தாளம் வழங்கி தமிழ்மறை தந்த வள்ளல்

வைணவ ஆச்சாரிய பரம் பரையில் முதல் ஆச்சாரியார் நாதமுனிகள். அவர் 1199 வருடங்களுக்கு முன்னால், நம் தமிழ்நாட்டில் காட்டு மன்னார்குடி என்னும் ஊரில் அவதரித்தவர். அடுத்த வருடம் அவர் அவதரித்து 1200 வருடங்கள் ஆகப்போகிறது. வைணவத்துக்கும், ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களுக்கும், தமிழ்ப் பண்ணிசைக்கும் நாடகக் கலைக்கும், அவர் செய்த சேவை பெரிது. அவர் யார்? என்னென்ன சாதனைகள் செய்தார்? என்பதை நாம் இந்த “முத்துக்கள் முப்பது” தொகுப்பில் காண்போம்.

1) திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப்பின் அருளிச்செயல்

ஆழ்வார்களின் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். அவருடைய காலத்திற்குப்பின் ஆழ்வார்களு டைய அருளிச்செயல் என்று சொல்லப்படும் நாலாயிரத் திவ்யபிரபந்தம் திருக்கோயில்களில் பிரச்சாரம் இல்லாமல், மறையத் தொடங்கியிருந்தது. இதுகுறித்து திருமலை அப்பனிடம் விண்ணப் பித்தனர் சில வைணவர்கள். அவர்களிடம் திருமலை அப்பன் ‘‘நீங்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் வீரநாராயணபுரம் என்னும் ஊரில்  ஈஸ்வர பட்டருக்கு நம்முடைய நித்யஸூரி  அம்சமாக ஒருவர் அவதரிப்பார். அவர் மூலமாக ஆழ்வார்களின் பிரபந்தங்கள் வெளிச்சம் பெறும். எல்லோரும் அதைத்  தொடர்வார்கள். வைணவ பக்தி ஓங்கும். இதனால் கலியின் கொடுமைகள் அடங்கும்” என்று சொல்ல, அதை அந்த வைதிகர்கள் வீரநாராயணபுரத்தில் வசிக்கும் ஈஸ்வர பட்டாழ்வாருக்குச் சொன்னார்கள்.

2) நாதமுனிகள்  அவதாரம் குறித்து புராணத்தில்…

விருத்த பாத்ம புராணம் என்னும் நூலிலே நம்மாழ்வாருக்குப் பிறகு நாதமுனிகள் அவதரிப்பார் என்பதை ஒரு ஸ்லோகம் தெரிவிக்கிறது.
தத: கலியுகஸ் யாதௌ வைசாக்யாம் விஸ்வபாவன:

விஷ்ணு பக்தி பிரதிஷ்டார்த்தம் ஸேனேசோ  அவதரிஷ்யதி
இந்த ஸ்லோகத்தில் கலியுகத்தின் துவக்கத்தில் வைகாசி மாதம் விசாகத்தில் சேனை முதலியாரின் அம்சமான நம்மாழ்வார் அவதரிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மற்றொரு ஸ்லோகத்தில் நாதமுனிகள் அவதரித்து 4000 பிரபந்தத்தை பிரச்சாரப்படுத்துவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.தத: காலேன மஹதா வினஷ்டாம் புவி தத் க்ருதிம்
நாத நாமா முனிவர யோக ஜ்ஞானாத் அவாப்யசி

3) அவதரித்த காலம்

நாதமுனிகள் கி.மு 823ம் ஆண்டு அவதரித்து 918 மறைந்தார். அவர் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பது பல அறிஞர்களின் முடிவு. சோபகிருது வருஷம், ஆனி  மாதம், வளர்பிறை திரயோதசி திதியில், புதன்கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் நாதமுனிகள் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ரங்கநாதன். பரம வைதிகராக வேத சாத்திரங்களையும், இசையையும் கற்று கல்வி கேள்விகளில் வல்லவராக இருந்தார். யோக சாஸ்திரங்களில் (அஷ்டாங்க யோகத்தில்) நிபுணராகத் திகழ்ந்தார். கண்ணனை குலதெய்வமாகக் கொண்ட  குடும்பத்தில் அவதரித்த இவருடைய குலத்துக்கு சொட்டைக் குலம் என்று பெயர்.

4) காட்டுமன்னார்கோயில்

இவர் அவதாரம் செய்த காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது. சைவத்தில், நாயன்மார்களின் தேவாரத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூர் என்னும் ஊரும் காட்டுமன்னார் கோயிலுக்கு பக்கத்திலேயே உள்ளது. இந்த விஷயத்தில் சைவத் திருமுறைகளையும், வைணவ பிரபந்தத்தையும், கண்டெடுத்து, தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் பரப்பிய இரண்டு சமய அருளாளர்களும் அவதரித்த ஊர் என்ற பெருமை இந்த ஊருக்கு உண்டு.

5) வீரநாராயண ஏரி

வீரநாராயணபுரம் என்பதுதான் காட்டுமன்னார்கோயிலின்  சரித்திரப்  பெயர். ஒரு காலத்தில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காவிரியில் வெள்ள நீரை திசை திருப்பவே கொள்ளிடம் என்னும் நதி பிறந்தது. “காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம்” என்பதால் இந்த நதிக்கு கொள்ளிடம் என்று பெயர். வைணவத்தில் இந்த நதியை வடதிருக்காவேரி என்றும் வழங்குவார்கள்.

