நடிகை பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தில் மஞ்சு வாரியர் ஆஜராகி மீண்டும் சாட்சியம்

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் கட்டத்தில் இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையில் இறங்கிய போலீசார் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் மற்றும் நடிகை காவ்யா மாதவன் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். போலீசாரின் இந்த முடிவுக்கு நடிகர் திலீப் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை நீட்டித்து கொண்டே செல்வதற்காகவே சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க கூடாது என மனுவில் கூறியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை.

மஞ்சு வாரியரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக நடிகை மஞ்சுவாரியர் மீண்டும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலசந்திரகுமார், போலீசிடம் அளித்த ஆடியோவில் இருப்பது நடிகர் திலீப்பின் குரல் தானா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.