shadow

நெல்லிக்கனியில் நெய் தீபம்… – உடையவர் கோயில் அற்புதம்!

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும், ரிப்பன் மாளிகைக்கும் அருகில் உள்ள `பெரியமேடு’ என்ற பகுதியில், தொப்பை தெருவின் முகப்பில் அமைந்துள்ளது, பழைமையான ஸ்ரீஉடையவர் திருக்கோயில் எனப்படும் அருள்மிகு பிரசன்னவேங்கடேசப் பெருமாள் ஆலயம்.

சாலவாகன ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயில், மிகவும் பழைமை வாய்ந்தது என்பதை, அதன் கட்டட அமைப்பில் இருந்து அறியமுடிகிறது. பல்லவர் மற்றும் பாண்டிய மன்னர்களின் திருப்பணிகளும் இந்த ஆலயத்துக்கு உண்டு என்கிறார்கள். மகா மண்டபத்தின் மேற்கூரையில் திகழும் பல்லவர் காலத்து கோல வடிவங்களும், பாண்டியர் காலத்து மீன் சின்னங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

மகா மண்டபத்தின் தூண்களில் அருள்மிகு பார்த்தசாரதி, சிறிய திருவடி (அனுமன்), ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களது திருவுருவங்கள் கலைநயத்துடன் செதுக்கப் பட்டுள்ளன. கருவறை முகப்பு மண்டபத்தின் நுழைவு வாயிலின் மேற்புறத்திலும், மகா மண்டபத்தின் இடதுபுறச் சுற்றுசுவரில், உடையவர் சந்நிதிக்கு அருகிலும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்தவர்கள் மற்றும் நன்கொடை அளித்தவர்கள் குறித்த தகவல்களுடன் திகழும் கல்வெட்டுகளைக் காணலாம்.

உடையவரின் கைங்கர்யம்

ஸ்ரீபெரும்புதூருக்கு அடுத்தபடியாக உடையவர் ஸ்ரீராமானுஜர் இந்தக் கோயிலுக்கு எழுந்தருளி, இங்கே தங்கியிருந்து கைங்கர்யம் செய்ததாக இப்பகுதி அடியவர்கள் தெரிவிக்கின்றனர். உடையவர் கைங்கர்யம் செய்ததால், `உடையவர் கோயில்’ என்று இந்தக் கோயில் அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ஒருகாலத்தில், அருள்மிகு பாஷ்யக்காரர் பிரசன்னவேங்கடேசப் பெருமாள் கோயில் எனும் திருப்பெயருடன் திகழ்ந்ததாம் இந்த ஆலயம்.

இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பில் அருள்மிகு பிரசன்னவேங்கடேசப் பெருமாள் என்ற பெயர்ப்பலகை நம்மை வரவேற்கிறது. இதைக் கடந்து உள்ளே சென்றால் தீபஸ்தம்பம், பலிபீடம், சுமார் 40 அடி உயரத்துடன் திகழும் கொடிமரம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம். கொடிமரம், மிகுந்த வேலைப்பாட்டுடன் செப்புத் தகடு வேயப்பட்டு, மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அடுத்து மகா மண்டபம். அதன் மேற்புறத்தில் சிறு விமானம் போன்ற அமைப்புகளில் மணவாள மாமுனிகள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீபெருமாள், ஸ்ரீஆண்டாள் மற்றும் உடையவர் ஆகியோரது திருவுருவங்கள் சுதைச் சிற்பங்களாகத் திகழ்வதைத் தரிசித்து வணங்கியபடி உள்ளே நுழைகிறோம்.

மகா மண்டபத்தின் தூண் சிற்பங்களும் கொள்ளை அழகு. இந்த மண்டபத்துக்கு அடுத்ததாகக் கருவறை மண்டபத்தை அடையலாம். நீள, அகலத்தில் சற்று பெரியதாகத் திகழும் வெளிப்பிராகாரம், உற்சவர்களின் உள் புறப்பாடு வைபவம் நல்ல முறையில் நடப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது சிறப்பு. வெளிப்பிராகாரத்தில் மேற்குத் திசையில் வாகனங்கள் அறை உள்ளது. நந்தவனமும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆலயத்தை வலம் வரும்போது, தற்காலத்தில் கட்டப்பட்ட தூண்கள் அமைந்த சற்று விசாலமான ஒரு மண்டபத்தையும் காணமுடிகிறது. இந்த மண்டபத்தில்தான் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

இப்படி பெரிதான பிராகாரம், கலைநயமிக்க மண்டபங்களுடன் திகழும் ஆலயத்தில் உள்ள தெய்வச் சந்நிதி ஒவ்வொன்றும் சாந்நித்தியத்துடன் திகழ்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் தனிச் சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள் கிறார் ஆஞ்சநேயர். சாந்த சொரூபமாகக் காட்சி தரும் இந்த அனுமன், மிகச்சிறந்த வரப்பிரசாதி. அதேபோல், தனிச் சந்நிதியில் கூப்பிய கரங்களுடன் மூலவர் சந்நிதியை நோக்கி அருள்பாலிக்கிறார் கருடாழ்வார்.

மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் கோதண்டராமர் சந்நிதி அமைந்துள் ளது. இந்த ராமபிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் அருள்கிறார்.

மூன்று மூலவர்கள்!

இந்தத் தலத்தை நிர்மாணிக்கும் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் அர்ச்சையில் (விக்கிரகத்தில்) நேத்திர வடிவமைப்பு சற்று கீழ் நோக்கி அமைந்ததால், வேறொரு மூலவர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்வதென முடிவு செய்தார்களாம். காலப்போக்கில், முதலில் பிரதிஷ்டை செய்யப் பட்ட மூலவர் விக்கிரகம் மூர்மார்க்கெட்டுக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் காலப் போக்கில் புதையுண்டதாம். அதன் பின்னர், அவ்வழியே நடந்து சென்ற ஒருவரது காலில் இடற, அந்த அன்பர் அந்தப் பெருமாள் விக்கிரகத்தை எடுத்துச் சென்று, மும்பையில் ஒரு கோயிலைக் கட்டி, அங்கே பிரதிஷ்டை செய்தாராம்.

இந்த நிலையில் இங்கே பிரசன்னவேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு, இரண்டாவதாகக் கல்லில் செதுக்கப்பட்ட மூலவர் விக்கிரகம் அளவில் சிறியதாக அமைந்தது. அதைப் பெரிய சந்நிதியில் பிரதிஷ்டை செய்யும்போது, அந்த மூர்த்தி மிகச் சிறியதாக அமையும் என்பதால், அவருக்கு `ஆதிமூலவர்’ என்று திருநாமம் அருளி, ஆழ்வார்கள் சந்நிதியில் பிரதிஷ்டை செய்தார்களாம்.

ஆக, மூன்றாவதாகச் செய்யப்பட்ட மூலவர் விக்கிரகமே தற்போது அருள்பாலிக்கும் அருள்மிகு பிரசன்னவேங்கடேசப் பெருமாள் ஆவார். சுமார் ஏழு அடி உயரத்தில், கிழக்கு நோக்கிய நிலையில், நின்ற திருக்கோலம் காட்டுகிறார் இந்தப் பெருமாள். நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார் இவர். மேல் இரண்டு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, கீழ் வலக்கரம் திருவடியைக் காட்டி வரமளிக்கும் விதமாகவும், கீழ் இடக்கரம் நம்மை அரவணைக்கும் பாவனையிலும் திகழ்கின்றன.
பாதாதிகேசமாக இந்தப் பெருமாளைத் தரிசிப்பவர்கள், பெருமாளின் சுந்தரவதனத்தை நாள்முழுக்க பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவு அழகு! திருமலை வேங்கடவனைத் தரிசிக்கும்போது, `இத்தலப் பெருமாளைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாவே’ என்றொரு ஈர்ப்பு உண்டாகும் என்பார்கள் அடியவர்கள். அதே ஈர்ப்பு இவரைத் தரிசிக்கும்போதும் நமக்குள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

கருவறையிலிருந்து வெளியே வரும்போது, வலது மற்றும் இடப்புறத்தில் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தங்களைத் தரிசிக்க லாம். அந்த உற்சவ விக்கிரகங்கள் எல்லாவற்றிலும் தோளின் வலது, இடது புறத்தில் சங்கு மற்றும் சக்கரம் இருப்பதுடன், விக்கிரகங்களின் கீழே அவரவரது திருநாமமும் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதிமூலவர் திருமேனியையும், ராமர் – சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோரது உற்சவர்களையும் இங்கே தரிசிக்க முடிகிறது.

உடையவர் தரிசனம்…

கருவறையை விட்டு வெளியே வருகையில், வலது புறத்தில் தனிச் சந்நிதியில் மூலவர் மற்றும் உற்சவர் அர்ச்சையில் காட்சி தருகிறார், உடையவர் ஸ்ரீராமானுஜர். உற்சவ விக்கிரகம், உடையவரின் வயதான தோற்றத்தில் அமைந்துள்ளது. முதுகுப்புறத்தில் திகழும் ஆதிசேஷ வடிவம் பிரமிப்பூட்டுகிறது. இவரின் உற்சவர் அர்ச்சை, பக்தர்கள் அளித்த பொன் முதலான ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்கிறார்கள். உடையவரின் சாந்தமான திருமுகம் பார்ப்போர் மனதில் நிலைத்திருக்கும்படியாக அமைந்துள்ளது; ஸ்ரீபெரும்புதூரில் உடையவரின் தானுகந்த திருமேனியைத் தரிசிக்கும்போது ஏற்படும் பரவசம் இங்கும் எழுகிறது.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் வலது புறத்தில் தனிச் சந்நிதியில் சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மர் ஒரே விக்கிரகத்தில் எழுந்தருளியுள்ளனர். ஒரே விக்கிரகத்தில் முன்புறம் சக்கரத்தாழ்வாரும், பின்புறம் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

