ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தில் 6 பேர் மரணம் – காவல்துறை தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இன்று காலைமுதலே அவர்களின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததை கவனித்த அக்கம்பக்கத்தினர், இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளித்திருக்கிறார்கள்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறை, வீட்டின் உள்ளே சென்ற போது 6 பேரின் சடலங்களை கண்டனர். தொடர்ந்து அவர்கள் உடல்களை கைப்பற்றி, மரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.இறந்தவர்கள் தொடர்பாக காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில்   “இறந்தவர்கள் சகினா பேகம், அவரின் இரண்டு மகள்கள் நசீமா அக்தர், ரூபினா பானு, மகன் ஜாபர் சலீம் மற்றும் இரண்டு உறவினர்கள் நூருல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது என அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா எனப் பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு தெரியவரும். இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.