சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA, அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து.

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பினர் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டிய சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் மூன்றாம் தரப்பினர் தலையீடு என்பது FIFA விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தல் கடந்த 18 மாதங்களாக நடத்தப்படாமல் இருப்பதே இந்த சர்ச்சைக்கு ஆரம்புள்ளியாக அமைந்துள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பிரபுல் படேல் கடந்த 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இவரது பதவி காலம் கடந்த 2020 டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. பதவிக்காலம் முடிந்தும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி பதவி விலகாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதை கவனத்தில் எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம் பிரபுல் படேலை பதவியில் இருந்து நீக்கியதுடன், அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் நீக்கியது.மேலும் தேர்தலை நடத்துவதற்காக புதியதாக 3 பேர் கொண்ட கமிட்டியை நியமித்தது.மேலும் இந்த குழுவானது இந்திய கால்பந்து கூட்டமைப்பின் விதிகளை மாற்றம் செய்ய முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில கால்பந்து கூட்டமைப்பும், பிரபுல் படேலும் ஃபிபாவுக்கு கடிதம் எழுதினர். இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையில் தனிநபர்களின் சேர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பிபா கடிதம் எழுதியது. இதற்கிடையில் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் FIFA அறிவித்துள்ளது.

இந்த தடையினால் இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை முதல் முறையாக இந்தியாவில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.