவேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு.

பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும் எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பளிக்கவேண்டும். அவர்கள் கூறும் கருத்துகளை காதுகொடுத்து கேட்கவேண்டும். எதையும் காரணம் காட்டி மாணவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது. அது அவர்களை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இளையதலைமுறையினர் தான் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்தநிலையிலும் மனஉறுதியை இழந்து விடக்கூடாது.

அதுதான் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய சக்தி என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கவேண்டும். அப்போதுதான் வெற்றியாளராக அல்லது சராசரி மனிதனாக நடமாட முடியும். அந்த அளவிற்கு பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளால் மனிதன் அழிவது இல்லை. பிரச்சினைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் அழிந்துவிடுகிறான் என்று கூறுவார்கள். எனவே எதையும் தைரியத்தோடும், நேர்மையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும் போது எந்த காலக்கட்டத்திலும் மீண்டுவர முடியும். இதை ஒவ்வொரு மாணவ- மாணவியரும் உணர வேண்டும்.