அள்ளித்தருவார் அலமேலுமங்கை

சக்கரத்தாழ்வார் சந்நிதியை அடுத்து, அலமேலு மங்கைத் தாயார் சந்நிதியைத் தரிசிக்கலாம்.அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன், இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் ஒரு கரம் அபயம் அளிக்கும் வண்ணமும், மறு கரம் கீழ் நோக்கியபடியும் திகழ, அருள்கோலம் காட்டுகிறார் இந்தத் தாயார். மனமுருக வேண்டு பவர்களுக்கு சகல செல்வங்களையும், மங்கள வாழ்வையும் அளிக்கும் வரசக்தி மிகுந்த தாயாராகக் காட்சி தருகிறார் இவர்.

அடுத்ததாக ஆண்டாள் சந்நிதி. சற்று சாய்ந்த திருமுக அமைப்புடன் அருளும் ஆண்டாள், மிக்க செளந்தர்யத்துடன் திகழ்கிறாள்.

மூலவர் சந்நிதியின்முன் இடது புறம் தூணில் பக்த அனுமன் அருள்கிறார். இவரின் வால், திருமுடிக்கு மேலாக வளைந்து காட்சியளிப்பது விசேஷ அம்சம். இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், படிப்பு, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப்பயணம், திருமணம் மற்றும் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருக்கோயில் விமானங்களும் தெய்வச் சாந்நித்தியத் துடன் திகழ்கின்றன. மூலவர் கருவறை
விமானத்தில் திகழும் சயனம் கொண்ட பெருமாள், ஹயக்ரீவர், லட்சுமி நரசிம்மர், திருமால் நின்ற திருக்கோலம், தசாவதாரம், ஆழ்வார் கள், கோபுரம் தாங்கிகள் போன்ற இன்னும் பல சுதைச்சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன.

ஸ்தல விருட்சமும் பூஜா பலன்களும்…

இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லி மரமாகும். மகாலட்சுமி வாசம் செய்வதால் நெல்லி மரத்துக்கு தனி விசேஷம் உண்டு. நெல்லிக்கனி நீண்ட ஆயுளைத் தரும்; சகல நோய்களையும் தீர்க்கும். நெல்லிக்கனியில் பசுநெய் இட்டு தீபமேற்றுவது இந்தத் தலத்துக்கே உரிய தனிச் சிறப்பு. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் எல்லா திங்கட்கிழமைகளிலும், ஏராளமான சுமங்கலிப் பெண்கள் காலை முதல் மாலை வரை இக்கோயிலுக்கு வந்து, நெல்லிக்கனியில் பசுநெய் இட்டு தீபமேற்றி, மஞ்சள் கயிறு கொண்டு மாங்கல்ய பூஜை செய்கின்றனர்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர், நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி, பிரார்த்தனை செய்கின்றனர். கன்னிப்பெண்கள் சீக்கிரம் திருமணம் கைகூடவும், லட்சுமி கடாட்சம் பெறவும் நெல்லி மரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்தும், நெல்லி மரத்தை ஒன்பது முறை வலம் வந்தும் வழிபடுகின்றனர். பிறகு, மூத்த சுமங்கலிப் பெண்களது பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசி பெறுவதுடன், நெல்லி மரத்தின் எதிரில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.

கார்த்திகை மாதம் மூன்றாவது திங்கட் கிழமையன்று நெல்லி மரத்துக்கு விசேஷ பூஜையும், அன்றைய நாள் முழுவதும் வனபோஜனமும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன.

விழாக்கள், விசேஷங்கள்…

சித்திரை மாதத்தில், 10 நாள்கள் உடையவர் உற்சவம் வெகு விமரிசை யாக நடைபெறுகிறது. 10 நாள்களிலும் மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் உடையவர்.

அதேபோல் புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசி பூவங்கி சேவை-புஷ்ப யாகம், மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம், 10-ம் நாள் அத்தியாந்த சேவையும் (நம்மாழ்வார் திருவடி தொழல்) ஆகியன சிறப்புற நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

மேலும், வருடத்துக்கு இருமுறை சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் வியாபார விருத்திக்காகவும், ஆயுள் அபிவிருத்திக்காகவும், மக்கள் ஷேமத்துக்காகவும் நடத்தப்படுகின்றன. இப்படி இங்கு நடைபெறும் உற்சவங்களும் நித்திய பூஜைகளும் பெரியமேடு பகுதியில் வசிக்கும் ஊர் பெரியவர்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்களால் மிகுந்த ஈடுபாட்டுடனும், பக்தி சிரத்தையுடனும் நடத்தப்படுகின்றன. தினமும் இரண்டு கால பூஜைகள் காணும் இந்தக் கோயில், காலை 7 முதல் 11.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

பகவத் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில், அவர் எழுந்தருளியிருக்கும் இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று, குருவருளையும் திருவருளையும் ஒருங்கே பெற்று வருவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *