தமிழ் கடல் அலை நெல்லை கண்ணன் உடல் தகனம்.. இலக்கியவாதிகள் கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி:  மறைந்த தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல் இறுதி அஞ்சலிக்குப் பிறகு திருநெல்வேலி கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் அறிஞரும், பேச்சாளரும், காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவால் நெல்லையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சிகள், ஆன்மிகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்தவர் நெல்லை கண்ணன், நகைச்சுவையாகவும், நெல்லை தமிழில் அற்புதமாகவும் பேசக் கூடியவர்.

நெல்லை கண்ணன் அவர்களின் மூத்த மகன் சுரேஷ் கண்ணன் என்ற சுகா திரைப்பட இயக்குநராகவும், மற்றொரு மகன் ஆறுமுகம் கண்ணன் சென்னையில் பணிபுரிந்தும் வருகின்றனர். இது தவிர 2 பெண், ஆண் வளர்ப்பு மகனும் உண்டு. நெல்லை கண்ணன் உடல் இறுதி அஞ்சலிக்குப் பிறகு திருநெல்வேலியில் உள்ள கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.