திடீரென பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து: சமயோசிதமாக செயல்பட்ட இளைஞர்கள்

தமிழக அரசு பேருந்துகள் திடீர் திடீரென பழுதாகி விடுவதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திண்டுக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு அரசு பேருந்து திடீரென பிரேக் பிடிக்காமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டி என்ற பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பேகம்பூர் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் வேலை செய்யாததை ஓட்டுநர் உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பேருந்தின் வேகத்தை குறைப்பதோடு சாலையோரம் சென்றவர்களையும் நோக்கி கூச்சல் போட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் அதனால் மக்கள் உதவி செய்யும்படியும் அவர் கூறியதைக் கேட்ட அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு பெரிய கற்களை பேருந்தின் முன் போட்டு பேருந்தை நிறுத்தினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இளைஞர்களின் இந்த செயலால் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை

இதுபோன்ற பிரேக் பிடிக்காத, பயணம் செய்ய தகுதி இல்லாத பேருந்துகளை தமிழக அரசு இயக்குவதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply