சீமானின் கோபம் நியாயமானதுதான்: திருமாவளவன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியது தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சீமானின் கோபம் நியாயமானதே என்றும் ஆனால் அதே நேரத்தில் புலிகள் நிலைப்பாடு குறித்த கருத்தை சொல்லும் போது வார்த்தைகளை கவனமாக இருக்க வேண்டும் என்றும் விடுதலைசிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது

ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள், ஒப்புக் கொண்டதில்லை. அதேபோல இந்திய அரசாங்கத்தை அல்லது காங்கிரஸ் கட்சியை, மாவீரர் நாள் கூட்டங்களில் ஒருபோதும் பிரபாகரன் விமர்சனம் செய்ததில்லை. ராஜீவ் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என்பதை ஏற்கெனவே பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தப் பழி விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களின் கருத்து. பிரபாகரனின் கருத்தும் கூட. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு அல்லது அரசியல் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்வது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பற்று மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது.

இந்திய அமைதிப்படை மீது அனைவருக்குமே அதிருப்தி உண்டு. ஐ.பி.கே.எப்.யை அனுப்பச் சொன்னதும் தமிழ்நாட்டு மக்கள், ஈழமக்கள். ஆனால் அமைதிப்படை போன பிறகு அதன் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. முதன்முதலாக இந்திய அமைதிப் படையை எதிர்த்து உயிர் பலியானவர் தோழர் மாலதி. இந்திய அமைதிப் படையின் மீது சிங்களர்களுக்கும் கோபம் இருந்தது. தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. அந்த வகையில் சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான். ஆனாலும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள், பிரபாகரன் கூட ஒரு நாளும் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறியதில்லை. இந்திய அரசை பகைத்துக் கொள்ளாத ஒரு அணுகுமுறையைதான் அவர் கையாண்டார்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Leave a Reply