காவிரிக்கு வடக்கே காவிரியில்  இருந்து பிரியும் கொள்ளிடம் இருப்பதால் இதனை வட திருக்காவேரி என்பார்கள். இரண்டுக்கும் இடையில் இருக்கும் திருத்தலம் தான் திருவரங்கம். காவேரியில் வெள்ளம் வருகின்ற பொழுது கொள்ளிடத்தில் பெருக்கெடுத்து ஓடும் நீர் வீணே கடலில் கலந்து கொண் டிருந்தது. இந்த சமயத்தில் வீரநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட பராந்தக சோழனின் மூன்று புதல்வர்களில் மூத்தவனான ராஜா தித்யன், கடலில் வீணாகக் கலக்கும் நீரை தேக்கி பாசனத்திற்குப் பயன்படுத்த ஒரு பெரிய ஏரியை வெட்டி தன்னுடைய தந்தையின் பெயரை சூட்டினான். அதுவே வீரநாராயண ஏரி.

இன்றைக்கு வீராணம் ஏரி என்று வழங்கப்படு கிறது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவல் வீரநாராயண ஏரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அதன் கரையில் அமைந்த நகரம் தான் வீரநாராயணபுரம். இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அதில் திருமாலுக்கு ஒரு விண்ணகரை (ஆலயம்)  எடுத்தான் ராஜாதித்யன். அந்தத்  திருக்கோயில் தான் காட்டுமன்னார் கோயில். நாதமுனிகள் காலத்திலே தான் இந்த வீர நாராயண ஏரி ஏற்படுத்தப்பட்டது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்டசோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

6) வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்…

இந்த கோயிலின் சிறப்பைப் பார்ப்போம்.அருள்மிகு தேவி பூதேவி உடனாய அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் கோயில் பாஞ்சராத்ர ஆகம தென் கலை சம்பிரதாயத் திருக்கோயில். ஊரின் நடுவில் கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது. பெருமாள் கொள்ளை அழகோடு காட்சி தருவார். ராஜகோபாலன் என்று உற்சவருக்குத்  திருநாமம். தாயார் திருநாமம்: மகாலக்ஷ்மி, (மரகதவல்லி) தீர்த்தம் : வேதபுஷ்கரணி, (காவேரி நதி) தல விருட்சம்: நந்தியா வட்டை இந்தத் திருக்கோவிலில் யோக நரசிம் மரையும் வராகரையும் நாம் தரிசிக்கலாம். மதங்க மாமுனிவருக்குப் பெருமாள் சேவை சாதித்து அருளிய இடமாதலால் மதங்காஸ்ரமம் என்னும் பெயர்.

இது தவிர மன்யுஷேத்திரம், ஜல்லிகாவனம், சதூர் சாஸ்திரநிலையம் வீரநாராயணபுரம், வீரநாராயணபுர சதுர்வேதி மங்கலம், வீர நாராயணபுர விண்ணகரம் என்று பல பெயர்கள் உண்டு. பெருமாளுக்கு வலது பக்கம் தாயாரும், இருமருங்கிலும் ஆச்சாரியார்களான மந் நாத முனிகளும், ஆளவந்தாரும், முன் மண்டபத்தில் ராமானுஜரும், மந் மணவாளமாமுனிகளும், ஆழ்வார்களும்  சேவை சாதிக்குமாறு சந்நிதிகள் அமைந்திருக்கும். ஜடாவர்ம சுந்தர பாண்டியன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் பெருமாளின் பெயர் மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணதேவராயர் காலக் கல்வெட்டில் அழகிய மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

7) எம்பெருமானுக்கும் நமக்கும் இடையில் இருப்பவர்

வைணவ குரு பரம்பரை குறித்து கூரத்தாழ்வான் என்னும் ஆச்சாரியார் ஒரு அழகான ஸ்லோகம் செய்திருக்கிறார். இதை நாள்தோறும் வைணவர்கள் கோயில்களிலும் தங்கள் இல்லங்களிலும் சேவிக்காமல் பூஜையைத்  தொடங்குவதில்லை. வைணவ குருபரம்பரை குறித்து எக்காலத்துக்கும் பொருந்தும் படி சொல்லும் இரண்டு வரி ஸ்லோகம் இது.

லக்ஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்.

லக்ஷ்மி நாதனான மந் நாராயணனிடம் தொடங்கும் வைணவ குரு பரம்பரை அப்பெருமானை முதல் ஆச்சாரியனாக கொண்டுள்ளது. நாதமுனி, யாமுனமுனி என்கின்ற இரண்டு ஆச்சாரியர்களை மத்தியமாகக் கொண்டு, எங்கள் ஆச்சாரியன் வரை வருகின்றது. அந்த குரு பரம்பரையை நான் வணங்குகிறேன் என்பது இச்ஸ்லோகத்தின் பொருள். இதில் ஒரு நுட்பம் பாருங்கள். நாதமுனி யாமுன மத்யமம் என்று இடையில் வைத்திருக்கிறார். ஒரு கரையில் மந் நாராயணன். இன்னொரு கரையில் அவரவர்களுடைய ஆச்சாரியர்கள். நடுவில் நாதமுனி. இக்கரையில் இருந்து நம்மை அக்கரைக்கு அழைத்து செல்பவர் நாதமுனிகள் என்பதால் அவரை நடுவில் வைத்தார். நாம் இறைவனை அடைவதற்கு பாலமாக இருப்பவர் சுவாமி நாதமுனிகள் என்பதை ஒவ்வொருவரும் நினைக்கும்படி இந்த ஸ்லோகம் அமைந்திருக்கிறது.

8) நாதமுனிகளுக்கு நாலாயிரம் கிடைத்தது எப்படி?

சரி, ஆழ்வார்களின் நாலாயிரம் பாசுரங்களும் நாதமுனிகளுக்கு கிடைத்தது எப்படி? அந்தப்  பாசுரங்கள் எல்லாம் மறைந்துவிட்டது என்பதை எப்படி கண்டுபிடித்தார்? என்கிற கேள்வி எழுகிறது அல்லவா. ஆம் அது ஒரு சுவையான கதை. பரம வைதிகரான, யோகசாஸ்திரத்தில் வல்லவரான, வேதாந்த சாஸ்திரத்தில்  நிபுணரான நாதமுனிகள்  ஒரு நாள் சில யாத்திரிகர்கள், ஒரு அழகான தமிழ்ப் பதிகத்தை, தேனும் பாலும் அமுதமும் கலந்து தித்திக்கும்படியாக  இறைவன் திருமுன் பாடுவதைக் கேட்டார். அவர் மனது முழுக்க அந்தப் பாசுரமே நிரம்பியது. அந்தப் பாசுரத்தின் அமைப்பிலும், இசையிலும்,வார்த்தைகளிலும் அவருடைய மனம் லயித்தது. வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை. அவர்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பாசுரம் இது.

ஆரா அமுதே! அடியேன் உடலம்
நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய  உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்  செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!
கண்டேன் எம்மானே!

9) மயக்கம் தந்த ஆராவமுதம்

திருக்குடந்தை பெருமானுக்கு ஆராவமுதப்பெருமான் என்று பெயர். அத் திருத்தலத்து  பாசுரம் இது. ‘‘ஆராவமுதப் பெருமானே! உன்னிடத்தில் உள்ள அன்பால்  என் உடம்பு நீராகக் கரைந்து உருகுகிறது அப்படி என்னை உரு கும்படி செய்துவிட்டாய். பசுமையான வயல்களில் நன்கு விளைந்து  உயர்ந்த நெற்கதிர்கள் காற்றில் ஆடுவது உனக்கு கவரி வீசுவது போல் தெரிகிறது. செழுமையான நீர்வளம் நிரம்பிய திருக்குடந்தை நகரிலே இத்தனை அழகான,  உன் கிடந்த கோலம் என்னை மயக்குகிறது. ஆராவ முதே என்கின்ற முதல் வார்த்தையிலேயே மயங்கி விட்டார் நாதமுனிகள். அமுதம் என்கிற சொல் தமிழில் இருக்கிறது. ஆராவமுதம்  என்கின்ற சொல் புதுமையான சொல். ஆராவமுதன் என்று சொன்னால் ஆறிய அமுதம் என்று ஒன்று இருக்க வேண்டுமே”.

10) அமுதத்தில் இரண்டு வகை

அமுதத்தில் இரண்டு வகை உண்டு. 1.பாற் கடலைக் கடைந்தபொழுது அமுதம் கிடைத்தது. அது சாதாரண அமுதம். அந்த அமுதை கடைந்தெடுத்துத் தந்தானே பெருமான்,அவன் “ஆராவமுதன்”.  அமுதம் தந்த அமுதன். கடலில் கிடைக்கும் அமுதம் ஒரே சுவையுடன் தான் இருக்கும். ஆனால் எம்பெருமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையோடு இருப்பான்  என்பதால் ஆராவமுதன் என்று பெயர். வேதாந்த தேசிகன் ‘‘முனிவாகன போகம்” என்றொரு நூலில் ‘‘என் அமுதினைக் கண்ட கண்கள் என்கின்ற பதத்துக்கு உரை எழுதுகின்ற பொழுது” பாவம், தேவர்கள் பாற்கடலை கடைந்து, உப்புச்சாற்றைப்   பெற்றார்கள். உயர்ந்த அமுதமாகிய எம்பெருமான் எதிரில் இருந்தும் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு அந்த பேறுகிடைக்கவில்லை என்று எழுதுகிறார். இத்திருவாய்மொழியிலே நம் பூருவர்கள் (வைணவ ஆச்சாரியர்கள்) மிகவும்  ஈடுபட்டிருப்பார்கள். வைணவ உரையாசிரியர் நம்பிள்ளை இங்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறார்.

11) லோகஸாரங்க மஹாமுனிகள்

“உத்தரபூமியிலே (வடக்கே) லோகஸாரங்க மஹாமுனிகள் வசித்தபோது, இங்கிருந்து அங்கேறச்சென்ற ஒருவரிடம், ‘பிள்ளாய் தக்ஷிண பூமியில் (தமிழ்நாட்டிலே) விசேஷமென்ன?’ என்று கேட்க, ‘திருவாய் மொழி யென்றொரு பிரபந்தம் விசேஷம். சிஷ்டர்கள் அதை உச்சிமேல் வைத்துக் கொண்டாடிக்கொண்டு நின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குத் தெரிந்த பாட்டு சொல்லேன்’ என்ன, “ஆராவமுதே” என்கிற பாட்டைச் சொல்ல,வடநாட்டில் வாழ்ந்த லோக சரங்கர், ‘நாராயணாதி நாமங்கள் ஆயிரம் கிடக்க, இங்ஙனேயொரு சொற் பிரயோகமா?! இச்சொல் நடையாடுகிற தேசத்தேறப் போவோம்’ என்று அப்போதே புறப்பட்டுப்போந்தார்.” என்று வருகிறது. ஒரு தமிழ்ச் சொல்லில் மயங்கி, வடநாட்டிலிருந்து ஒருவர், பிரபந்தத்தைக் கற்றுக்கொள்ள, தென்னகம் வந்தார் என்கிற செய்தியின் ஆழத்தைப் பாருங்கள்.

12) மீதி பாசுரங்கள் எங்கே?

ஆராவமுதே என்ற சொல்தான் யோகீஸ்வரரான நாதமுனிகளையும் மயக்கியது.
தொடர்ந்து அவர்கள் அப்பதிகத்தின் அடுத்தடுத்த பாசுரங்களைப் பாடினார்கள். கடைசி பாசுரம்;

உழலை என்பின்  பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே

பாசுர கடைசி வரி அவருடைய சிந்தனையைத்  தூண்டியது. பாடி முடித்தவுடன் அவர்களிடம் சென்று விசாரித்தார். “இந்தப் பதிகத்தில் கடைசி வரி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் என்று முடிகிறதே, அப்படியானால் ஆயிரம் பாசுரங்களில் இது பத்து பாசுரம் என்று அல்லவா ஆகிறது. மீதியுள்ள பாசுரங்கள் உங்களுக்கு வருமா? அதனை கேட்பதற்கு எனக்கு ஆவலாக இருக்கிறது” என்று சொல்ல, அவர்கள் “இந்தப் பத்துப் பாசுரங்களை மட்டுமே நாங்கள் அறிவோம். மற்றப் பாசுரங்கள் எங்களுக்குத் தெரியாது” என்று சொல்ல, அடுத்த நிமிடம் நாதமுனிகள், மற்ற எல்லாக் காரியங்களையும் மறந்தார். இந்த ஆயிரம் பாசுரங்களையும் கண்டு பிடித்தாக வேண்டும் என்கிற ஒரே நோக்கில் பலரையும் சந்தித்து விசாரித்தார். ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்று விசாரித்தார்.

13) தமிழைத் தேடிய  தளராத முயற்சி

கடைசியில் ஆழ்வார்  திருஅவதார  பிரதேசமான திருக்குருகூர் என்று சொல்லப்படும் ஆழ்வார்திருநகரி சென்றார். அங்கேயும் அவருக்கு ஆயிரம் பாசுரங்கள்  கிடைக்கவில்லை. ஆனால் அங்கே அவருக்கு வேறு ஒரு பிரபந்தம் கிடைத்தது. “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்கின்ற அந்த பிரபந்தம் மதுரகவியாழ்வாரால்  இயற்றப்பட்டது. மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடர். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களையும் அவர்தான் எழுதினார். அந்த மதுரகவியாழ்வார் வம்சத்தில் வந்த பராங்குச தாசர் என்கின்ற பெரியவர் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் போற்றி எழுதிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தை நாதமுனிகளுக்கு அளித்தார். “இதை பன்னீராயிரம் முறை நீங்கள் தொடர்ந்து சொல்லி வந்தால், நம்மாழ்வார் உங்களுக்குக்  காட்சி தருவார்” என்கின்ற செய்தியை சொன்னார்.

14) உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல்

நாதமுனிகள் எப்படியாவது ஆயிரம் பாசுரங்களையும் பெற வேண்டுமே என்கிற ஆசையில், திருக்குருகூர் புளிய மரத்தடியில் ஆழ்வார் திருமுன் மிகுந்த நம்பிக்கையோடு கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தைப் பன்னீராயிரம் முறை பாட ஆரம்பித்தார். உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் ஒரே நோக்கத்தோடு இந்தப் பாசுரங்களை ஓத ஆரம்பித்தார். அவருடைய நம்பிக்கை பலித்தது. நம்மாழ்வார் அவருக்குக் காட்சி தந்தார். அவருக்கு திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களையும் அளித்ததோடு மற்ற ஆழ்வார்களின் மூவாயிரம் பாசுரங்களையும் அளித்தார். ஆயிரம் தேடிப்போனவருக்கு நாலாயிரம் கிடைத்தது. நாதமுனிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

15) எப்படித் தொகுத்தார்?

ஆழ்வார்களின் அருந்தமிழ்ப் பாசுரங்களான நான்காயிரம் பாசுரங்களும் நாதமுனிகளுக்கு கிடைத்துவிட்டது. இதைத் தொகுத்து தமிழ்கூறு நல்லுலகத்திற்கு முறையாகக் கொடுக்க வேண்டும் அல்லவா. ஆழ்வார்களின் பாசுரங்களைத்  தொகுக்கும் பொழுது இரண்டு விதமான முறைகளைச்  சொல்வது வழக்கம். ஒன்று அவதார கிரமம் என்பார்கள். சகல வேத சாரமான காயத்ரியின் அட்சரங்கள் 24க்கு இணையாக 12 ஆழ்வார் களின் பிரபந்தங்கள் 24. இதில் முதன்முதலாக அவதரித்தது முதல் ஆழ்வார்கள்  திருக்கோவிலூரில் அருளிய முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி. இதற்குப்பிறகு திருமழிசை ஆழ்வார் அருளிய இரண்டு பிரபந்தங்கள். அதற்குப் பிறகு நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்கள். இந்த வரிசையில் நிறைவாக திருமங்கையாழ்வாரின் ஆறு பிரபந்தங்கள். இந்த வரிசைக்கு அவதார கிரமம் (பிரபந்தங்கள் அவதரித்த வரிசை) என்று பெயர்.

16) ஓதும் வரிசைமுறை

இன்னொரு முறை உண்டு. அதற்கு அனுஷ்டான கிரமம் என்று பெயர். அதாவது ஆலயங்களிலும், வைணவ இல்லங்களிலும் பிரபந்தங்களை ஓதும் வரிசைமுறை. இந்த முறையை நாதமுனிகள் எப்படி செய்தார் என்பது மிக முக்கியமான செய்தி. ஆழ்வார்களின் தமிழ் வேதத் தமிழ். வேதம் நான்கு. வேதத்தின் அங்கங்கள் ஆறு. உபாங்கங்கள் 14. நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களை நான்கு வேதங்களுக்கு நிகராகவும், திருமங்கையாழ்வாரின் ஆறு பிரபந்தங்களை ஆறு அங்கங்களாகவும், மற்றைய ஆழ்வார்களின் பிரபந்தங்களை உபாங்கங்களாகவும் தொகுத்தார். நாதமுனிகள் நான்காயிரம் பாசுரங்களையும் தனித்தனியாகப் பிரித்து முதல் ஆயிரம், இரண்டாவது ஆயிரம், மூன்றாவது ஆயிரம், நான்காவது ஆயிரம் என்று வகைப்படுத்தினார்.

முதல் ஆயிரத்தில் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு தொடங்கி கண்ணிநுண்சிறுத்தாம்பு வரை உள்ள பத்து பிரபந்தங்களை அமைத்தார். இரண்டாவது ஆயிரத்தில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் ஆகிய மூன்று பிரபந்தங்களை அமைத்தார். மூன்றாவது ஆயிரம் முழுவதுமாக திருவாய்மொழியை அமைத்தார். நான்காவது ஆயிரத்தில் மற்ற பிரபந்தங்களை அமைத்தார். இவைகள் முதல் ஆயிரம், இரண்டாயிரம் என்று சொன்னாலும், ஒவ்வொன்றிலும் துல்லியமாக ஆயிரம் பாசுரங்கள் இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

17) மூன்று மந்திரங்கள் அடிப்படையில் நாலாயிரம்

இந்த அடைவை, எதன் அடிப்படையில் நாதமுனிகள் செய்தார் என்பது மிக மிக முக்கியமான விஷயம். வைணவ சமய மரபில், சகல வேதங் களின் சாரமாக 3 முக்கியமான மந்திரங்களைச் சொல்வார்கள். வைணவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய ஆச்சாரியாரிடமிருந்து அவசியம் பெற வேண்டியது. அதில் முதல் மந்திரம் திருமந்திரம். அஷ்டாக்ஷர மந்திரம். அதற்கடுத்த மந்திரம் 25 எழுத்துக்கள், இரண்டு பதங்களுடைய மந்திர ரத்ன மானத்வய மந்திரம். மூன்றாவது மந்திரம் சரம ஸ்லோகம் என்று அழைக்கப்படும் வராக சரம ஸ்லோகம், ராம சரம ஸ்லோகம், கண்ணன் அருளிய சரம ஸ்லோகம். இந்த தாத்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஆழ்வார்களின் பாசுரங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்தார்.

18) பிரணவம் (ஓம்)

முதல் மந்திரம் திருமந்திரம். அதில் மூன்று பதங்கள் உண்டு. ஓம் என்கிற பிரணவம். நம என்னும் மத்திம பதம். நாராயணாய என்னும் நிறைவுப் பதம். ஓம் எனும் பதத்தின் சாரமாக, திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளி எழுச்சி, அமலன் ஆதிபிரான் ஆகிய ஒன்பது பிரபந்தங்களையும் முதல் ஆயிரத்தில் வரிசையாக வைத்தார். திருக்கோயில்களிலும் சரி, இல்லங்களிலும் சரி, வேதத்தைச் சொல்லும்பொழுது ஓம் எனும் பிரணவத்தை சொல்லிவிட்டு தான் சொல்வார்கள். அதைப்போல தமிழ் வேதமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களைத்  தொடங்குகின்ற போது திருப்பல்லாண்டு பிரபந்தத்தை சேவித்துத்தான் தொடங்குவார்கள்.
முடிக்கும் போதும் பல்லாண்டு பாடி முடிப்பார்கள். காரணம் திருப்பல்லாண்டு என்பது பிரணவம்.

19) கண்ணிநுண்சிறுத்தாம்பு

அடுத்த பதம் நம: என்கின்ற பதம். ந என்றால் இல்லை என்று அர்த்தம். ‘‘ம” என்றால் நான் (என்னுடைய)என்று அர்த்தம். நான் எனக்கு உரியவன் இல்லை என்கின்ற விளக்கமாக, மதுரகவி ஆழ்வார் அருளிய கண்ணி நுண்சிறுத்தாம்பு என்கின்ற பிரபந்தத்தை முதல் ஆயிரத்தில் சேர்த்தார் நாதமுனிகள். திருமந்திரத்தின் முதல் இரண்டு பதங்களுக்கு முதல் ஆயிரத்தைக் கொடுத்த நாதமுனிகள், திருமந்திரத்தின் மூன்றாவது பத மாகிய ‘‘நாராயணாய” என்ற பதத்துக்கு விளக்கமாக திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமொழி 1084 பாசுரங்களையும், திருக்குறுந் தாண்டகம் 20 பாசுரங்களையும், திருநெடுந்தாண்டகம் முப்பது பாசுரங்களையும் சேர்த்து 1134 பாசுரங்களை இரண்டாவது ஆயிரமாக வைத்தார்.

20) திருவாய்மொழி

மூன்றாவது ஆயிரமாக நம்மாழ்வார் அருளிய சாமவேத சாந்தோக்ய உபநிஷத் சாரமாகிய த்வய மந்திரத்தின் விரிவாகிய திருவாய்மொழி 1102 பாசுரங்களை மூன்றாவது ஆயிரமாக வைத்தார். மீதி இருக்கக்கூடிய ஆழ்வார்களின்

10 பிரபந்தங்களை (817 பாசுரங்களை) இயற்பா என்று தலைப்பிட்டு நான்காவது ஆயிரமாக வைத்தார். இந்த வரிசைக்கு அனுஷ்டான கிராமம் என்று பெயர்.

21) பண்ணும் தாளங்களும்

நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களை முத்தமிழ் எனும் சிறப்போடு தொகுத்தார். இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழும் ஆழ்வார் களின் பாசுரங்களில் காணலாம். அது அனுஷ்டானத்தில் உள்ளது. நாதமுனிகள் இசையில் வல்லவர். குறிப்பாக பண்ணிசையில் வல்லவர். ஆழ்வார்களின் பாசுரங்களை இயல் தமிழாகவும் இசைத் தமிழாகவும் விரித்தார். 4 ஆயிரத்தில் முதல் 3 ஆயிரம் பாசுரங்களை இசைத் தமிழாகவும், நான்காவது ஆயிரமான இயற்பா 10 பிரபந்தங்களை இயற்றமிழாகவும் அமைத்தார்.

ஆழ்வார்களின் பாசுரங்களில் வரும் ‘‘பாவின் இன்னிசை,” ‘‘பண்ணார் பாடல் பத்தும்”, ‘‘இன்னிசையால் பாடி”, ‘‘கலியன் ஒலி மாலை” ‘‘பாட்டினால் கண்டு வாழும்” போன்ற சொற்றோடர்களை வைத்துக் கொண்டு, இவை இசைத்தமிழ் பாசுரங்கள் என்பதை கண்டு கொண்டு, அதற்கு முறையாக தமிழ்ப் பண்களை அமைத்தார் நாதமுனிகள். பண்களோடு அதற்குரிய தாளங்களையும் அமைத்துக் கொடுத்தார். இதை பின்வரும் பாடலால் அறியலாம்.

காளம் வலம் புரி யன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை யின்னிசைதந்த வள்ளல்
மூளும் தவ நெறி மூட்டிய நாத முனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கு யார் நிகர் நானிலத்தே.

22) பாசுரங்கள் மறுபடி

அழியாமல் காப்பாற்ற செய்த ஏற்பாடுநான்காயிரம் பாசுரங்களையும் பெற்ற நாதமுனிகளுக்கு ஒரு சிந்தனை வந்தது. ஆழ்வார்கள் காலத்திற்குப்பின் ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே இந்தப் பாசுரங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதே, பல திருத்தலங்களில் இப்பாசுரம் ஓதப்படாமல் நின்றுவிட்டதே.. மறுபடியும் இதைத்  தேடிக் கண்டுபிடித்துத் தொகுப்பதற்கு, படாதபாடு பட வேண்டியதாயிற்றே. எனவே, இதை இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் பாசுரங்கள் மறுபடியும் வழக்கொழிந்து போய்விட்டால் என்ன செய்வது? என்று நினைத்தார்.

அதனால் அவர் சில முக்கியமான திட்டங்களை உடனே நிறைவேற்ற முயன்றார். தன்னுடைய மருமக்களாகிய மேலை அகத்தாழ்வான், கீழை அகத்தாழ்வான் என்ற இருவருக்கும் நான்காயிரம் பாசுரங்களையும் இசையோடு சொல்லித் தந்து, அதனை ஒரு பெரிய சீடர் குழாம் அமைத்து, எல்லாப் பகுதிகளிலும் உள்ள வைணவ அடியார்களுக்கு கற்பித்து பரப்பவேண்டும் என்று நியமித்தார். அங்கிருந்துதான் வைணவ சீடர் பரம்பரை வழிவழியாக, பரம் பரையாக, இன்று வரை நிலைபெற்று இருப்பதாக, உருவானது.

23) கோயில்களில் தமிழ் வேதம்

இரண்டாவதாக திருமால் திருத்தலங்களில் நடைபெறும் எல்லா உற்சவங்களிலும், தமிழ்ப் பாசுரங்கள் முறையாக ஓதப்பட வேண்டும் என்ற வழி முறையை ஏற்படுத்தினார். திருமால் ஆலயங்களில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜையிலும் இன்னின்ன பாசுரங்கள் ஓதப்பட்டு, வழிபாடு நடத்த வேண்டும் என்கின்ற ஆராதனை கிரமத்தை ஏற்படுத்தியதன் மூலமாக, இந்தியாவிலுள்ள எல்லா திவ்ய தேசங்களிலும், கருவறை வழிபாட்டில் தமிழ்ப் பாசுரங்கள் நிலைபெற்றது. இந்தச் சாதனையை செய்து தமிழை வளர்த்தவர் நாதமுனிகள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

24) அரையர் சேவை

இசைக் கலையையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காக அவர் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் அரையர் சேவை. அரையர் என்றால் தலைவன் என்று பொருள்.  திருமாலுக்கு அரையன் என்ற பெயர் உண்டு. ‘‘அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை” என்பது திருமங்கை யாழ்வார் பாசுரம். அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப் படுகின்றனர். முக்கியமான உற்சவங்களில் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் ஓதப்பட வேண்டும் என்பதற்காகவே, இம்மூன்று கலைகளையும் அறிந்த, அரையர் மரபை நாதமுனிகள் தன் காலத்தில் உண்டாக்கினார்.

25) முத்தமிழ்ச் சேவை

திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையும் தனித்துவமாக அணிந் திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாட்டுடன் அமைந்திருக்கும். அவர்களுக்கு பரம்பரையாக வந்த கைத்தாளமும் இத்தகு அரிய கலை வைணவக் கோயில் களில் மட்டும் காணப்படும். இன்று திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் தென்கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. மார்கழி மாத பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களில் அரையர் சேவை சிறப்பாக நடைபெறுகிறது.

26) அரையர் சேவையின் சிறப்பு

உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாசுரத்தைப் பாடுவது முதலாவதாகவும், பாடப்பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக்கிக் கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே அரையர்கள் தமிழ்மொழியிலும், பிரபந்தத்திலும் மிகுந்த புலமை மிக்கவர்கள். அவர்கள் பாசுரங்களுக்கு சொல்லும் உரை தனியானது. தம்பிரான்படி வ்யாக்யானம் என்றுபெயர். ஓரங்க நாடகமாக அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக மாறி அபிநயம் செய்வதும், காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவதும், பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அபிநயம் செய்வதும் இக்கலையில் காணலாம். இதற்கு முறையான பயிற்சி உண்டு.

27) நாதமுனிகள் ஏற்படுத்திய தமிழ்விழா

மந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ராமாயணத்தை ரங்கத்தில் தாயார் சந்நதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றினார். நியாயதத்வம், புருஷநிர்ணயம் மற்றும் யோகரஹஸ்யம் என்று மூன்று நூல்களை இயற்றினார். நாதமுனிகள் பல்வேறு ஆலயங்களில் திருப் பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக திருவரங்கத்தில் அவர் செய்த தொண்டுகள் அதிகம். திருமங்கை ஆழ்வார் காலத்தில் மார்கழி மாதம் பத்து நாட்கள் வளர்பிறை ஏகாதசி தொடங்கி நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு தனிவிழா, தமிழ்விழாவாக எடுக்கப்பட்டது. அதுவும் நின்று போனது. நாதமுனிகள் இந்த விழாவை மறுபடியும் ஏற்படுத்தியதோடு, மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களை இசைப்பதற்கு மேலும் 10 நாட்கள் விழா ஏற்படுத்தினார். இயற்பாவுக்காக ஒரு நாள் ஏற்படுத்தினார்.

இருபத்தோரு நாட்கள் இந்த உற்சவத்தை மாற்றியமைத்தார். இது இன்றைக்கு திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாள், இயற்பா நாள் என்று, ஆழ்வார்கள் பாசுரங்கள் முற்றோதல் திருநாள்களாக நடைபெறுகிறது. இதற்கு இராப்பத்து, பகல்பத்து திருநாள் என்று பெயர். நாதமுனிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த முறையானது இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. இது எல்லா ஆலயங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட ஏற்பாடாக இருக்கிறது.

28) நாதமுனிகளின் சீடர்கள்

நாதமுனிகளின் சீடர்கள் பலர்.
1. உய்யக்கொண்டார் (திருவெள்ளறை புண்டரீகாட்சன்)
2. குருகைக்காவலப்பன்
3. கீழையகத்தாழ்வான்
4. மேலையகத்தாழ்வான்
5. திருகண்ணமங்கையாண்டான்
6. பிள்ளை கருணாகரதாசர்
7. நம்பி கருணாகரதாசர்
8. ஏறுதிருவுடையார்
9. வானமாமலை தெய்வநாயக ஆண்டான்
10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை
11. சோகத்தூர் ஆழ்வான்

இந்தச் சீடர்களின் தூய தமிழ் பெயர்களைப் பார்த்தாலே நாதமுனிகளின் காலத்தில், தமிழ் எத்தனை அழகாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த சீடர்கள் ஒவ்வொரு வருடைய வரலாறும் சுவை மிகுந்தது. சிறப்பு வாய்ந்தது.

29) யோகமா, வேதாந்தமா?

நாதமுனிகள் தம்முடைய அந்திம திசையில், (இறுதிக்காலத்தில்) தனக்கு முக்கியமாக விளங்கிய இரண்டு சீடர்களான குருகை காவலப் பனையும் புண்டரீகாட்சரையும்  அழைத்து, ‘‘என்னிடம் இறைவனையே சாட்சாத்காரம் செய்யக்கூடிய யோகக் கலையும், பகவானைக் காட்டும் ஞானத்தை விளக்கும் தமிழ் வேதமும் மற்ற வேதாந்த விஷயங்களும் இருக்கின்றன. இதில் உங்களுக்கு எதில் ஆர்வமோ அதனை நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன் என்று கேட்க,. குருகைக்காவலர் எனக்கு யோகத்தையே உபதேசியும்” என்று வாங்கிக் கொண்டார்.

அவரிடம், “என் பேரன் ஆளவந்தார் வருவான். அவனுக்கு யோக வித்தையை நீ உபதேசிக்க வேண்டும்” என்று கூறிய நாதமுனிகள் அவர் விரும்பிய யோகக் கலையைக் கற்றுத் தந்தார். புண்டரீகாட்சரிடம் “யோகமா, வேதாந்தமா?” என்று நாதமுனிகள் கேட்டார். மக்களை அறியாமைப் படுகுழியிலிருந்து விடுவித்து இறைவன் திருவடியில் சேர்ப்பிக்கும் “திவ்யப் பிரபந்த ஞானமே வேண்டும்” என்று கேட்டார். அவர் பதிலில் மகிழ்ந்த நாதமுனிகள் மக்களை உய்விக்கவந்த `உய்யக் கொண்டாரே’ என்று அழைத்தார், அவருக்கு நாலாயிரமும் அர்த்த விசேஷங்களோடு உபதேசித்தார்.

30) எங்கே என் இராமன்?

நாதமுனிகளின் இறுதிக்காலம் வியக்கத்தக்கது. ஒரு சமயம் வீரநாராயணபுரம் அருகில் இருந்த காட்டில் வேட்டையாடிவிட்டு அரசன், அரசி, அமைச்சர் வேலையாட்களுடன் நாதமுனிகளைப் பார்க்க வந்தபோது நாதமுனிகள் யோக நிலையில் இருந்தார். அவர் பெண்ணிடம் தான் வந்ததாகச் சொல்லிவிட்டு அரசன் சென்றான். யோகநிலை விட்டு மந்நாத
முனிகள் எழுந்ததும் கையில் வில், அம்போடு, இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் ஒரு குரங்கும் வந்ததாக அறிந்தார். ராமனே தம்பி இலக்குவன், சீதாபிராட்டி, ஆஞ்சநேயருடன் வந்திருக்கிறார் என்று பக்திப் பிரேமையால் அவர்கள் போன திசையில் ஓடினார்.

அவர்கள் எந்த திசையில் சென்றார்கள் என்று விசாரித்துக் கொண்டு அவர்களை யாராவது கண்டீர்களா என்று கேட்டுக் கொண்டே ஓடினார். அப்பொழுது அந்த குரங்கின் காலடி பட்ட கிராமம் குரங்கடி (குறுங்குடி) என்ற பெயரிலும், பெண் தலையிலிருந்து ஒரு புஷ்பம் விழுந்த ஊர் பூ விழுந்த நல்லூர் என்ற பெயரிலும், இந்த பக்கம் தான் அவர்கள் போனார்கள் என்று மக்கள் கண்டு சொல்லிய ஊர் கண்டமங்கலம் என்கின்ற பெயரிலும் இப்பகுதியில் வழங்குகிறது.

இப்படி அவர்களைத் தேடி ஓடிய நாதமுனிகள் நிறைவாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு முன்னால் ஒரு இடத்தில், மூர்ச்சையாகி, திருநாடு அலங்கரித்துவிட்டார். அவர் மூர்ச்சையாகி விழுந்த இடம் சொர்க்க பள்ளம் என்று வழங்கப்படுகிறது. `வைகுந்தம் சென்றேனும் அவர்களைக் கண்டு வருவேன்’ என்றே மூச்சை விட்டாராம். 917ல், தாது ஆண்டு, மாசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி அன்று திருநாடு அலங்கரித்தார்.

மீன்சுருட்டியிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு முன்னால் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் செம்போடை என்ற இடத்தில் இறங்கினால், இடது பக்கம் நாதமுனிகள் திருவரசு, திருக்கோயில் வளாகமாக அமைந்திருக்கிறது. அதைப் போலவே அவருடைய அவதாரத் தலம் காட்டுமன்னார் கோயிலுக்கு (3கி.மீ) அருகில் குப்பங்குழி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

முடிவுரை

நாதமுனிகளின் பணிகளைச் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. வைணவத் தமிழை, வையகம் முழுவதும் பரப்பிய, மகத்தான நாதமுனிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோம். அவருடைய 1200 ஆவது அவதார நாளை (அடுத்த வருடம் ஆனி மாதம், அனுஷ நட்சத்திரம்) தமிழகம் முழுவதும் பெரிய அளவில் கொண்டாடுவோம்.