தருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்

தருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்


தருமபுரியில் பாலியல் வன்கொடுமையில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைதான நிலையில், தேடப்பட்ட மற்றொரு நபர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தருமபுரி பாப்பிரெட்டிபட்டியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தீபாவளிக்காக தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 5 நாட்களுக்குப் பிறகு மாணவி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இதனையடுத்து, தலைமறைவான இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், மெத்தனமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்தக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து மாணவி பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சதீஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ட ரமேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.