திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திடீர் தீ விபத்து- மாணவிகள் அலறி அடித்து ஒட்டம்

புதுச்சேரி:

செயற்கைக்கோளின் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்க பயிற்சியை அப்துல்கலாம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.

புதுவை அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது. சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். கணினி மற்றும் எல்.இ.டி. ஸ்கிரீன் ஸ்கிரீன் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் செய்யப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் ஆசிரியர்களும் மாணவியரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மின் கசிவு, தீ விபத்தையும் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

மின்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள் நேரில் வந்து மின் இணைப்பை சரி செய்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது.